கிருதி

கிருதி இசை வடிவங்களில் மிகச் சிறந்ததும் அரங்கிசை வகைகளில் மிக முக்கியமானதும் ஆகும். தற்காலத்து அரங்கிசை நிகழ்ச்சிகளில் கிருதிகளைப் பாடுவதற்கு அல்லது இசைப்பதற்குத் தான் அதிகமான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் கிருதிகளை அதிகம் பாடும் போது அவற்றைப் பாடுவோர்க்கும், அவற்றைக் கேட்போருக்கும் அரியதோர் இசையின்பம் ஏற்படுகின்றது. பல இசைவாணர்களும் கிருதிகள் வழியாகப் பல அரும்பெரும் கருத்துக்களையும் தங்கள் உள்ளத்தில் எழுந்த உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தியுள்ளனர். கிருதிகளில் கற்பனை சுரம், நிரவல் முதலியன பாடுவதற்கு ஏற்ற இடங்கள் உள்ளன.

கிருதிகள் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்னும் பகுதிகளைக் கொண்டவை. சில கிருதிகளில் அனுபல்லவி இருக்காது. அப்போது சரணத்திற்கு "சமஷ்டி சரணம்" என்று பெயர். சில சமயங்களில் சரணங்கள் ஒன்றுக்கு மேற்பட்டவையாகவும், ஒரே தாதுவால் (சுரக் கோர்வை) அல்லது வெவ்வேறு தாதுக்களால் அமைக்கப்பட்டோ இருக்கலாம். சாகித்தியம் இறைவனை பற்றியதாகவோ, உலகியலைப் பற்றியதாகவோ இருக்கலாம். கிருதியின் எல்லை 1 ½ ஸ்தாயி முதல் 2 ஸ்தாயி வரை உள்ளது. அனாகத, அதீத எடுப்புக்கள் கையாளப்படுகின்றன. கிருதிகள் எல்லா விதமான இராகங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. இராகங்களின் வடிவம் அழிந்து போகாமல் இருப்பதற்குக் கிருதிகள் தான் காரணம் என்று கருதப்படுகிறது.

கிருதிகளை இயற்றியோர்

  1. முத்துத் தாண்டவர்.
  2. தியாகராஜர்.
  3. சியாமா சாஸ்திரிகள்.
  4. பாபநாசம் சிவன்
  5. முத்துசுவாமி தீட்சிதர்.
  6. சுப்பராய சாஸ்திரி
  7. மைசூர் சதாசிவராயர்
  8. வீணை குப்பையர்
  9. சுவாதித் திருநாள் மகாராஜா
  10. பட்டணம் சுப்பிரமணிய ஐயர்

சமுதாயக் கிருதிகள் (தொகுதிக் கிருதிகள்)

ஒரு குறிப்பிட்ட பொருளைப் பற்றி வரைமுறையாக இயற்றப்பட்ட கிருதிகளின் தொகுப்பைச் சமுதாயக் கிருதிகள் என்று கூறுவர். எடுத்துக்காட்டுக்கள் :

இல இயற்றியோர் கிருதிகளின் பெயர் பொருள்
1. தியாகராஜர் பஞ்சரத்னம் நாட்டை, கௌளை, ஆரபி, சிறீ, வராளி ஆகிய 5 கன இராகங்களில் அமைந்தவை.
2. கோபாலகிருஷ்ணபாரதியார் பஞ்சரத்னம் நாட்டை, கௌளை, ஆரபி, சிறீ, வராளி ஆகிய 5 கன இராகங்களில் அமைந்தவை.
3. தியாகராஜர் கோவூர்ப் பஞ்சரத்னம் கோவூர் சுந்தரேச சுவாமியைப் பற்றிய 5 கிருதிகள்.
4. தியாகராஜர் திருவொற்றியூர் பஞ்சரத்னம் திருவொற்றியூர் திரிபுர சுந்தரி மீது 5 கிருதிகள்.
5. முத்துசுவாமி தீட்சிதர் கமலாம்பாநவாரணம் கமலாம்பிகை மீது 9 கிருதிகள்
6. முத்துசுவாமி தீட்சிதர் அபயாம்பா நவாரணம் அபயாம்பிகை மீது 9 கிருதிகள்
7. முத்துசுவாமி தீட்சிதர் சிவா நவாரணம் சிவன் மீது 9 கிருதிகள்
8. முத்துசுவாமி தீட்சிதர் பஞ்சலிங்கஸ்தல கிருதிகள் காஞ்சிபுரம், திருவானைக்கால், திருவண்ணாமலை, காளகஸ்தி, சிவசிதம்பரம்: பிரிதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் ஆகிய 5 லிங்கங்களைப் புகழ்ந்து கிருதிகள்.
9. முத்துசுவாமி தீட்சிதர் நவக்கிரக கிருதிகள் சூரியன், சந்திரன், அங்காரகன், புதன், பிரகஸ்பதி, சுக்ரன், சனீஸ்வரன், ராகு, கேது ஆகிய 9 கிரகங்களைப் பற்றி.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.