பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு
பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு (பிரெஞ்சு மொழி: FIFA - Fédération Internationale de Football Association) என்பது கழகக் காற்பந்தாட்ட விளையாட்டுக்கான உலகம் தழுவிய கட்டுப்பாட்டு அமைப்பு ஆகும். இது பொதுவாக "ஃபிஃபா" என அறியப்படுகிறது. இப்பெயர், இக் கூட்டமைப்பின் பிரெஞ்சு மொழிப் பெயரான "Fédération Internationale de Football Association" என்பதன் சுருக்க வடிவம் ஆகும். இதன் தலைமையகம், சுவிட்சர்லாந்தின் தலைநகரமான சூரிச் நகரில் அமைந்துள்ளது. உலக அளவில் நடைபெறும் முக்கியமான காற்பந்துப் போட்டிகளை ஒழுங்கு செய்து கட்டுப்படுத்தும் பொறுப்பு இவ்வமைப்பைச் சாரும். இவற்றுள் முக்கியமானது "உலகக்கோப்பை காற்பந்து" (FIFA World Cup) ஆகும். இது 1930 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இக் கூட்டமைப்பில் 211 தேசியக் காற்பந்தாட்டக் கழகங்கள் உறுப்பினராக உள்ளன.
![]() | |
குறிக்கோள் உரை | விளையாட்டுக்காக. உலகுக்காக. (For the Game. For the World) |
---|---|
உருவாக்கம் | மே 21, 1904 |
வகை | விளையாட்டுக் கூட்டமைப்பு |
தலைமையகம் | சூரிச், சுவிட்சர்லாந்து |
உறுப்பினர்கள் | 211 தேசியக் கழகங்கள் |
ஆட்சி மொழி | ஆங்கிலம், பிரெஞ்சு, செருமன், எசுப்பானியம்,[1] |
தலைவர் | Sepp Blatter |
வலைத்தளம் | www.fifa.com |
கட்டமைப்பு

ஃபிஃபா சுவிட்சர்லாந்தின் சட்டங்களுக்கு உட்பட்டு நிறுவப்பட்ட ஓர் சங்கமாகும். இதன் தலைமையகம் சூரிக்கு நகரில் உள்ளது.
ஃபிஃபாவின் முதன்மையான அமைப்பு ஃபிஃபா பேராயம் ஆகும். இது ஃபிஃபாவில் உறுப்பினராக இணைந்துள்ள ஒவ்வொரு கால்பந்துச் சங்கத்தின் சார்பாளர்கள் அடங்கிய மன்றம் ஆகும். 1904 முதல் இதுவரை இப்பேராயம் 66 முறைகள் கூடியுள்ளது. தற்போது சாதாரண அமர்வாக ஒவ்வொரு ஆண்டும் ஒருமுறை கூடுகிறது. கூடுதலாக சிறப்பு அமர்வுகள் 1998 முதல் ஆண்டுக்கு ஒருமுறை நடக்கின்றன. கூட்டமைப்பின் ஒழுங்குபடுத்தும் சட்டங்கள், அவற்றின் தாக்கங்கள், செயலாக்கங்கள் குறித்து பேராயத்தில் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படுகின்றன.இப்பேராயம் மட்டுமே கூட்டமைப்பு சட்டங்களில் மாற்றங்களை நிறைவேற்ற முடியும். மேலும் பேராயம் ஆண்டு அறிக்கையை ஏற்றுக்கொள்ளுதல், புதிய தேசிய சங்கங்களை ஏற்றுக் கொள்ளுதல், தேசிய சங்கங்களில் தேர்தல்கள் நடத்துவது போன்ற செயல்களுக்கு பொறுப்பாகின்றது. உலகக்கோப்பை காற்பந்து நடந்ததற்கு அடுத்த ஆண்டில் இப்பேராயம் ஃபிஃபாவின் தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் ஃபிஃபா செயற்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றது.[2] நாட்டின் அளவு அல்லது கால்பந்து வலிமையைக் கருதாது ஒவ்வொரு தேசிய கால்பந்துச் சங்கத்திற்கும் சீராக ஒரு வாக்கு அளிக்க உரிமை உள்ளது.
ஃபிஃபாவின் முதன்மை அலுவலர்களாக தலைவரும் பொதுச்செயலாளரும் செயல்படுகின்றனர். ஏறத்தாழ 280 ஊழியர்கள் பணிபுரியும் பொதுச் செயலகத்தின் உதவியுடன் இவர்கள் நாளுக்கு நாள் நிர்வாகத்தை நடத்துகின்றனர். ஃபிஃபா தலைவரின் தலைமையில் கூடும் ஃபிஃபாவின் செயற்குழு பேராயத்திற்கிடையேயான காலத்தில் முதன்மையான முடிவுகளை எடுக்கும் பொறுப்பை மேற்கொள்கிறது. ஃபிஃபாவின் உலகளாவிய அமைப்புசார் கட்டமைப்பில் பல நிலைக் குழுக்களை செயற்குழுவும் பேராயமும் ஏற்படுத்துகின்றன. அவற்றில் நிதிக் குழு, ஒழுங்கு நிலைநாட்டல் குழு, நடுவர்கள் குழு என்பன சிலவாகும்.
தனது உலகளாவிய கட்டமைப்பைத் தவிர (தலைமையகம், செயற்குழு, பேராயம்...) ஃபிஃபா உலகின் பல்வேறு கண்டங்களிலும் வட்டாரங்களிலும் கால்பந்தாட்டத்தை மேலாண்மையிட ஆறு கூட்டமைப்புகளை அங்கீகரித்துள்ளது. தேசியச் சங்கங்கள் மட்டுமே ஃபிஃபாவின் உறுப்பினர்களாவர்; கண்ட கூட்டமைப்புகளல்ல. இருப்பினும் இந்த கண்டக் கூட்டமைப்புகள் ஃபிஃபாவின் சட்டங்களில் இணைக்கப்பட்டுள்ளதால், கண்டக் கூட்டமைப்பில் அத்தேசிய சங்கம் உறுப்பினராக இருப்பது ஃபிபாவில் உறுப்பினராக முற்படு தேவையாக உள்ளது.
- ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பு (ஏஎஃப்சி)
- ஆத்திரேலியா 2006 முதல் ஏஃப்சியின் உறுப்பினராக உள்ளது.
- ஆப்பிரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு (CAF)
- வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு (CONCACAF)
- கயானா மற்றும் சூரிநாம் தென் அமெரிக்காவில் இருந்தபோதும் CONCACAF உறுப்பினர்களாக உள்ளனர்; அதேபோல ஃபிபாவில் உறுப்பினரல்லாத பிரெஞ்சு கயானாவும் இதில் உறுப்பினராக உள்ளது.
- தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு (CONMEBOL)
- ஓசியானியா கால்பந்துக் கூட்டமைப்பு (OFC)
- ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் (UEFA)
- ஒன்றுக்கு மேற்பட்ட கண்டங்களில் அமைந்துள்ள நாடுகளின் சங்கங்களான உருசியா, துருக்கி மற்றும் கசக்சுத்தான், யூஈஎஃப்ஏயின் உறுப்பினர்களாக உள்ளனர். அரசியல் காரணங்களுக்காக சைப்பிரசும் இசுரேலும் இந்த ஒன்றியத்தில் உள்ளன. மொனாக்கோ, வாத்திகன் நகரம், கொசாவோ, வடக்கு சைப்பிரசு ஆகியன யூஈஎஃப்ஏ அல்லது ஃபிஃபாவில் உறுப்பினர்களாக இல்லை. கிப்ரால்டர் கால்பந்துச் சங்கம் யூஈஎஃப்ஏயில் மட்டுமே அங்கத்தினராக உள்ளது.
மொத்தமாக, ஃபிஃபா 209 தேசிய சங்கங்களையும் அவர்களது ஆடவர் அணிகளையும் அங்கீகரித்துள்ளது; 129 மகளிர் அணிகளை அங்கீகரித்துள்ளது. ஃபிஃபாவில் ஐக்கிய இராச்சியத்தின் உள்நாடுகள், பாலத்தீனம் போன்ற 23 அங்கீகரிக்கப்படாத அமைப்புக்களையும் நாடுகளாக ஏற்றுக்கொள்வதால் ஐக்கிய நாடுகளை விட கூடுதலான உறுப்பினர்கள் உள்ளனர்.[3] ஃபிஃபாவில் உறுப்பினராகாத ஒன்பது இறையாண்மையுள்ள நாடுகளாவன:மொனக்கோ,வாத்திகன் நகரம்,ஐக்கிய இராச்சியம், மைக்ரோனேசியா, மார்ஷல் தீவுகள், கிரிபாத்தி, துவாலு, பலாவு, நயாரு
குறிப்புகள்
- http://www.fifa.com/mm/document/affederation/federation/01/24/fifastatuten2009_e.pdf FIFA Statutes Aug 2009 see 8:1. Arabic, Russian and Portuguese are additional languages for the Congress. In case of dispute, English language documents are taken as authoritative.
- "FIFA Congress". FIFA. 27 May 2011. http://www.fifa.com/aboutfifa/federation/bodies/congress.html.
- "Palestine Football: Escape to Victory?". Bruisedearth.org (27 October 2008). பார்த்த நாள் 22 December 2010.