பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவு

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவு இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்கிழக்குப் பகுதியில் யாழ்ப்பாண நீரேரிக்கு வடக்கில் அமைந்துள்ளது. இப்பிரிவு 167.7 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது[1].

பச்சிலைப்பள்ளியின் தென்பகுதி எல்லைக்கோடு ஆனையிறவுக்கடனீரேரி. வடக்கே வீரக்களி ஆறும் தரவை வெளியும் அதற்கப்பால் வடமராட்சி கிழக்குப் பிரதேசம், கிழக்கே சுண்டிக்குளம் பறவைகள் சரணாலயமும் சிறு காடும் பெருவெளியும் ஆனையிறவுக் கடனீரேரியின் தொடுப்பும். மேற்கில் தென்மராட்சி எல்லைகளும் காணப்படுகிறது.

கிராம அலுவலர் பிரிவுகள்

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 18 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.

  1. கோவில்வயல்
  2. இயக்கச்சி
  3. முகாவில்
  4. மாசார்
  5. சோரன்பற்று
  6. தர்மகேணி
  7. புலோப்பளை
  8. முல்லையடி
  9. தம்பகாமம்
  10. பளை
  11. அல்லிப்பளை
  12. கச்சார்வேலி
  13. அரசங்கேணி
  14. இத்தாவில்
  15. முகமாலை
  16. வேம்பொடுகேணி
  17. கிளாலி ஆகிய ஊர்கள் இப் பிரதேச செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. வடக்கு, தெற்கு எல்லைகளில் யாழ்ப்பாண மாவட்டமும், கிழக்கில் நீரேரியும், தெற்கில் யாழ்ப்பாண நீரேரியும் உள்ளன.

வரலாறு 

பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தின் இயற்கை அமைவே அதனுடைய வாழ்வுக்கும் அழிவுக்கும் காரணமாக உள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் நுழைவாசலில் இருக்கும் பிரதேசம் என்பதால், யாழ்ப்பாணத்தின் பாதுகாப்புக்கு இந்தப் பிரதேசத்தை அதிகாரத் தரப்புகள் வரலாறு முழுவதும் பயன்படுத்தியுள்ளன. இதனால், புர்வீக மக்கள் குடியிருப்பான இந்தப் பிரதேசம் எப்போதும் யுத்த முன்னரணாகவே இருந்திருக்கிறது. யுத்த முன்னரங்குகள் எப்போதும் சந்திக்கும் அழிவை பச்சிலைப்பள்ளியும் தன்னுடைய காலம் முழுவதும் சந்தித்தே வந்திருக்கிறது. ==

யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்பற்றிய போர்த்துக்கீச, ஒல்லாந்த, பிரித்தானியர்கள் அதைப் பாதுகாப்பதற்காக பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தில் ஆனையிறவிலும் இயக்கச்சியிலும் வெற்றிலைக்கேணியிலும் கோட்டைகளைக் கட்டினார்கள்.

இயக்கச்சியில் ஒல்லாந்தரால் கட்டப்பட்ட பைல் கோட்டையின் சிதைவுகள் இன்னும் சாட்சியாக இருக்கிறது. வன்னியிலிருந்து வரும் படையெடுப்புகளைக் கட்டுப்படுத்தவும் வெளியாரிடமிருந்து யாழ்ப்பாணத்தைப் பாதுகாக்கவும் இந்தக் கோட்டைகள் பயன்படுத்தப்பட்டன. இங்கே 1750களில் சுங்கப்பகுதியும் இயங்கியிருப்பதாக வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன. இந்தக் காலப்பகுதியில் இந்தக் கோட்டையை அண்மித்ததாக ஐரோப்பியர்கள் தேவாலயமொன்றையும் கட்டினர். இப்படிக் கட்டப்பட்டதே புல்லாவளித் தேவாலயம். கடல் வழியாக வரும் படையெடுப்பைத் தடுப்பதற்காக கிளாலியில் ஒரு இறங்குதுறையும் கண்காணிப்புத் தளமும் இருந்தது.

இயக்கச்சியில் ஒரு பெரிய நன்னீர்க்கிணறு இருக்கின்றது . இந்தக் கிணற்றிலிருந்தே முன்னர் ஆனையிறவு, தட்டுவன்கொட்டி, உப்பளம், உமையாள்புரம் போன்ற இடங்களுக்குத் தண்ணீர் சென்றது. இப்போதும் இந்த நன்னீர்க்கிணறுகள் நீரை வழங்கிக் கொண்டேயிருக்கின்றன.

1984 இற்கு முன்னர் பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தில் எல்லை இன்னும் விரிந்திருந்தது. அது கிழக்கே சுண்டிக்குளத்தைக் கடந்து, வங்கக் கடலில் தொட்டது. வடக்கு எல்லை, இன்றைய வடமராட்சி கிழக்கின் கடலோரம். 1984 இல் வடமராட்சி கிழக்கு என்ற புதிய பிரதேச செயலர் பிரிவு உருவாக்கப்பட்ட பிறகு வீரக்களியாற்றுடன் எல்லை குறுகி விட்டது.

மக்கள் தொகை

இயக்கச்சியிலிருந்து முகமாலை வரையான இப்பிரதேசத்தில் 3,914 குடும்பங்களைச் சேர்ந்த 12,637 மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இப்பிரதேசத்தில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் முக்கியத் தொழில்களாக வேளாண்மை, கடற்றொழில், பனை சார்தொழில், கால்நடை வளர்ப்பு, தொழிற்சாலைகள் போன்றவைகளும் தொழில்சார் நிறுவனங்களாக சிறு கைத்தொழில்களும் காணப்படுகின்றன.

இன்னொரு இயற்கையோடிணைந்த தொழில் உப்பு உற்பத்தி. ஆனையிறவு, குறிஞ்சாத்தீவு உப்பளங்கள் இந்தப் பிரதேச மக்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்கின. குறிஞ்சாத்தீவு உப்பளத்தின் உப்பு உற்பத்தி பெரும் நிதியீட்டத்தை தேசியப் பொருளாதாரத்துக்கு வழங்கியது. ஈழப்போரினால் இவையெல்லாம் சிதைந்து விட்டன.

காற்றலை மின்னுற்பத்தி நிலையம் ஒன்றும் இங்கே உள்ளது.

வழிபாட்டு முறை

பச்சிலைப்பள்ளியின் வழிபாட்டு முறை என்பது பெரும்பாலும் சிறு தெய்வ வழிபாட்டுக்குரியதே. இன்று அந்தப் பாரம்பரியம் மெல்ல மெல்ல மாறி வந்தாலும் இன்னும் அதனுடைய அடையாள மரபு மாறவில்லை. பாரம்பரியக் குடிகள் இங்கே மண்டலாய்ப்பிள்ளையார், மல்வில் வல்லியக்கன், இயக்கச்சி கண்ணகி அம்மன், அறத்தி அம்மன், மொண்டுவான் வைரவர், முகாவில் திரியாய் அம்மன், பாப்பாங்குளம் பிள்ளையார், கிளாலி அம்மன், சின்னமண்டலாய்ப்பிள்ளையார் என்ற வழிபாட்டுத்தலங்ளை உருவாக்கி வழிபட்டனர். இதில் மல்வில் வல்லியக்கன் பின்னாளில் மல்வில் கிருஷ்ணன் கோயிலாக மாறி விட்டது. மல்வில் கிருஸ்ணன், திரியாய் அம்மன், மண்டலாய்ப்பிள்ளையார் என்ற மூன்று கோயில்களுக்கும் பச்சிலைப்பள்ளிப்பிரதேசத்தின் நாலா திசைகளிலிருந்தும் வடமராட்சி, பருத்தித்துறை, வலி கிழக்கு போன்ற பிரதேசங்களிலிருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். இது அவர்களுடைய வழமையாக உள்ளது.

இதேவேளை பச்சிலைப்பள்ளியில் (மிசன் சேர்ச்) என்று சொல்லப்படும் தேவாலயமொன்று பளை நகரின் மத்தியிலே உள்ளது. இது 1883 இல் கட்டப்பட்டது.

முக்கிய இடங்கள் 

  • இயக்கச்சி பெயரி கிணறு
  • புல்லாவெளி அந்தோணியார் ஆலயம்
  • பளை நகர் திருச்சபை
  • கிளாலி சுற்றுவட்டார கிறிஸ்தவ  ஆலயங்கள்
  • புலோப்பளை மாதா கோவில்
  • மண்டலாய் பிள்ளையார் ஆலயம்
  • இயக்கச்சி கண்ணகி அம்மன் ஆலயம்
  • மல்வில் கிருஸ்ணர் கோவில்
  • திரியாய் திரௌபதி அம்மன்
  • இரட்டைக் கேணி அம்மன்
  • இயக்கச்சி குவேனிக்கோட்டை

பாடசாலைகள்

  • மாசார் அ.த.க பாடசாலை
  • இயக்கச்சி அ.த.க பாடசாலை
  • சோரன்பற்று சிறிகணேசா, கோவில்வயல் அ.த.க,வேம்படுகேணி சி.சி.த.க பாடசாலை,கிளாலி றோமன் கத்தோலிக்க பாடசாலை என்பன கல்வியை வழங்கி வருகின்றன.

நிர்வாக ரீதியில் 

நிர்வாக ரீதியில் பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபை, பளை பொது மருத்துவமனை, பச்சிலைப்பள்ளி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம், பச்சிலைப்பள்ளி பனை, தென்னை வள உற்பத்திக் கூட்டுறவுச் சங்கம், பளை காவல்துறை நிலையம், கமநல சேவைகள் திணைக்களம், தொலைத்தொடர்புப் பரிவர்த்தனை நிலையம், அஞ்சல் நிலையம் என்பன இயங்கி வருகின்றன.

வேறு தகவல்கள்

  • மொத்த மக்கள் தொகை (2012): 11,465[1]
    • தமிழர்: 11,447, முஸ்லிம்கள்: 10, சிங்களவர்: 4,
  • இங்குள்ள இந்துக் கோவில்கள்: 74[1]
  • இங்குள்ள கிறித்தவக் கோவில்கள்: 18[1]

மேற்கோள்கள்

  1. "Northern Provincial Council: Statistical Information - 2013". வட மாகாண சபை. பார்த்த நாள் 10 மார்ச் 2014.

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.