நிகில் சக்கரவர்த்தி

நிகில் சக்கரவர்த்தி (Nikhil Chakravartty, நவம்பர் 3, 1913- சூன் 27, 1998) இந்திய இதழிகையாளராகவும் மனித உரிமைப் போராளியாகவும் இடதுசாரிக் கொள்கையாளராகவும் வாழ்ந்தவர்.

பிறப்பும் படிப்பும்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் பிறந்தார். கல்கத்தாவில் உள்ள பிரசிடன்சி கல்லூரியில் வரலாறு படித்தார். அங்கு பட்டம் பெற்றபிறகு ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத்தில் மெர்டன் கல்லூரியில் பயின்றார்.

இதழிகைப்பணி

இதழிகைத் துறைக்கு வருமுன்னர் கல்கத்தா பல்கலைக் கழகத்தில் ஆசிரியராக இருந்து மாணவர்களுக்கு வரலாறு சொல்லிக் கொடுத்தார். இந்தியப் பொதுவுடமைக் கட்சியில் சேர்ந்தார். அக்கட்சியில் 1978 வரை இருந்தார். ’மெயின் ஸ்ட்ரீம்’ என்னும் ஆங்கில வாரந்திர இதழை 1968 ஆம் ஆண்டில் தொடங்கினார். அவ்விதழைத் தொய்வில்லாமல் 30 ஆண்டுகள் ஆசிரியராக இருந்து நடத்தினார். பிரதமர் இந்திராகாந்தி கொண்டு வந்த நெருக்கடி சட்டத்தினால் (1975-77) சில காலம் அவ்விதழ் நிறுத்தப் பட்டிருந்தது. பொதுவுடைமைக் கட்சியின் பத்திரிக்கைகளில் சிறப்புச் செய்தியாளராகவும் பணி புரிந்துள்ளார்.

1940 களில் வங்காளப் பஞ்சம், கொல்கத்தாவில் நிகழ்ந்த மதக் கலவரங்கள் ஆகியன பற்றி எதிர்த்தும் கண்டித்தும் எழுதினார். இந்தியா விடுதலை அடைவதற்கு முன் ஆங்கில அரசு தேசியப் போராட்டங்களை நசுக்க இருந்த திட்டங்களை மக்களிடையே அம்பலப் படுத்தி எழுதினார். இதன் காரணமாக அவர் சிறையில் வைக்கப்பட்டார்.

1959 இல் இந்தியப் பிரதம அமைச்சரின் தனிச் செயலராக இருந்த மத்தாய், தன் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திய செயல்களைப் பற்றி நிகில் எழுதியதால் நாடாளுமன்றத்தில் காரசார விவாதம் நடந்தது. அதன் விளைவாய் மத்தாய் தம் பதவியைத் துறந்தார்.

பதவிகள்

பிரசு கமிசனில் உறுப்பினராகவும் தேசிய ஒருமைப் பாட்டுக் குழுவில் உறுப்பினராகவும் நமேதியா அறக்கட்டளையில் தலைவராகவும் பிரசார் பாரதியில் தலைவராகவும் இருந்தார். கல்வி பண்பாடு ஊடகங்கள் தொடர்பான இந்திய அமெரிக்கக் குழுவில் உறுப்பினராக இருந்தார்.

பிற சிறப்புகள்

  • சிவில் உரிமைகள் பறி போவதையும் நசுக்கப் படுவதையும் எதிர்த்தார்.
  • நெருக்கடிக் காலத்தில் நடைபெற்ற அத்துமீறல்களைக் கண்டித்தார்.
  • காசுமீரத்திலும் வடகிழக்கு மாநிலங்களிலும் நிகழ்ந்த வன்முறைகளை எதிர்த்து எழுதினார்.
  • அரசியல் அதிகாரம் கொண்டோரிடம் ஆதாயம் பெறுவதை வெறுத்து நேரிய முறையில் தம் பத்திரிகையை நடத்தி வந்தார்.
  • அரசுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் நெருக்கமாக இயங்குவது நல்லதன்று என்னும் கொள்கையினால் தமக்கு வழங்கப் பட்ட பத்ம பூசன் விருதை ஏற்க மறுத்தார் (1990)
  • எதிரணியில் இருந்தபோதும் பிரதமர் நரசிம்ம ராவ் இவருடைய அரிய ஆலோசனைகளைக் கேட்டுள்ளார். நிகில் சக்கரவர்த்தியின் நேர்மையையும் நம்பகத்தன்மையையும் பெரிதும் பாராட்டியுள்ளார்.

உசாத்துணை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.