நகமியம்

நகமியம் அல்லது கெரட்டின் என்னும் நார்ப்புரதம், விலங்குகளின் நகங்களில் காணப்படும், நீரில் கரையாத, கெட்டியான புரதப்பொருள். இது சற்றே வேறுபட்ட வடிவங்களில் விலங்குகளின் மயிரில் காணப்படுவதால் மயிரியம் என்றும், மாடுகள் போன்ற பாலூட்டி விலங்குகளில் உள்ள கொம்புகளில் காணப்படுவதால் கொம்பியம் என்றும், பறவைகளின் இறகுகளில் காணப்படுவதால் இறகியம் என்றும் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. இதே நகமியப் புரதம், செல்களின் உறுதியான வடிவம் தரும் கட்டுமானப்பொருளாகவும் பயன்படுகின்றது. உயிரினங்களின் உடற்பொருட்களில் நகமியத்தின் கெட்டியான தன்மையானது, வண்டு போன்ற பல பூச்சியினங்களில் காணப்படும் பல்லினியப்பொருளால் (polysaccharide) ஆன கைட்டின் (chitin) (C8H13O5N)n) எனப்படும் பொருளுக்கு அடுத்ததாக உள்ளது.

நுண்ணோக்கியின் உதவியால் காணும் ஒரு கண்ணறை அல்லது செல்லின் உள்ளே இருக்கும் கட்டுமானப்பொருளாகிய நகமியம் என்னும் கெரட்டின் புரத இழைகளின் தோற்றம்.

விலங்குகளில் பல வகையான நகமியங்கள் உள்ளன.

பல வகையான நகமியங்கள்

நகமியம் அல்லது கெரட்டின் என்பது, தோலில் இருந்து வளரும் கெட்டியான பொருள்.

  • முதல்வகை அல்லது அகரவகை-நகமியம் (α-keratins) என்பது மயிர், கம்பளி (விலங்குகளின் கெட்டியான மயிர்), கொம்பு, நகம் அல்லது உகிர் ஆகியவற்றில் காணப்படும் நகமியம்.
  • கெட்டியான இரண்டாம் வகை அல்லது இகரவகை-நகமியம் ([β-keratins), ஊர்வன விலங்குகளின் முதுகுத்தோல்களில் கெடியான தட்டையான செதில்கள் போன்ற பகுதிகளிலும், பறவை அலகுகளிலும் இறகுகளிலும், ஆமை ஓடுகளிலும் காணப்படுவன.

கணுக்காலிகள், புறக்கூட்டுறைகள் (மாந்தர்களின் எலும்புக்கூடு உள்ளிருப்பது போல, வண்டுகள், பூச்சிகளில் உள்ள புறக்கூடு) முதலியவற்றில் கைட்டின் என்னும் பல்லினியப் பொருள்களுடன், நகமியம் என்னும் புரதமும் சேர்ந்திருக்கும். திமிங்கிலத்தின் மேல்தாடையில் காணப்படும், பல் போன்ற ஆனால் வளையக்கூடிய எலும்பு போன்ற பகுதிகள் நகமியம் பொருள்களால் ஆனவை.

உடலின் புறத்தோலில் காணப்படும் நகமியம், புறத்தோலியம் என்றே அழைக்கப்படும். அதே போல செல்களின் உள்ளே கட்டுமானப் பொருள்களில் ஒன்றாகக் காணப்படும் ஒருவகை மென்மையான நகமியப் புரதம், இடையக இழைப்புரதம் எனப்படும். செல்களில் காணப்படும் சைட்டோகெரட்டின்கள் (cytokeratins) இடையக இழைப்புரதம்தான். மயிரில் காணப்படும் நகமியம் (மயிரியம்) ஒரு கெட்டியான நகமியம்.

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:Fibrous proteins

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.