துவாரபாலகர் (சைவ சமயம்)

துவாரபாலகர் என்பவர் இந்து சமயக் கோயில்களில் மூலவருக்கு முன்பு இருபுறமும் காணப்படும் வாயிற்காவலர்கள் ஆவர். சைவ சமயத்தில் மூல முதற்கடவுளாக கருதப்படும் சிவபெருமானுக்கு எண்ணற்ற துவாரபாலகர்கள் காணப்படுகிறார்கள். பெரும்பாலும் இவர்களை இணையாக அறியப்படுகிறார்கள்.

துவாரபாலகர் இணை

சிவாலயங்களில் எண்ணற்ற துவாரபாலகர்கள் உள்ளார்கள். அவர்களில் சண்டி - முண்டி,[1] சண்டன் - பிரசண்டன், திரிசூலநாதர் - மழுவுடையார், உய்யக்கொண்டார் - ஆட்கொண்டார், பிரம்மா - திருமால் ஆகிய ஐந்து இணை துவாரபாலகர்கள் பற்றிய செய்திகள் தெரிகின்றன.

சண்டன் - பிரசண்டன்

இவர்களில் சண்டன் - பிரசண்டன் இணை மிகவும் வலிமையானவர்கள் என்று கூறப்படுகிறது. தமிழில் தமிழில் தட்டிக் கேட்க ஆளில்லை என்றால் தம்பி சண்ட, பிரசண்டன் என்றொரு பழமொழி உள்ளது. [2]

திரிசூலநாதர் - மழுவுடையார்

துவாரபாலகர் திரிசூலநாதர்
துவாரபாலகர் மழுவுடையார்

திரிசூலநாதர் என்பவர் சிவபெருமானின் சூலமாவார். இவருடைய சிற்பத்தின் தலைப்பகுதியின் பின்பக்கத்தில் திரிசூல வடிவம் காணப்படுகிறது. [3]மழுவுடையார் என்பவர் சிவபெருமானின் கைகளில் இருக்கும் மழு ஆயுதமாவார்.[3] இவருடைய சிற்பத்தின் நெற்றிப் பகுதியில் மழுவேப் போன்ற புடைப்பு உள்ளது. [3]

சண்டி - முண்டி

பிரம்மனிடம் வரம் பெற்ற தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்ற மூன்று அரக்கர்கள், முப்புரம் எனும் தங்கம், வெள்ளி, இரும்பு எனும் மூன்று பறக்கும் கோட்டைகளைப் பெற்றனர். அவர்கள் பறக்கும் கோட்டையில் ஏறி எண்ணற்ற உலகங்களைப் பிடித்து தேவர்கள் போன்றோர்களே கொடுமை செய்தார்கள். தேவர்களும், பிரம்மா, திருமாலும் சிவபெருமானிடம் தங்களை காத்தருள வேண்டினர். சிவபெருமான் தேவர்களை தேராகவும், பிரம்மா தேரோட்டியாகவும், அந்த தேருக்கு திருமால் பறக்கும் சிறகாகவும் கொண்டு போர்தொடுத்தார். அந்த அரக்கர்கள் வசித்த முப்புரங்களை தன்னுடைய புன்சிரிப்பால் எரித்தார். அதனால் சிவபெருமானை முப்புரம் எரித்த நாயகன் என்ற பொருளில் திரிபுரதகனர் என்று அழைக்கின்றனர். அப்போது எழுந்த தீயில் பூவாக லிங்கம் தோன்றியது அதனை இரு அரக்கர்கள் கட்டிப்பிடித்தனர். அவர்களே சண்டி, முண்டி என்ற இரு துவாரபாலகர்களாக ஆனார்கள்.[4]

நந்தி- மகாகாளர்

நந்தி மற்றும் மகாகாளர் ஆகியோர் சிவபெருமானின் துவாரபாலகர்களாக சில கோயில்களில் உள்ளார்கள். கர்நாடக மாநிலம் தலக்காடு வைத்தியநாதர் கோயிலில் மூலவர் சன்னதிக்கு முன்பு இந்த இருவரும் காவலில் உள்ளார்கள். இச்சிவாலயத்தில் நந்தி ஆண் கல்லிலாலும், மகாகாளர் பெண் கல்லாலும் வடிவமைக்கப்பட்டுள்ளார்கள். இந்த நந்தி சிலையை தட்டினால் கண்டநாதம் என்ற மணி ஓசைக் கேட்கிறது. மகாகாளர் சிலையை தட்டினால் தாளநாதம் என்ற மணி ஓசைக் கேட்கிறது. [5]

நந்தியையும் மகாகாளரையும் பற்றி பன்னிரு திருமுறைகளில் பாடப்பட்டுள்ளது. [6]

உய்யக்கொண்டார் - ஆட்கொண்டார்

உய்யக்கொண்டார், ஆட்கொண்டார் இணையானது திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி நகரில் உள்ள சந்திரமௌலீசுவரர் கோயிலில் உள்ளனர். துவாரபாலகர்களுக்கு உரிய கதையுடனும், பின்னிரு கைகளில் ஆயுதங்களையும் தாங்கியபடி உள்ளார்கள்.

பிரம்மா - திருமால்

ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டம் உதயகிரிக்கு அருகே பைரவகொண்டா என்ற மலையின் மீது உள்ள குடைவரைக் கோயிலில் பிரம்மாவும், திருமாலும் துவாரபாலகர்களாக இருக்கின்றர்கள். குடைவரைக் கோயிலாக இருப்பதால் இருவர் திருவுருவங்களும் முன்புறம் செதுக்கப்பட்டிருக்க, லிங்க வடிவம் தனியாக கருவறைக்குள் செதுக்கப்பட்டுள்ளது.

சிறப்பு மிக்க துவாரபாலகர்கள்

தமிழ்நாட்டில் திண்டிவனம் நகரில் திந்திரிணீஸ்வரர் சிவாலயத்தில் ஒரே ஒரு துவாரபாலகர் மட்டுமே உள்ளார். திண்டி எனும் பெயருடைய துவாரபாலகர் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டமையால், திண்டிவனம் என இவ்வூர் பெயர் பெற்றது. பொதுவாக இந்துக் கோயில்களில் இரண்டு துவாரபாலகர்கள் இருப்பது வழமை. அவ்வாறு இல்லாமல் ஒரே ஒரு துவாரபாலகர் மட்டும் இருப்பது சிறப்பாகும். [7]

ஆதாரங்கள்

  1. வாயில் காவலரை இப்பொழுது, `திண்டி, முண்டி` என்கின்றனர். இவ்வசுரர்கள் சிவபெருமான் கோயிலில் வாயில் காவலர் ஆயினமையை அடிகளும் திருத்தோணோக்கத்து ஒன்பதாம் திருப்பாட்டில் குறித்தருளுதல் காண்க
  2. http://www.dinamalar.com/m/temple_detail.php?id=30440
  3. http://poetryinstone.in/lang/ta/2009/08/12/the-mystery-behind-the-horns-of-pallava-door-guardians
  4. http://naavaapalanigotrust.com/index.php/kovils/tn-kovil-list/2520-dindivanamsivan
  5. http://www.dinamalar.com/aanmeegamnews_detail.asp?news_id=2373
  6. வணங்கி யேத்த நந்திமா காள ரென்பார் திருவாவடுதுறை பாடல் எண் : 8
  7. http://temple.dinamalar.com/news_detail.php?id=57676
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.