தொல்லியல் அருங்காட்சியகம், ஐஃகோல்

தொல்லியல் அருங்காட்சியகம், அய்கொளெ, இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பகல்கோட் மாவட்டத்தில் உள்ள அய்கொளெ என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு தொல்லியல் கள அருங்காட்சியகம் ஆகும். அய்கொளெ, ஹுனகுண்டாவுக்கு மேற்கே 21 கிலோமீட்டர் தொலைவிலும், பாதமிக்குக் கிழக்கே 47 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. அய்கொளெ, கிபி ஆறாம் நூற்றாண்டுக்கும் எட்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், பாதமியில் இருந்து ஆட்சி செலுத்திய முன்னைச் சாளுக்கியரின் பண்பாட்டுத் தலைநகராக விளங்கியது. வெவ்வேறு காலப்பகுதிகளைச் சேர்ந்தனவும், பல்வேறு பாணிகளைச் சேர்ந்தவையுமான நூற்றுக்கு மேற்பட்ட கோயில்கள் இந்த ஊரில் காணப்படுவதனால், இது ஒரு கட்டிடக்கலைச் சிறப்புப் பெற்ற இடமாக விளங்குகிறது.

இந்தத் தொல்லியல் கள அருங்காட்சியகம் அய்கொளெயிலுள்ள துர்க்கை கோயில் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. 1970 ஆம் ஆண்டில் ஒரு சிற்பக் கொட்டகையாக அமைக்கப்பட்ட இது பின்னர் 1987 ஆம் ஆண்டில் முழுமையாக தொல்லியல் அருங்காட்சியகமாக ஆக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தில் கிபி ஆறாம் நூற்றாண்டுக்கும் 15 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதிகளைச் சேர்ந்த இந்து, சமண, பௌத்த மதங்களைச் சேர்ந்த சிற்பங்களும், செதுக்கு வேலைப்பாடுகள் கொண்ட கட்டிடக்கலைக் கூறுகளும், கல்வெட்டுக்கள், நடுகற்கள் என்பனவும் வைக்கப்பட்டுள்ளன.

இந்த அருங்காட்சியகக் கட்டிடத்தினுள் ஆறு காட்சிக்கூடங்களும் வெளியே ஒரு திறந்த வெளிக் காட்சிக்கூடமும் உள்ளன. இவற்றுள் இரண்டு காட்சிக்கூடங்களில் வரலாற்றுக்கு முந்திய அரும்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஏனைய காட்சிக் கூடங்களில் பெரும்பாலும் சாளுக்கியர் கலைப் பாணியை விளக்கும் சிற்பங்களும், கட்டிடக் கூறுகளும் உள்ளன.

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.