நாலந்த சிலை மண்டபம்

நாலந்த சிலை மண்டபம் அல்லது நாலந்த கெடிகே (Nalanda Gedige) என்பது இலங்கையின் மாத்தளை மாவட்டத்தில் A9 நெடுஞ்சாலையில் இருந்து கிழக்கே 1.2 கி.மி தூரத்தில் அமைந்துள்ள ஒரு பௌத்த சிலை மண்டப அழிபாடு ஆகும். இது மாத்தளைக்கும் தம்புள்ளைக்கும் இடையே இவற்றிலிருந்து ஏறத்தாழச் சம அளவு தொலைவில் உள்ளது. இது இலகுவாக அணுகத்தக்க வகையில் அமைந்திருந்தும், ஒப்பிடும்போது பெருமளவுக்கு அறியப்படாத ஒரு தொல்லியல் சின்னமாகவே இது உள்ளது. இலங்கையில் இந்தச் சிலை மண்டபத்துக்கு முந்தியதும், பிந்தியதுமான பல சிலை மண்டபங்கள் இருந்தும் இது பல வழிகளில் அவற்றிலிருந்து வேறுபட்டதாக உள்ளது. 1970களில் இலங்கை அரசினால் முன்னெடுக்கப்பட்ட மகாவலி ஆறு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இந்த நினைவுச் சின்னம் முற்றாகவே நீருக்குள் அமிழ்ந்து அழியும் நிலை ஏற்பட்டபோது, இச்சின்னத்தை ஒவ்வொரு கல்லாகக் கழற்றி எடுத்த தொல்லியல் துறையினர் அதனை முன்னைய இடத்திலிருந்து சில அடிகள் தொலைவில் நிலத்தை மண்போட்டு உயர்த்தி மீளக் கட்டினர்.

நாலந்த சிலை மண்டபம்
நாலந்த சிலை மண்டபத்தின் முன்புறத் தோற்றம்
நாலந்த சிலை மண்டபம்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்:7°40′11″N 80°38′44″E
பெயர்
பெயர்:நாலந்த கெடிகே
அமைவிடம்
நாடு:இலங்கை
மாகாணம்:மத்திய மாகாணம், இலங்கை
மாவட்டம்:மாத்தளை மாவட்டம்
அமைவு:நாலந்த
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:பல்லவர் கட்டிடக்கலை‎
வரலாறு
கட்டப்பட்ட நாள்:கி.பி. 8 - 10

சின்னங்கள்

இந்தத் தொல்லியல் களம் ஒரு சிலை மண்டபத்தையும், ஒரு சிறிய தாது கோபுரத்தையும் உள்ளடக்கியுள்ளது. இவ்விரண்டும், ஒரு சதுர வடிவான மேடையில் கட்டப்பட்டுள்ளன. இம்மேடையைச் சுற்றிலும் செங்கற்களினாலான குட்டைச் சுவர் உள்ளது. இம்மேடையின் கிழக்குச் சுவரோடு ஒட்டி அதன் நடுவில் படிகள் இருந்ததற்கான தடயங்கள் காணப்படுகின்றன. இரண்டு புத்தர் சிலைகளின் மார்பளவு பகுதிகளும், ஒரு கால் பகுதியும், மகாயான போதிசத்வர் அல்லது அவலோகிதேசுவரர் எனக்கருதத்தக்க சிற்பத்தைக் கொண்ட ஒரு கற்பலகையும், ஒரு சிறிய காவற்கல்லும், ஒரு பிள்ளையார் சிலையும் இவ்விடத்தில் அழிபாடுகளிடையே காணப்பட்ட பிற தொல்லியல் சின்னங்கள். இவற்றைவிட சற்றுத் தொலைவில் வயல் பகுதியில் கல்வெட்டுக்களைக் கொண்ட கற்றூணின் பகுதிகளும் காணப்பட்டன.

அமைப்பு

கட்டிடங்கள் 65 சமீ உயரம் கொண்டதும் பல்வேறு துணை உறுப்புக்களால் ஆனதுமான தாங்குதள மேடை மேல் அமைந்துள்ளன. சிலை மண்டபம் முக மண்டபம், உள் மண்டபம், கருவறை என மூன்று பகுதிகளால் ஆனது.

இலங்கையில் உள்ள முந்திய சிலை மண்டபங்கள் செங்கற்களால் ஆனவை. ஆனால், இக் கட்டிடம் கற்களால் ஆனது. இது, தென்னிந்தியாவில் பல்லவர்கள் அறிமுகப்படுத்திய கல்லால் கட்டிடங்கள் கட்டும் வழமையின் செல்வாக்கால் ஏற்பட்டது எனக் கருதப்படுகிறது. அத்துடன், இச்சிறிய கட்டிடம் பல்லவ கட்டிடக்கலையை உள்வாங்கி அமைக்கப்பட்டுள்ளது. பல்லவர்கள் மாமல்லபுரத்தில் கட்டிய பஞ்சரதங்கள் எனப்படும் கட்டிடங்களில் ஒன்றான கணேச ரதத்தின் விமான அமைப்பைத் தழுவியே நாலந்த சிலை மண்டபத்தின் விமானமும் அமைந்துள்ளது. பல்லவ கட்டிட கலையம்சம் கொண்ட இக்கட்டிடமானது தாந்திரிக் எனப்படும் பௌத்த சிற்ப வடிவமைப்பைக் கொண்டு பௌத்த–இந்து அடையாள சின்னமாகக் காணப்படுகின்றது. அத்துடன், சிற்பக் கூறுகளிலும் இங்கே பௌத்த, இந்து சிற்ப வடிவங்கள் கலந்து காணப்படுகின்றன.

காலம்

எட்டுத் தொடக்கம் பத்தாம் நூற்றாண்டு காலப்பகுதியில் இது கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இக்காலப்பகுதியில் இலங்கைத் தீவில் குழப்பம் நிறைந்து காணப்பட்டது. சிங்கள முடியாட்சி சரிவைக் கண்டு கொண்டிருந்த போது, தென் இந்திய தமிழ் அரசர்கள் தங்கள் ஆட்சியை இத்தீவில் நிலை நாட்டிக் கொண்டிருந்தார்கள்.

இலங்கையின் மையம்

இதன் இன்னுமொரு முக்கிய சிறப்பம்சம் என்னவெனில், இக்கட்டிடம் அமைந்துள்ள இடம் இலங்கையின் மையப் பகுதியென இலங்கை நிலவளவை திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.[1][2] இன்று இது சுற்றுலாப் பயணிகளை கவருமிடமாகவும், பௌத்தர்களின் வணக்கத்தலமாகவும் காணப்படுகிறது.

படங்கள்

குறிப்புக்கள்

இவற்றையும் பார்க்க

உசாத்துணைகள்

  • Prematilleke, P. L., Nalanda - A Short Guideto the 'Gedige' Shrine, Central Cultural Fund, Ministri of Cultural Affairs, Sri Lanka, 1985.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.