நீல்பமரி மாவட்டம்

நீல்பமரி மாவட்டம் (Nilphamari District) (வங்காள: নীলফামারী জেলা, தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் ரங்க்பூர் கோட்டத்தில் உள்ளது. வடக்கு வங்காளதேசத்தில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நீல்பமரி நகரம் ஆகும். 1547 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டம் டாக்கா நகரத்திலிருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் வடமேற்கே உள்ளது.

வங்காளதேசத்தில் நீல்பமரி மாவட்டத்தின் அமைவிடம்

மாவட்ட எல்லைகள்

நீல்பமரி மாவட்டத்தின் வடக்கில் இந்தியாவின் டார்ஜிலிங் மாவட்டம், தெற்கில் ரங்க்பூர் மாவட்டம் மற்றும் தினஜ்பூர் மாவட்டம், கிழக்கில் ரங்க்பூர் மாவட்டம் மற்றும் லால்முனிர்காட் மாவட்டங்களும், மேற்கில் பஞ்சகர் மாவட்டம் மற்றும் தினஜ்பூர் மாவட்டங்களும் எல்லைகளாக அமைந்துள்ளது.

மாவட்ட நிர்வாகம்

1546.59 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட நீல்பமரி மாவட்டத்தை நீல்பமரி சதர், கிசோர்கஞ்ச், தோமர், ஜல்தகா, திம்லா மற்றும் சையத்பூர் என ஆறு துணை மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் நீல்பமரி, சையத்பூர், தோமர் மற்றும் ஜல்தகா என நான்கு நகராட்சி மன்றங்களும், 61 பஞ்சாயத்து ஒன்றியங்களும், 361 கிராமங்களையும் கொண்டுள்ளது. இம்மாவட்டம் நான்கு வங்காளதேச நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இதன் அஞ்சல் சுட்டு எண் 5300 ஆகும். இம்மாவட்டம் இந்தியாவுடன் 50.90 கிலோ மீட்டர் பன்னாட்டு எல்லைக் கோட்டைக் கொண்டது.

பொருளாதாரம்

நீல்பமரி மாவட்டத்தில் டீஸ்டா ஆறு, ககோட், பமோன் தங்கா, தேவனை, உள்ளாய், சரல்கதா, சல்கி, ஜமுனாஷாரி, புரிகோரா முதலிய வற்றாத ஆறுகள் பாய்வதால், நீல்பமரி மாவட்டத்தில் அவுரிச்செடிகள் அதிகம் வளர்கிறது. மேலும் நெல், சணல், புகையிலை, கரும்பு, கோதுமை, வெங்காயம், நிலக்கடலை முதலியவைகள் பயிரிடப்படுகிறது. [1]

கல்வி

வங்காளதேசத்தின் பிற மாவட்டங்களைப் போன்று, இம்மாவட்டத்திலும் நான்கு படிகள் கொண்ட கல்வி அமைப்புகள் உள்ளது. அவைகள்: ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட தொடக்கப்பள்ளிகளும் [கிரேடு 1 – 5], ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட செகண்டரி பள்ளிகளும் [கிரேடு 6 – 10], இரண்டாண்டு படிப்பு கொண்ட மேனிலைப்பள்ளிகளும் [கிரேடு 11 – 12], நான்கு ஆண்டு படிப்பு கொண்ட இளநிலை பட்டப்படிப்பு மற்றும் ஒராண்டு கால முதுநிலை பட்டப்படிப்பு கொண்ட பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உள்ளது. வங்காள மொழியுடன், ஆங்கில மொழியும் கற்பிக்கப்படுகிறது.

இம்மாவட்டத்தில் ஐந்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், ஆறு உயர்நிலைப் பள்ளிகளும் உள்ளது.

மக்கள் தொகையியல்

1546.59 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இம்மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி (இறுதி முடிவு அறிவிக்கப்படவில்லை) மக்கள் தொகை 18,34,231 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 9,22,964 ஆகவும், பெண்கள் 9,11,267 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் 101 ஆண்களுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 1186 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். சராசரி எழுத்தறிவு 44.4 % ஆக உள்ளது.[2]மாவட்டத்தின் பெரும்பான்மை மக்கள் இசுலாம் சமயத்தை பின்பற்றி, வங்காள மொழி பேசுகின்றனர்.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.