திரிசங்கு

திரிசங்கு (Trishanku),அயோத்தியைத் தலைநகராகக் கொண்ட சூரிய வம்சத்து மன்னர் திரியருனியின் மகன். இயற்பெயர் சத்தியவிரதன். தருமநெறிப்படி வாழாத சத்திய விரதன் மீது கோபம் கொண்ட மன்னர் திரியருனி வசிட்டரின் ஆலோசனைப்படி சத்தியவிரதனை நாடு கடத்தினார். சத்தியவிரதன் காட்டை வாழ்ந்து வந்தான்.

மானிட உடலுடன் திரிசங்குவை சொர்க்கம் புகாதவாறு இந்திரன் தடுத்ததால்; விசுவாமித்திரர், பூமிக்கும் சொர்க்கத்திற்கு இடையே திரிசங்குவிற்கு தனி சொர்க்கம் அமைத்துக் கொடுத்தல்.

சில ஆண்டுகள் கழித்து மன்னர் திரியருனி வன வாழ்வு மேற்கொள்ளக் காட்டிற்குச் சென்ற நிலையில், நாட்டில் அநீதியும், பன்னிரண்டு ஆண்டுகள் பஞ்சமும் தலைவிரித்தாடியது. அப்போது விசுவாமித்திரர் குடும்பத்தை விட்டு, கடற்கரையில் கடுந்தவம் மேற்கொண்டிருந்தார். நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்த விசுவாமித்திரரின் மனைவி மக்கள் பட்டினியால் வாடிக்கொண்டிருந்ததை அறிந்த சத்தியவிரதன், அவர்களுக்கு உணவு அளித்து அடைக்கலம் கொடுத்தான்.

ஒரு நாள் சத்தியவிரதன் தன்னை நாடு கடத்த காரணமாக இருந்த வசிட்டரின் பசுவைக் கவர்ந்து கொன்று, அதன் இறைச்சியை விசுவாமித்திரரின் மனைவி மக்களுக்கும் கொடுத்துத் தானும் உண்டான். இதனால் கோபம் கொண்ட வசிட்டர், தகப்பனின் கோபம், பசுவைக் கொன்றது மற்றும் பசு இறைச்சியை உண்டது என்ற மூன்று பாவங்களுக்காகத் திரிசங்கு (மூன்று பாவங்களைச் செய்தவன்) என்ற பெயருடன் சண்டாளனாக விளங்குவாய் எனச் சத்தியவிரதனுக்கு சாபமிட்டார்.

தவ வாழ்வு முடித்துத் திரும்பி வந்த விசுவாமித்திரர், பஞ்சகாலத்தில் தன் மனைவி மக்களை ஆதரித்த சத்தியவிரதனுக்கு அவன் விருப்பப்படியே, மானிட உடலுடனேயே சொர்க்கம் செல்ல அருளினார். ஆனால் மனித உடலுடன் சொர்க்கத்திற்கு வரும் திரிசங்குவை இந்திரன் தடுத்து நிறுத்தியதால், விசுவாமித்திரர், பூமிக்கும் சொர்க்கத்திற்கும் நடுவில் திரிசங்குவிற்குத் தனி சொர்க்கம் அமைத்துக் கொடுத்தருளினார்.[1] இதனால்தான் இரண்டும் கெட்டான் மனநிலையில் இருப்பவர்களைத் திரிசங்கு நிலையினர் என்று அழைக்கும் வழக்கம் உள்ளது.

திரிசங்குவின் கதை, இராமாயணம், பாலகாண்டத்தில் இராமருக்கு விசுவாமித்திரர் கூறுவதாக அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

  1. http://www.gita-society.com/scriptures/ALL18MAJORPURANAS.IGS.pdf பிரம்ம புராணம், பக்கம் 10 மற்றும் 11
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.