ஜீவா (ஓவியர்)

ஓவியர் ஜீவா என்று பரவலாக அறியப்படும் வே. ஜீவானந்தன் (பி. மார்ச் 15, 1956) ஒரு தமிழ் ஓவியர், திரைப்பட விமர்சகர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவரது தமிழ்த் திரைப்படங்கள் பற்றிய திரைச்சீலை என்னும் நூல் 2010ம் ஆண்டுக்கான இந்திய தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த திரைப்படப் புத்தகம் பகுப்பில் சிறப்புக் குறிப்பு விருது வென்றது.[1]

ஓவியர் ஜீவா
பிறப்புவே. ஜீவானந்தன்
மார்ச்சு 15, 1956(1956-03-15)
கோயம்புத்தூர் மாவட்டம்
தேசியம்இந்தியா
அறியப்படுவதுஓவியர்,எழுத்தாளர்

வாழ்க்கைக் குறிப்பு

கோயம்புத்தூரைச் சேர்ந்த ஜீவா, புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட தட்டி விளம்பர ஓவியரான வேலாயுதம் பிள்ளையின் மகனாவார். கோவை கிக்கானி பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த ஜீவா, கோவை அரசுக் கலைக் கல்லூரியில் அரசறிவியலில் இளங்கலைப் பட்டமும், சென்னை மாநிலக் கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார். பின் கோயம்புத்தூர் அரசு சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பு பட்டம் பெற்றார். ஜீவா முறைப்படி ஓவியக் கலையை இவர் கற்கவில்லை; தானாகவே ஓவியங்களை வரையத் தொடங்கினார். கோவை சித்திரகலா அகாதமியின் தலைவர் பிரகாஷ் சந்திராவிடன் நவீன ஓவிய முறையினைப் பயின்றார். 1981ல் தந்தை இறந்த பிறகு, அவரது “சினி ஆர்ட்ஸ்” தட்டி விளம்பர நிறுவனத்தின் பொறுப்பேற்று இன்று வரை நடத்தி வருகிறார். இதுவரை ஆயிரக்கணக்கான திரைப்பட தட்டி ஓவியங்களை வரைந்துள்ளார்.

1978 முதல் ஜீவாவின் ஓவியங்கள் சித்திரகலா அக்காதமியின் ஓவியக் கண்காட்சிகளில் இடம் பெற்று வந்துள்ளன. சென்னை, கோவை, பெங்களூர் போன்ற் ஊர்களில் இக்கண்காட்சிகள் இடம் பெற்றுள்ளன. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் குறளோவியங்களை வரைந்த 133 ஓவியர்களுள் இவரும் ஒருவர். சூரிக் நகர நாடகக் குழுக்களுள் ஒன்றான ஷால்பியேல்ஹாச் சூரிக் (Schauspielhaus Zürich) குழுவுக்காக 20 ஓவியங்களை வரைந்துள்ளார். சப்பான் மற்றும் மகாராட்டிர மாநில அரசுகளின் கூட்டு முயற்சியாக உருவாக்கப்பட்ட அஜந்தா-எல்லோரா ஆவணப்படத்துக்காக ஓவியங்கள் வரைந்துள்ளார். வார்த்தை, உயிர்மை, வீடு, ஓம்சக்தி உள்ளிட்ட தமிழ் சிற்றிதழ்கள் பலவற்றில் சிறுகதைகளுக்கு படம் வரைந்துள்ளார். எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் புதினங்கள் பலவற்றுக்கும் அட்டைப் படங்களை வரைந்துள்ளார். 2009ம் ஆண்டு பொதுவுடமைக் கட்சித் தலைவர் ஜீவானந்தத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அவரது வாழ்க்கைப் பற்றிய ஓவியங்களை வரைந்து கண்காட்சி ஒன்றை நடத்தினார். ஜீவா ஒரு திரை விமர்சகரும் கூட. 1980களில் மாணவர் பத்திரிக்கையாளராக கல்கி இதழில் திரை விமர்சனங்கள் எழுதினார். பல இலக்கியச் சிற்றிதழ்களில் ஓவியராகவும், புதினங்களின் அட்டை வடிவமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். மாலனின் திசைகள் சிற்றிதழிலும் பணியாற்றியுள்ளார்.

தற்போது கோவை சித்திரக்கலா அக்காதமியின் தலைவராக பணியாற்றி வருகிறார். கோவை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள கல்லூரிகளில் ஓவியம் மற்றும் கலை குறித்து விரிவுரைகள் ஆற்றி வருகிறார். ஞாயிறு தோறும் மாணவர்களுக்கு ஓவிய வகுப்புகளையும் எடுத்து வருகிறார். இவரிடம் பயின்றவர்கள் தமிழ்த் திரைப்படத்துறையில் கலை இயக்குனர்களாகவும் ஒளிப்பதிவாளர்களாகவும் ஆகியுள்ளனர். 2008-09 காலகட்டத்தில் கோவை மத்திய சிறையில் கைதிகளுக்காக ஓவிய வகுப்புகள் எடுத்துள்ளார். 2011ம் ஆண்டு இவரது “திரைச்சீலை” நூல், இந்திய தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த திரைப்பட நூல் பகுப்பில் “சிறப்பு குறிப்பு விருது” (சான்றிதழ் உண்டு, பரிசுத்தொகை கிடையாது) வென்றது. ஜீவாவின் முதல் நூலான இது, பல ஆண்டுகளாக “ரசனை” இதழில் அவர் எழுதிய திரைப்படக் கட்டுரைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றின் தொகுப்பாகும். இது தவிர “அசையும் படம்” என்ற நூலையும் எழுதியுள்ளார்.

ஜீவாவின் மனைவி பெயர் தமிழரசி. இவர்களுக்கு ஆனந்த், மீனா என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். ஜீவாவின் சகோதரர் வே. மணிகண்டன் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்.

எழுதிய நூல்கள்

  • திரைச் சீலை [2]

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.