லால்முனிர்காட் மாவட்டம்

லால்முனிர்காட் மாவட்டம் (Lalmonirhat) (வங்காள: লালমনিরহাট জেলা, தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் ரங்க்பூர் கோட்டத்தில் உள்ளது. வங்காளதேசத்தின் வடக்கில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் லால்முனிர்காட் நகரம் ஆகும்.[1]

வங்காளதேசத்தில் லால்முனிர்காட் மாவட்டத்தின் அமைவிடம்

மாவட்ட எல்லைகள்

லால்முனிர்காட் மாவட்டத்தின் வடக்கில் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் கூச் பெகர் மாவட்டம் மற்றும் ஜல்பைகுரி மாவட்டங்களும், தெற்கில் ரங்க்பூர் மாவட்டமும், கிழக்கில் குரிகிராம் மாவட்டம் மற்றும் கூச் பெகர் மாவட்டங்களும், மேற்கில் ரங்க்பூர் மாவட்டம் மற்றும் நீல்பமரி மாவட்டங்களும் எல்லையாக உள்ளது.

மாவட்ட நிர்வாகம்

1247.37 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள இம்மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக ஐந்து துணை மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள்: லால்முனிர்காட் சதர், பட்கிராம், ஆதித்மரி, காளிகஞ்ச் மற்றும் ஹத்திபந்தா ஆகும். மேலும் இம்மாவட்டத்தில் லால்முனிர்காட் மற்றும் பட்கிராம் என இரண்டு நகராட்சி மன்றங்களும், 67 கிராமப்பஞ்சாயத்து ஒன்றியங்களும், 919 கிராமங்களும் உள்ளது. இம்மாவட்டம் மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இதன் அஞ்சல் சுட்டு எண் 5500 மற்றும் தொலைபேசி குறியிடு எண் 0591 ஆகும். ஆண்டு சராசரி மழைப் பொழி 293 செண்டி மீட்டராகும்.

பொருளாதாரம்

இம்மாவட்டம் அதிகப்படியாக வேளாண்மைப் பொருளாதாரத்தை நம்பியுள்ளது. இம்மாவட்டத்தில் பாயும் டீஸ்டா, சிங்மரி, தார்லா போன்ற ஆறுகளால் நீர் வளம் மற்றும் மண் வளம் கொண்டது. இங்கு நெல், சணல், கரும்பு, புகையிலை, மிளகாய், எண்ணெய் வித்துக்கள், மா, பலா, வெற்றிலை, பாக்கு அதிகம் பயிரிடப்படுகிறது. இம்மாவட்டத்தில் வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் 72.78% , வணிகர்கள் 3.46%, ஊழியர்கள் & அலுவலர்கள் 4.45% ஆக உள்ளனர்.

மக்கள் தொகையியல்

1247.37 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இம்மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி (இறுதி முடிவு அறிவிக்கப்படவில்லை) மக்கள் தொகை 8 12,56,099 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 6,28,799 ஆகவும், பெண்கள் 6,27,300 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் 100 ஆண்களுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 975 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். சராசரி எழுத்தறிவு 46.1% ஆக உள்ளது.[2]இம்மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றுபவர்களாகவும், வங்காள மொழியைப் பேசுபவர்களாகவும் உள்ளனர்.

கல்வி

வங்காளதேசத்தின் பிற மாவட்டங்களைப் போன்று, இம்மாவட்டத்திலும் நான்கு படிகள் கொண்ட கல்வி அமைப்புகள் உள்ளது. அவைகள்: ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட தொடக்கப்பள்ளிகளும் [கிரேடு 1 – 5], ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட செகண்டரி பள்ளிகளும் [கிரேடு 6 – 10], இரண்டாண்டு படிப்பு கொண்ட மேனிலைப்பள்ளிகளும் [கிரேடு 11 – 12], நான்கு ஆண்டு படிப்பு கொண்ட இளநிலை பட்டப்படிப்பு மற்றும் ஒராண்டு கால முதுநிலை பட்டப்படிப்பு கொண்ட பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உள்ளது. தாய் மொழியான வங்காள மொழியுடன், ஆங்கில மொழியும் அனைத்து நிலைகளிலும் கற்பிக்கப்படுகிறது.

இம்மாவட்டம் இருபத்தி ஏழு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், இருநூறு உயர்நிலைப் பள்ளிகளும், 597 தொடக்கப் பள்ளிகளும், 269 மதராசாக்களும் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

  1. Tanzimul Nayan (2012). "Lalmonirhat District". in Sirajul Islam and Ahmed A. Jamal. Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ). Asiatic Society of Bangladesh. http://en.banglapedia.org/index.php?title=Lalmonirhat_District.
  2. Community Report Lalmonirhat Zila June 2012

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.