நவாலி தேவாலயத் தாக்குதல்

நவாலி தேவாலயத் தாக்குதல் என்பது 1995ம் ஆண்டு ஜூலை 9 இல் யாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் தேவாலயம் (சென். பீற்றர்ஸ்) மீது இலங்கை விமானப் படையினரால் நிகழ்த்தப்பட்ட குண்டுத்தாக்குதலைக் குறிக்கும். இத்தாக்குதலில் 65 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 150 பேருக்கு மேல் காயமடைந்தனர்.

நவாலி தேவாலயத் தாக்குதல்
இடம்நவாலி, யாழ்ப்பாணம், இலங்கை
நாள்ஜூலை 9, 1995 (+6 GMT)
தாக்குதலுக்கு
உள்ளானோர்
இலங்கைத் தமிழர்
தாக்குதல்
வகை
வான் தாக்குதல்
ஆயுதம்குண்டுத்தாக்குதல்
இறப்பு(கள்)65
காயமடைந்தோர்~150
தாக்கியோர்இலங்கை வான்படை

வலிகாமம் பகுதியில் இலங்கை அரசினரால் முன்னேறிப் பாய்தல் (லீட் ஃபோர்வேட்) இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட நாளில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. பலாலியில் இருந்தும் அளவெட்டியில் இருந்தும் ஷெல் தாக்குதல்களையும் குண்டுத்தாக்குதல்களையும் மக்கள் குடியிருப்புகளை நோக்கி மேற்கொண்டிருந்தனர். இதனால் மக்கள் உடுத்த உடையுடன் கையில் அகப்பட்ட பொருட்களுடன் வெளியேறிக் கொண்டிருந்தனர்.

அன்றைய தினம் குடாநாட்டின் பல்வேறு வீதிகளினூடாக அகதிகளாக வெளியேறிய மக்கள் நவாலி சென்.பீற்றர்ஸ் ஆலயத்திலும், நவாலி சின்னக்கதிர்காமம் முருகன் கோயிலிலும் தாகம் தீர்ப்பதற்காக அமர்ந்து களைப்பாறினர்.

அவ்வேளையில், யாழ். நகரப் பகுதியில் இருந்து அராலி நோக்கி வந்து கொண்டிருந்த புக்காரா விமானம் தொடர்ச்சியாக 13 குண்டுகளை மேற்படி இரு ஆலயங்கள் மீதும் வீசியது. இரண்டும் மாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற தாக்குதலில் பலத்த சேதமடைந்தன.

இத்தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள் உட்பட 65 பேர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர். சுமார் 150-இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

நினைவு நாள்

  • ஆண்டு தோறும் ஜூலை 9ம் நாள் நவாலி புனித பீற்றர்ஸ் ஆலயத்திலும், நவாலி சின்னக்கதிர்காமம் முருகன் ஆலயத்திலும் நினைவுகூரும் வழிபாடுகள் நடாத்தப்பட்டு வருகின்றன[1].
  • நவாலி வடக்கு சோமசுந்தரப் புலவர் வீதியிலும், நவாலி சென்.பீற்றர்ஸ் ஆலயப்பகுதியிலும் படுகொலைச் சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.