த புரோசிடிங்சு ஆஃவ் த நேசனல் அக்காடமி ஆஃவ் சயன்சு

த புரோசிடிங்ஸ் ஆஃவ் த நேஷனல் அக்காடமி ஆஃவ் சயன்சஸ் ஆஃவ் த யுனைட்டட் ஸ்டேட்ஸ் ஆஃவ் அமெரிக்கா (The Proceedings of the National Academy of Sciences of the United States of America) என்னும் ஆய்விதழானது ஐக்கிய அமெரிக்காவின் நாடளாவிய அறிவியல் கலைகளுக்கான கல்விமன்றம் (United States National Academy of Sciences) என்னும் நிறுவனத்தின் ஏற்புமுத்திரை பெற்ற ஆய்விதழ் ஆகும். இதனை முதலெழுத்துச் சுருக்கமாக பிநாஸ் (PNAS) என்று அழைப்பர். இவ் ஆய்விதழ் 1915 ஆண்டுமுதல் வெளியாகி வந்துள்ளது. இதில் அறிவியலில் முன்னணியான புத்தாய்வுகள் பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் வெளியாகும். பெரும்பாலும் இதில் வெளியாகும் ஆய்வுக்கட்டுரைகள் உயிரியல், மருத்துவ இயல் துறைகளைச் சார்ந்ததாக இருப்பினும் பிற துறைகளாகிய இயற்பியல் வேதியியல், கணிதம், குமுக அறிவியல் (social sciences, குமுகவியல்) துறை கட்டுரைகளும் வெளியாகும். இது கிழமை தோறும் (வாரந்தோறும்) அச்சிடப்பட்டு வெளியாகும் ஆய்விதழ். இணையவழி மின்னுலகில் நாள்தோறும் முன்பதிப்பாகவும் வெளியிடப்படுகின்றது.

The Proceedings of the National Academy of Sciences of the United States of America என்னும் ஆய்விதழிழ் ஒன்றின் முகப்பு

ஆய்விதழின் தாக்கம்

பிநாஸ் (PNAS) என்னும் இவ் ஆய்விதழை ஆய்வாளர்கள் உலகெங்கும் பரவலாக படிக்கின்றார்கள். இவ் ஆய்விதழின் குறிக்கோளின் படி, இதில் வெளியாகும் ஆய்வுக்கட்டுரைகளை ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு இலவசமாக யாரும் இணையவழி படித்துப் பயன்பெற உரிமை வழங்குகின்றது. அல்லது கட்டுரைஆசிரியர்கள் விரும்பி ஒப்பியிருந்தால் உடனேயும் இலவசமாக படிக்க இயலும். இந்த ஆறுமாத இடைவெளி என்னும் கட்டு இல்லாமல் உடனேயே அணுகவும் சில வகையான வெளியீடுகளுக்கும் (எ.கா : கல்லோக்கியா colloquia.), 144 நாடுகளுக்கு இந்த ஆய்விதழ் நிறுவனம் வாய்ப்பளிக்கின்றது. இவ்வாய்விதழின் உள்ளடக்கத்தை யாரும் மின்னஞ்சல் வழி பெறலாம்.

பிநாஸ் ஆய்விதழ் ஐக்கிய அமெரிக்க அரசிடம் இருந்தோ அல்லது ஐக்கிய அமெரிக்காவின் நாடளாவிய அறிவியல் கலைகளின் மன்றத்தில் இருந்தோ நேரடியாக எந்த உதவிப்பணத் தொகையும் பெறுவதில்லை ஆகையால், தன்வருமானத்தில் இருந்தே ஆய்விதழின் வெளியீட்டுச் செலவுகள் செய்யவேண்டியிருப்பதால் ஆய்வுக்கட்டுரைகள் எழுதுவோரோ அவர்களுடைய நிறுவனங்களோ வெளியிட கட்டணம் செலுத்த வேண்டும்.

ஆய்விதழின் தாக்கத்தை அளவிட பயன்படும் தாம்சன் சுட்டி (Thomson ISI) எண்ணானது இவ்விதழுக்கு 2004 ஆம் ஆண்டில் 10.452 ஆகவும், 2005 ஆம் ஆண்டு 10.231 ஆகவும், 2006 ஆம் ஆண்டு 9.643 ஆகவும் உள்ளது. இந்த தாம்சன் தாக்கச் சுட்டி எண் அதிகமாக இருந்தால் அதிக அளவு இந்த ஆய்விதழின் கட்டுரைகள் எடுத்துக்காட்டாக சுட்டப்பட்டுள்ளது என்று பொருள். பிநாஸ் ஆய்விதழானது 1994-2004 ஆகிய ஆண்டுப்பகுதியில் 1,338,191 முறை மேற்கோள்களாக சுட்டப்பட்டு உலகிலேயே இரண்டாவதாக அதிகமுறை சுட்டப்பட்ட ஆய்விதழாக உள்ளது (த ஜொர்ணல் ஆஃவ் பயோலாஜிக்கல் கெமிஸ்ட்ரி (Journal of Biological Chemistry) என்னும் உயிரிய வேதியல் ஆய்விதழ்தான் 1,740,902 முறை சுட்டப்பட்டு ஆய்விதழ்கள் யாவற்றினும் அதிகம் சுட்டு பெற்ற இதழாக நின்று முதலிடம் வகிக்கின்றது)

வெளி இணைப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.