பனித்துளி

நீரானது மெல்லிய பொருட்களில் சிறுதுளி அல்லது திவலை வடிவில் காணப்படும்போது அது பனித்துளி என அழைக்கப்படுகின்றது. பொதுவாக இவை குளிரான காலை அல்லது மாலை நேரங்களில் மரம், செடிகளின் இலைகளில் தோன்றும். குளிரான நேரத்தில் பொருட்கள் வெப்பத்தை இழந்து குளிராகும்போது, வளிமண்டலத்தில் இருக்கும் நீராவி ஒடுங்கி திரவ நிலைக்கு மாறி நீர்த் துளியாகும்.

பூவின் இதழ்களில் காணப்படும் பனித்துளிகள்

வெப்பநிலை மிகவும் குறைவாக இருக்கையில், நீராவியானது திண்ம நிலையான பனிக்கட்டியாக மாறும். அந்நிலையில் அது பனிப்பூச்சு என அழைக்கப்படும். ஆனாலும் பனித்துளி உறைந்து பனிப்பூச்சு உருவாவதில்லை. பனித்துளியானது புற்கள் போன்ற கலன்றாவரங்களில் நிகழும் உடலியங்கியல் செயற்பாடுகளில் ஒன்றான கசிவினால் உருவாகும் நீர்த்துளிகளில் இருந்து வேறுபடுத்திப் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். தாவரங்களில்நிகழும் கசிவு என்ற செயல்முறையின்போது, தாவரங்களின் காழ்ச் சாறில் இருக்கும் மேலதிக நீரானது, தாவர இலைகளின் நுனிப் பகுதியிலிருக்கும், அல்லது ஓரங்களிலிருக்கும் விசேட அமைப்புக்களின் ஊடாகக் கசிந்து வெளியேறும். ஆனால் பனித்துளியானது வளைமண்டலத்தில் இருக்கும் நீராவி தாவரத்தின் மேற்பரப்பில் ஒடுங்கி நீர்த்துளியாக மாறுவதாகும்.

பனித்துளி உருவாக்கம்

நீராவியானது ஒடுங்குதல் வளிமண்டல வெப்பநிலையில் தங்கியிருக்கும். பனித்துளி உருவாகும் வெப்பநிலை பனிநிலை (Dew point) என அழைக்கப்படும். இவ்வாறு மேற்பரப்பு வெப்பநிலை குறைந்து சென்று பனிநிலையை அடையும்போது, வளிமண்டலத்தில் இருக்கும் நீராவி மேற்பரப்பில் சிறு நீர்த்துளிகளாக ஒடுங்கும்போது பனித்துளியாகின்றது. இதனால் இது முகில், மூடுபனி போன்ற பொழிவுகள் உருவாகும் தோற்றப்பாட்டில் இருந்து வேறுபடுகின்றது. வளிமண்டலத்தின் வெப்பநிலை பனிநிலையை அடையும்போது, காற்று குளிர்ந்து, நேரடியாக மிகச் சிறிய நீர்த்துளிகளாக ஒடுங்கும்போது அவை முகில், மூடுபனி என்பவற்றை உருவாக்கும். வளிமண்டலத்தில் நிலத்திற்கு அண்மையாக இருக்கும்போது மூடுபனி என்றும், உயரத்தில் வான்பரப்பில் உருவாகும்போது முகில் என்றும் அழைக்கின்றோம்.

பனித்துளி உருவாகும் நிகழ்வு

தாவரங்கள் தாம் பெறும் சூரிய வெப்பத்தை விட அதிகமான ஆற்றலை அகச்சிவப்புக் கதிர் கதிர்வீச்சினால் இழக்கும்போது, மேற்பரப்பின் வெப்பநிலை போதியளவு குறைந்து பனிநிலையை அடையும். இந்நிலை பொதுவாக முகில்களோ, மழையோ அற்ற இரவு நேரங்களில் ஏற்படும். நிலத்தின் ஆழமான பகுதிகள் இரவில் சூடாகவே இருக்கும். எனவே நிலத்திலிருந்து விலகியோ, தனிப்படுத்தப்பட்டோ இருக்கும் பொருட்களில் அல்லது நிலத்திலிருந்து வெப்பத்தை இலகுவாக கடத்த முடியாத வெப்ப கடத்துத் திறன் குறைந்த பொருட்களிலேயே இந்த பனித்துளிகள் தோன்றும்.

பனித்துளி உருவாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய காலநிலையானது முகில்கள் அற்ற இரவாகவும், பைங்குடில் விளைவை ஏற்படுத்த முடியாதபடி, உயரமான வளிமண்டலத்தில் நீராவி குறைவாகவும், நிலத்திற்கு அண்மையாக போதியளவு ஈரப்பதன் (humidity) கொண்டதாகவும் இருக்க வேண்டும். பனித்துளி உருவாக உகந்த நிலைமையை அமைதியான இரவு கொடுக்கும். அல்லாவிடில் காற்று மேலிருந்து கீழாக வெப்பத்தைக் கடத்தி, குளிரான மேற்பரப்பை சூடாக்குவதால், பனித்துளி உருவாக முடியாமல் இருக்கும். ஆனாலும், வளிமண்டலமே முக்கியமான ஈரலிப்பைக் கொடுக்கும் மூலமாக இருக்கையில், ஏற்கனவே ஒடுக்கத்திற்குள்ளான நீராவியை ஈடு செய்வதற்கு மெல்லிய காற்றோட்டம் இருப்பது அவசியமாகும். ஆனால், கீழே இருக்கும் ஈரமான மண் ஈரலிப்பிற்கான முக்கிய மூலமாக இருப்பின் காற்றோட்டம் இருப்பது பனித்துளி உருவாக்கத்தைத் தடுக்கும்.

பனித்துளி உருவாக்கமானது இரவிலும் கட்டடங்களுக்கு வெளியிலேயே மட்டும் நிகழக் கூடிய ஒன்றல்ல. சூடான, ஈரலிப்பான அறைகளிலும், தொழிற்துறை செயற்பாடுகளிலும் கூட மூக்குக் கண்ணாடி, கண்ணாடி போன்றவற்றில் இவ்வகையான நிகழ்வு நடந்தாலும், பொதுவாக இரவில் கட்டடங்களுக்கு வெளியே தாவரங்களில் நீர்த்துளிகள் உருவாகும்போதே அவை பனித்துளிகள் என அழைக்கப்படுகின்றன.

படத்தொகுப்பு

இலைகளில்

சிலந்தி வலைகளில்

பூக்களில்

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.