தலையோடு

தலையோடு (Skull) என்பது மனிதர்கள் உட்பட பல விலங்குகளில், முகத்திலுள்ள உறுப்புக்களையும், மூளையையும் பாதுகாத்து இருக்கும் திடமான எலும்பாகும். இது இரு பகுதிகளை உள்ளடக்கியது. அவையாவன: மூளையைச் சுற்றி ஒரு குழி போன்ற அமைப்பைக் ஏற்படுத்தியிருக்கும் மண்டையோட்டு எலும்புகள் (Cranium), மற்றும் முகத்தில் வாய்ப் பகுதியைத் தாங்கி நிற்கும் தாடையெலும்பு (Mandible) உள்ளிட்ட ஏனைய முகவெலும்புகள். தலையோடானது, விலங்குகளின் எலும்புக்கூட்டின் ஒரு பகுதியாகும்[1][2].

அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள மனித ஆண் தலையோட்டின் மாதிரி

மனித தலையோடு

மனித தலையோடு
Human skull side simplified
Human skull front bones
இலத்தீன் cranium
தொகுதி மனித எலும்புக்கூடு
Dorlands/Elsevier s_13/12740407

முதிர்ந்த மனித தலையோடானது 22 எலும்புகளால் ஆனது. தாடையெலும்பு தவிர்ந்த ஏனைய எலும்புகள் யாவும், மிகச் சிறிய அசைவுகளையே கொண்ட இறுக்கமான தையல்மூட்டுக்களால் (sutures) பொருத்தப்பட்டு இருக்கும். இவற்றில் 8 எலும்புகள், தட்டையான உருவத்தில், மூளையைச் சுற்றி அமைந்திருந்து மூளைக்குப் பாதுகாப்பளிக்கும் மண்டையோட்டு எலும்புகளாகும். ஏனைய 14 எலும்புகள் முகத்துக்கு பாதுகாப்பளிக்கும் முகவெலும்புகள் ஆகும். இவை முகத்திலுள்ள கண், காது, மூக்கு, வாய் போன்ற உறுப்புக்களின் அமைவிடம், தொழிற்பாட்டுக்கு உதவியாக இருக்கும். வாய்ப்பகுதிக்கு பாதுகாப்பையும், உறுதியையும் கொடுக்கும் எலும்பு தாடையெலும்பு ஆகும்.

தலையோடானது முள்ளந்தண்டு நிரலால் தாங்கப்பட்டிருக்கும்.

ஆண்/பெண் தலையோடுகளில் வேறுபாடு

ஆண்களின் தலையோட்டுக்கும், பெண்களின் தலையோட்டுக்கும் இடையில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஆரம்ப நிலைகளில் பெரிய வேறுபாடுகள் இல்லாவிட்டாலும், பிந்திய நிலைகளில் இவையிரண்டுக்கும் வேறுபாடு உருவாகி இருக்கும். பெண்களின் தலையோடு ஆண்களின் தலையோட்டைவிட சிறியதாக இருப்பதுடன், இலகுவானதாக (lighter) இருக்கும். ஆண்களைவிட, பெண்களில் தலையோடானது கிட்டத்தட்ட 10% அளவு குறைந்த நிலையிலேயே காணப்படும்[3]. ஆனாலும் ஆண்களின் உருவம், பெண்களின் உருவத்தைவிட பொதுவாக பெரியதாக இருப்பதனாலேயும் இந்த வேறுபாடு இருக்கலாம் என்ற கருத்தும் உண்டு. ஆண்களின் தலையோட்டு எலும்புகள், பெண்களிலுள்ள எலும்புகளைவிட தடித்தவையாக இருப்பதாகவும் அறியப்படுகின்றது. பெண்களின் நெற்றியெலும்பு செங்குத்தாகதாகவும், ஆண்களில் சரிவானதாகவும் இருக்கிறது. பெண்களின் தலையோடு, ஆண்களைவிட கூடியளவு வட்டமானதாக இருக்கும். ஆண்களின் தாடையெலும்புகள் அகன்றவையாகவும், பெரியவையாகவும் இருக்கும்.

ஆனாலும் இந்த இயல்புகள் யாவும் உறுதியாக வரயறுக்க முடியாதவையாக இருக்கும். வெவ்வேறு சனத்தொகையிலிருந்து தலையோட்டை ஒப்பிட்டு ஆண்களையும் பெண்களையும் இனம்பிரித்தல் கடினமாகும்.

மேலதிக படங்கள்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.