பதிலித்தாய்

பதிலித்தாய் அல்லது வாடகைத்தாய் (Surrogate mother) என்பவர் வேறொரு தம்பதிக்காகவோ, அல்லது ஒரு தனியான மனிதருக்காகவோ கருத்தரிப்புக்கு உள்ளாகி ஒரு குழந்தையை சுமந்து, பெற்றெடுத்து கொடுப்பவர் ஆவார். இவர் அதனை பணம் பெற்றுக் கொண்டு செய்வாராயின், வாடகைத்தாய் என அழைக்கப்படுவார். பதிலித்தாயின் கருமுட்டையே கருவுருவாக்கத்தில் உதவியிருப்பின், பதிலித்தாயே குழந்தையின் மரபியல் தாய் ஆவார். சில சமயங்களில் வேறொரு பெண்ணின் முட்டையானது, ஒரு ஆணிடமிருந்து பெறப்படும் விந்துடன் கருக்கட்டலுக்கு உட்பட்ட பின்னர், அந்த முளையமானது பதிலித்தாயின் கருப்பையினுள் வைக்கப்பட்டு, வளர்த்தெடுக்கப்படுமாயின், பதிலித்தாயானவர் குழந்தையுடன் மரபியல் தொடர்பெதுவும் அற்றவராக இருப்பார். அந்நிலையில் கருசுமக்கும் தாய் ஆக மட்டுமே இருப்பார்.

பதிலித்தாய் ஒரு குழந்தையின் கருக்காலம் மட்டுமே அக்குழந்தைக்குத் தாயாக இருப்பார். சிலசமயம் தாய்ப்பாலூட்டலுக்காக தொடர்ந்து சில மாதங்கள் வரை தாயாக இருக்க அனுமதிக்கப்படுவார்.

பதிலித்தாயானவர் மரபியல் தாயாகவும் இருப்பாராயின், அவர் பொதுவாக செயற்கை விந்தூட்டல் மூலம் கருத்தரிப்புக்கு ஆட்பட்டிருப்பார். அவருக்குச் செலுத்தப்படும் விந்தானது குறிப்பிட்ட தம்பதிகளில் ஆணின் விந்தாகவோ அல்லது வேறொரு ஆணிடமிருந்து பெறப்பட்டு குளிர்நிலையில் பாதுகாக்கப்பட்டு வரும் விந்தாகவோ இருக்கலாம். வெளிச் சோதனை முறை கருக்கட்டலிலும் இவ்வாறாக பதிலித்தாயைப் பயன்படுத்தவும் முடியும். அந்நிலையில் குழந்தைக்குத் தாயாகப் போகும் பெண்ணின் முட்டையும், தகப்பனாகப் போகும் ஆணின் விந்தும் கருக்கட்டலுக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் கருமுட்டை பதிலித்தாயின் கருப்பையினுள் வைக்கப்படும். சிலசமயம் முட்டை அல்லது விந்து அல்லது இரண்டுமே கூட வழங்கி/வழங்கிகளிடம் இருந்து பெறப்பட்டவையாகவும் இருக்கக் கூடும்.

குழந்தையைச் சொந்தமாக்கிக்கொள்ளப் போகும் பெற்றோரில் ஒருவரோ, அல்லது இருவருமோ மலட்டுத்தன்மை உள்ளவராக இருப்பின், அல்லது பெற்றோர் தற்பால்சேர்க்கை உள்ளவராக இருப்பின், அல்லது பெண் கருத்தரிப்பதிலோ, அல்லது குழந்தைப் பேறிலோ விருப்பமற்றவராக இருப்பின், அல்லது பெண் கருத்தரிக்கவோ, குழந்தை பெற்றுக்கொள்ளவோ முடியாத நிலை அல்லது மருத்துவ ரீதியான பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியிருப்பின் இவ்வாறான பதிலித்தாய் ஏற்பாட்டைச் செய்வார்கள். சிலசமயம் ஒரு தனி பெண் அல்லது ஆண், வாழ்க்கைத்துணையை தேடிக்கொள்ளாமல், தனக்குரிய மரபியல் குழந்தையைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில், முறையே தனது கருமுட்டையை அல்லது விந்தைக் கொண்டு உருவாக்கப்படும் முளையத்தை பதிலித்தாய் மூலம் பெற்றெடுத்துக் கொள்வதற்காய் இத்தகைய ஏற்பாட்டை செய்வதும் உண்டு. குழந்தையை சுமக்கும்காலத்தில் குழந்தைக்கும், பதிலித்தாயானவருக்கும் ஏற்படக்கூடிய பிணைப்பானது, குழந்தை பிறந்து குறிப்பிட்டவர்களிடம் வழங்கப்பட்ட பின்னர், பதிலித்தாய்க்கு உளவியல் ரீதியான ஒரு பிரச்சனையாக உருவாவதும் உண்டு. இத்தகைய உணர்வுபூர்வமான பல சிக்கல்கள் ஏற்பட சாத்தியங்கள் இருப்பதனால், ஒவ்வொரு நாட்டிலும் இவ்வகையான பதிலித்தாய் நடைமுறைக்கு பல சட்டதிட்டங்கள், விதிமுறைகள் உள்ளன. பதிலித்தாய் மூலம் குழந்தை பெறுவதற்கு இந்தியாவில் சுற்றுலாப் பயணி விசா நவம்பர் 1 , 2013 முதல் இல்லை என இந்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.[1]

மும்பை நீதிமன்ற தீர்ப்பு

ஒரு பெண் தாய்மை அடைய முடியாத காரணத்தினால் வாடகைத்தாய் நியமித்து பிள்ளை பெற்றுக்கொண்டாலும் குழந்தை பிறந்த மறுநாளிலிருந்து வாடகைத்தாய் அக்குழந்தையை குழந்தையின் உண்மையான தாயின் பராமரிப்பிற்கு விட்டுவிட வேண்டும். ஆகையினால் இப்பெண்ணுக்கு 6 மாதம் பேறுகால விடுமுறையை அலுவலகங்கள் கொடுக்க வேண்டும் என்று மும்பை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.[2]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.