ஜான்சன் (இசையமைப்பாளர்)

ஜான்சன் (Johnson, மலையாளம்: ജോൺസൺ, ஜோன்சன், 26 மார்ச் 1953 – 18 ஆகஸ்ட் 2011) ஒரு புகழ்பெற்ற மலையாள இசையமைப்பாளர்.

ஜான்சன்
ജോൺസൺ
பிறப்புமார்ச்சு 26, 1953(1953-03-26)
திரிச்சூர், கேரளம், இந்தியா
இறப்பு18 ஆகத்து 2011(2011-08-18) (அகவை 58)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
அறியப்படுவதுஇசையமைப்பாளர்

வாழ்க்கைச் சுருக்கம்

1953ல் திரிச்சூர் அருகே நெல்லிக்குந்நு என்ற ஊரில் இசைப்பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்தார் ஜான்ஸன். அவரது தந்தை ஒரு வங்கி ஊழியர். ஜான்ஸன் சர்ச்சில் புகழ்பெற்ற பாடகராக இருந்தார். பெண்குரலில் பாடுவதில் இருந்த திறமையால் மெல்லிசை நிகழ்ச்சிகளில் பாடும் வாய்ப்புகள் வந்தன. 1968ல் ஜான்ஸனும் அவரது நண்பர்களும் சேர்ந்து வாய்ஸ் ஆஃப் திரிச்சூர் என்ற இசைக்குழுவை உருவாக்கினார்கள். ஜான்ஸன் சிறந்த ஆர்மோனிய கலைஞர். புல்லாங்குழல், டிரம்ஸ், வயலின் போன்றவற்றையும் அவர் இசைப்பார்

விரைவிலேயே மெல்லிசைக்குழு மிகவும் புகழ்பெற்றது. ஒருகட்டத்தில் அதில் ஐம்பது உறுப்பினர்கள்கூட இருந்தார்கள். அவர்களின் குழுவின் நிகழ்ச்சிகளில் பாடகர் ஜெயச்சந்திரன் வந்து பாடுவதுண்டு. ஜெயச்சந்திரன் அவரை இசையமைப்பாளர் ஜி தேவராஜனுக்கு அறிமுகம் செய்தார். 1974ல் தேவராஜன் தன்னுடன் சேர்ந்து பணியாற்ற ஜான்ஸனை சென்னைக்கு கூட்டிவந்தார். ஜான்ஸன் தேவராஜனின் இசைக்குழுவில் அக்கார்டின் வாசிக்க ஆரம்பித்தார்.நான்குவருடங்களில் ஆரவம் படத்தில் பின்னணி இசையமைப்பாளராக அறிமுகமானார்

ஜான்ஸன் அமைத்த பிரேமகீதங்கள் ஸ்வப்னம் வெறுமொரு ஸ்வப்னம் போன்ற பாடல்கள் கேரளத்தில் இன்றுவரை பெரும் புகழுடன் இருப்பவை. ஜான்சன் பத்மராஜனிடமும் நெருக்கமானவராக இருந்தார். யதார்த்தச்சித்தரிப்பும் நுட்பமான மெல்லுணர்வுகளும் கொண்ட பத்மராஜன் படங்களில் அவரது இசை உணர்ச்சிகரமான ஒரு அம்சமாக இருந்தது. பத்மராஜனின் கடைசிப்படமான ஞான் கந்தர்வன் வரை அவரது 17 படங்களில் ஜான்ஸன் பணியாற்றியிருக்கிறார். இயக்குநர் சத்யன் அந்திகாடும் ஜான்ஸனுக்கு மிக நெருக்கமானவர். அவரது 25 படங்களில் ஜான்ஸன் பணியாற்றியிருக்கிறார். கணிசமான பரதன் படங்களுக்கும் இசையமைத்தவர் அவரே

ஆனால் 1995களுக்குப் பின் அவரது இசையில் தளர்ச்சி ஏற்பட்டது. அவர் மெல்லமெல்ல ஒதுங்கிக் கொண்டார் என்றே சொல்லவேண்டும். 2000த்துக்குப் பின்னர் அவர் ஆறுவருடம் இசையமைக்கவேயில்லை. 2006ல் ஃபோட்டோகிராஃபர் என்ற படத்துக்கு இசையமைத்தார். அந்தப்படத்தின் பாடல்கள் அதே தரத்தில் இருந்தன, வெற்றியும் அடைந்தன. ஆனாலும் அவருடைய இசை வேகம் கொள்ளவில்லை

ஜான்ஸன் ஒரே ஒரு பாடல் பாடியிருக்கிறார், தமிழில். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் கண்களால் கைது செய் படத்துக்காக தீக்குருவி என்ற பாடல்.

ஜான்ஸன் 2011 ஆகஸ்ட் 18 அன்று சென்னையில் மாரடைப்பால் இறந்தார். அவர்ருக்கு ஷான் , ரென் என இரு பிள்ளைகள். மனைவி ராணி.

விருதுகள்

ஜான்சன் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை 1994ல் பொந்தன்மாட என்ற படத்துக்காக பெற்றார். அடுத்த வருடம் சுகிர்தம் படத்துக்காக மீண்டும் தேசியவிருது பெற்றார். சிறந்த இசையமைப்புக்காக ஓர்மைக்காய் [1982] வடக்கு நோக்கி யந்திரம் , மழவில் காவடி [1989] அங்கினெ ஓரு அவதிக்காலத்து [1999] ஆகிய படங்களுக்காக மூன்றுமுறை கேரள அரசு விருது பெற்றார். பின்னணி இசைக்காக சதயம் [1992] சல்லாபம் [1996] ஆகியபடங்களுக்காக கேரள அரசு விருது கிடைத்தது. 2006ல் மாத்ருபூமி விருது போட்டோகிராபர் படத்துக்காக கொடுக்கப்பட்டது

பங்களிப்பு

ஜான்ஸனின் முக்கியமான பங்களிப்பு பின்னணி இசைக்கோர்ப்பிலேயே என்று விமர்சகர்கள் சொல்கிறார்கள். மலையாளத்தில் உருவாகிவந்த புதிய அலை திரைப்படங்களுக்கு பொருத்தமான மென்மையான, மௌனம் நிறைந்த இசையை அவர் அளித்தார். படத்தை விளக்கவோ மிகையாக்கவோ முயலாமல் மெல்லிய உணர்ச்சிகர இணைப்பை மட்டுமே அளிக்கக்கூடியது அவரது பின்னணி இசை.

ஜான்ஸனின் புகழ்பெற்ற மெட்டுகள் ஆடிவா காற்றே பாடிவா காற்றே ஆயிரம் பூக்கள் நுள்ளி வா , மெல்லெ மெல்லெ முகபடம் தெல்லொதுக்கி அல்லியாம்பல் பூவினே தொட்டுணர்த்தி , கோபிகே நின் விரல் தும்புரு மீட்டி , ஸ்வர்ணமுகிலே ஸ்வர்ண முகிலே ஸ்வப்னம் காணாறுண்டோ? , தங்கத்தோணி தென் மலயோரம் கண்டே’ ’ஸ்யாமாம்பரம்’

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.