தியாகத் திருநாள்

தியாகத் திருநாள் (Eid al-adha, அரபு: عيد الأضحى ஈத் அல்-அதா) அல்லது பக்ரித் பண்டிகை, உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரான இப்றாகீம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் இசுலாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதம் (Dul Haji) 10 ஆம் நாள் இது கொண்டாடப்படுகின்றது.

தியாகத் திருநாள்
அதிகாரப்பூர்வ பெயர்தியாகத் திருநாள், ஈத் அல்-அதா
பிற பெயர்(கள்)பக்ரித் பண்டிகை,
ஹஜ் பெருநாள்
முக்கியத்துவம்இறைவன் கட்டளைக்காக, மகனை பலியிடத் துணிந்த இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்படுகின்றது.
அனுசரிப்புகள்தொழுகை, பலியிடல், தானம்.
தொடக்கம்10 துல் ஹஜ்
முடிவு13 துல் ஹஜ்

வசதியுள்ள முஸ்லிம்கள் ஹஜ் செய்வது என்பது அடிப்படை கடமைகளில் ஐந்தாவது கடமையாகும்.[1]. ஹஜ் செய்வது என்பது புனிதப் பயணமாக மெக்கா செல்வதாகும். இப்புனிதப் பயணக் கிரியைகள்/கடமைகளில் கடைசியானது இறைவனுக்காக பலியிடுதலாகும். இது ஹஜ் மாதம் பத்தாம் நாள் நடைபெறும். இது பெருநாள் தொழுகை நடைபெற்றபின் ஆரோக்கியமான ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை பலியிட்டுக் கொடுக்கப்படுகிறது. பெரும்பாலும் உலகம் முழுவதும் இந்த பண்டிகை தியாகப் பெருநாள் என பொருள்படும் அரபிய பதமான ஈத் அல்-அதா என்றே அழைக்கப்பட்டாலும், தமிழ் நாட்டில் ஆட்டை பலியிடுவதை அடிப்படையாக கொண்டு பக்ரித் (பக்ரித் ஈத்-அல் -தா-பெருநாள்) என்ற உருது பதத்தில் அழைக்கப்படுகின்றது.

பண்டிகை வரலாறு

மகனை பலியிடத் தயாராகும் இப்ராஹிமை தடுக்கும் வானவர் ஃசிப்ரீல் - ஒரு பாரசீக ஒவியம்

இறைவனின் தூதர்களாக இஸ்லாமியர்களால் நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்ராகிம். இவர் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய ஈராக்கில் வாழ்ந்து வந்தார்.[2] நெடுநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்த இவருக்கு, இறுதியில் இவரின் இரண்டாவது மனைவி ஃஆசரா மூலம் ஒரு ஆண் மகவு பிறந்தது. இஸ்மாயீல் என பெயரிடப்பட்ட அந்த குழந்தையின் வழி வந்தவர்களே இன்றைய அராபியர்கள்.[3] இஸ்மாயீல் பால்ய பருவத்தை எட்டியிருந்த பொழுது, அவரை தனக்கு பலியிடுமாறு கடவுள், இப்ராஹிம் அவர்களுக்கு கனவின் மூலம் கட்டளையிட்டான். இதைப்பற்றி இஸ்மாயீலிடம் கூறிய இப்ராஹிம், அவரின் அனுமதியுடன் பலியிட துணிந்தபொழுது, சிஃப்ரயீல் எனப்படும் வானவரை அனுப்பி இறைவன் அதை தடுத்தான். மேலும் ஓர் ஆட்டை இறக்கிவைத்த இறைவன், இஸ்மாயீலுக்கு பதில் அந்த ஆட்டை அறுத்து பலியிடுமாறு இப்ராஹிமிற்கு கட்டளையிட்டான்.

மேற்கூறிய இந்த சம்பவத்தின் அடிப்படையிலேயே தியாகத்திருநாள் கொண்டாடப்படுகின்றது. இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில், இஸ்லாமியர்கள் தங்கள் வீட்டில் ஆடுகளை பலியிட்டு இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

திருநாள் கொண்டாட்டம்

சிறப்புத் தொழுகை

சிறப்புத்தொழுகைகள் நடத்தப்படுவது தியாகத்திருநாளின் முக்கிய அம்சம் ஆகும். உலகம் முழுவதும் இசுலாமியர்கள் இந்த நாளில் புத்தாடை அணிந்து இந்த தொழுகைகளில் கலந்து கொள்கின்றனர். பெரும்பாலும் இந்த தொழுகை திடல் போன்ற திறந்த வெளிகளிலேயே நடத்தப்படுகின்றன.[4]

பலியிடல்

பலியிடல் தியாகத் திருநாளின் ஒரு சிறப்பம்சம் ஆகும். இந்த நாளில் இசுலாமியர்கள் தங்கள் வீட்டில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிடுகின்றனர். பின்னர் அதன் இறைச்சியை மூன்று சம பங்குகளாக பிரித்து, ஒரு பங்கை அண்டை வீட்டார் மற்றும் நண்பர்களுக்கும் மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது பங்கை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர். இவ்வாறு பலியிடப்படும் விலங்கு ஊனம் இல்லாமலும், குறைந்தபட்சம் ஒரு வயது பூர்த்தியானதாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்படுகின்றது.[5]

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.