நாட்டுப்புறவியல்
நாட்டுப்புறவியல் (Folklore) என்பது நாட்டுப்புற மக்களின் பழக்கவழக்கங்கள், பண்பாடு, நம்பிக்கைகள், இலக்கியங்கள், கதைகள், பழமொழிகள், வாய்மொழி வரலாறு, விடுகதைகள், வாய்மொழி பாடல்கள், கலைகள் போன்றவற்றை சேகரித்து, வகைப்படுத்தி, தொகுத்து, ஆராய்ந்து அவற்றை ஆவணப்படுத்தும் துறையாகும். இத்தகைய வழக்குகள் பற்றி நாட்டுப்புறவியல் அறிவியல் முறைப்படி ஆய்வு செய்கின்றது. 1846 ஆம் ஆண்டிலேயே நாட்டுப்புறவியல் பற்றித் தற்காலக் கருத்தமைவில் முறையான ஆய்வுகள் தொடங்கின. வில்லியம் ஜான் தாமஸ் என்பவரே இத்துறையில் முன்னோடியாவார். தமிழகத்தில் இத்துறையில் பேராசிரியர் தே. லூர்து, பேராசிரியர் நா. வானமாமலை ஆகியோர் குறிப்பிடத்தக்க ஆய்வுகளை முன்னெடுத்துள்ளனர்.

நாட்டுப்புறவியலின் இன்றைய ஆய்வுகள் பெரிதும் விரிவடைந்து நாட்டுப்புறப் பண்பாட்டோடு தொடர்புடைய பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்குவதாக வளர்ந்துள்ளது. நாட்டுப்புற மக்களுடைய பல்வேறு அறிவுத்துறைகளும்கூட இன்று ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. நாட்டுப்புற மருத்துவம், கட்டடக்கலை போன்றனவும் இவற்றுள் அடக்கம்.