ஜான் டென்வர்

ஜான் டென்வர் என அறியப்படும் ஜான் டச்சென்ட்ராப் (Henry John Deutschendorf, Jr. டிசம்பர் 31, 1943 – அக்டோபர் 12, 1997), ஓர் அமெரிக்க இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர், நடிகர், சூழலியல் போராளி, மனிதாபிமானப் போராளி என்ற மிகவும் அபூர்வமான கலவை கொண்ட ஆளுமைகள் நிறைந்தவர். அவரது பாடல்கள் மனதிற்கு உவகையளிப்பதாகவும் மிகுந்த நேசத்தோடு நெய்யப்பட்டதாகவும் இருக்கும். பெரும்பாலான பாடல்கள் அவரது இயற்கையின் மீதான காதலையும் இயற்கையோடு இணைந்த தூய்மையான வாழ்வையும் வெளிப்படையாகப் பேசுபவை. இயற்கையுலகின் கொடைச் செல்வங்களையும் அழகுகளையும் புகழ்பவை. சன் ஆன் மை சோல்டர்ஸ், ஆனிஸ் சாங், தாங்க் காட், ஐயாம் எ கண்ட்ரி பாய், ஐயாம் சார் போன்றவை முதலிடம் பிட்டித்த பாடல்களாகும். ராக்கி மவுண்டன் ஹை, ஜாண்டென்வர்ஸ் கிரேட்டஸ்ட் ஹிட், விண்ட் சாங் போன்ற இசைத்தொகுப்புகள் பரபரப்பாக விற்பனையானவை. புகழ்பெற்ற கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சியை ஐந்து முறை தொகுத்து வழங்கியவர்; தனது 53 ஆம் வயதில் தனியாக விமானம் ஓட்டிச்சென்று பசிபிக் கடலுள் விழுந்து இறந்து போனார்.[1]

ஜான் டென்வர்
பிறப்பு31 திசம்பர் 1943
றோஸ்வெல்
இறப்பு12 அக்டோபர் 1997 (அகவை 53)
மான்டெர்ரே
பணிSinger-songwriter, பாடகர், கவிஞர், இசையமைப்பாளர், இசைக் கலைஞர், நடிகர், பாடலாசிரியர், கித்தார் ஒலிப்பனர், record producer, வானோடி, எழுத்தாளர், பாடலாசிரியர், திரைப்பட நடிகர்
பாணிநாட்டிசை, ராக் இசை, கிராமிய ராக், மேற்கத்திய இசை, பரப்பிசை, கிராமிய இசை
இணையத்தளம்http://www.johndenver.com/

இளமைக்காலம்

ஜான் டென்வர் நியூமெக்சிகோ மாநிலத்தின் ரோஸ்வெல் என்ற நகரத்தில் 1943 இல் பிறந்தார்.[2] ஜான் டச்சென்ட்ராப் என்ற அவரது இயற்பெயரின் பொருள் ‘ஓர் ஜெர்மானியக் கிராமம்’ என்று தான். அவரது தந்தை ஜெர்மானிய வழித்தோன்றல்களைச் சேர்ந்தவ ரென்பதாலும், தாயின் பின்புலம் ஸ்காட்டிஷ்-ஐரிஷ்-ஜெர்மன் கலவை என்பதாலும் இப்பெயர் வைக்கப்பட்டது. தந்தை விமானப்படையில் விமான ஓட்டியாக இருந்தார்.[3] அடிக்கடியான வேலைமாற்றத்தின் காரணமாக அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களிலும், ஜப்பானிலும் கூட சிறிது காலம் வசிக்க நேர்ந்தது. நிரந்தரமாக ஓரிடத்தில் வாழாததால் தொடர்ந்த நண்பர்கள் யாருமில்லாமல் தனிமையில் வளர்ந்தார் ஜான்.[4]

இசை நாட்டம்

குழந்தைகளிடம் அன்பு காட்டாத தனது தந்தையோடு அடிக்கடி சண்டை வந்தது. அவரது தாயின் வீட்டிலேயே மிகவும் மகிழ்ச்சியானவராக இருந்தார். அக்காலத்தைய நாட்டுப்புற இசையை அங்குதான் கேட்டார். அவரது தாய்வழிப்பாட்டி ஜானின் இசையார்வத்தை ஒழுங்குபடுத்தியதோடு 40வருட பழமையான தனது கிப்ஸன் கித்தாரை பேரனுக்கு வழங்கினார். அப்போது ஜானுக்கு 11 வயது. ஜானின் தந்தை இசையை அறவே வெறுத்தார். இசை போன்ற பொழுதுபோக்கில் காலத்தை வீணடிக்காமல் வயலில் வேலைசெய்து சொந்தமாக ஜான் சம்பாதிக்கவேண்டும் என்று வற்புறுத்தினார். வீட்டில் சச்சரவுகள் அதிகமானதால் தனது பதினாறாவது வயதில் ஜான் டெக்ஸாஸில் அவர்கள் வாழ்ந்துகொண்டிருந்த வீட்டை விட்டு தந்தையின் காரை எடுத்துக் கொண்டு கலிபோர்னியாவுக்கு ஓடிப்போனார். அங்குள்ள அவரது குடும்ப நண்பர்கள் சிலர் இசையில் வளர உதவுவார்கள் என்று எண்ணியிருந்தார். அவர் சென்று சேர்வதற்கு முன்பாகவே அங்கு பறந்து சென்ற தந்தை பிடித்து இழுத்துவந்து பள்ளியில் மீண்டும் சேர்த்தார்.[5]

சிலவருடம் கழித்து, 1964 இல் கட்டடக்கலைப் படிப்பைப் பாதியில் விட்டு மீண்டும் கலிபோர்னியாவுக்குச் சென்றார்.[6] நாட்டுப்புற, ராக் இசைப்போக்குகள் கலிபோர்னியாவில் வேகமாக வளர்ந்து வந்த காலம் அது. உச்சரிப்பதற்கு கடினமாக இருந்த டச்சென்ட்ராப் என்ற பெயரை விடுத்து, அவர் விரும்பும் மலைகளின் மாநிலமான கொலராடோவின் தலைநகரான டென்வர் என்பதைத் தன் பெயரில் இணைத்துக் கொண்டார். இப்பெயர் மலைகள் சூழ்ந்த அமெரிக்காவின் மேற்குப் பகுதிகளின் மீதான அவரது ஈர்ப்பைக் குறிப்பதாகவும் இருந்தது. இரவு விடுதிகளிலும் சிறிய இசைக்குழுக்களிலும் இணைந்து இசையமைத்துப் பாடினார்.[7]

இரண்டு வருடப் போராட்டங்களுக்குப் பிறகு, வாஷிங்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற மூவர் இசைக்குழு Chad Mitchel Triவில் பாடுவதற்கான குரல் சோதனைத் தேர்வில் பங்குபெறும் வாய்ப்புக்கிட்டியது. அக்காலத்தில் அந்தக் குழு கல்லூரி வளாகங்களிலும் இசைநிகழ்ச்சி நடக்கும் உணவகங்களிலும் பிரசித்தி பெற்றவர்களாக இருந்தார்கள். கலந்து கொண்ட 250 போட்டியாளர்களிலிருந்து ஜான் டென்வர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இசைக்குழுவைத் தோற்றுவித்த சாட் மிச்செல் என்பவர் விலகிச் செல்ல டென்வர் பாடகராக, கிதார் மற்றும் பாஞ்சோ வாசிப்பவராக அக்குழுவில் இணைந்தார். அவர்களோடு இரண்டு வருடங்கள் இணைந்திருந்து தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு மேடைப்பாணிகளையும் கற்றுக்கொண்டார். அக்காலகட்டத்தில்தான் ‘ஒரு ஜெட்விமானத்தில் விடைபெறுகிறேன்’ (Leaving on a Plane) என்ற தனது முக்கியமான முதல்பாடலை எழுதி இசையமைத்திருந்தார்.[8]

குழுப்பாடராகக் கிடைத்த சொற்பப் பணத்தைச் சேர்த்து தனது முதலாவது இசைத்தொகுப்பைப் பதிவு செய்தார். 250 பிரதிகள் எடுத்து தனக்குத் தெரிந்த எல்லா முகவரிகளுக்கும் அஞ்சல் செய்தார். இசை விரும்பிகளாக அவர் அறிந்து வைத்திருந்தவர்களிடம் நேரில் வழங்கினார்.[8] நியூயார்க்கைச் சேர்ந்த மற்றொரு புகழ்பெற்ற மூவர் நாடோடி இசைக்குழுவான பீட்டர், பால் மற்றும் மேரி அத்தொகுப்பைக் கேட்டு Leaving on a Jet Plane பாடலை வெகுவாக விரும்பினர். அப்பாடலை அவர்கள் பதிவுசெய்து வெளியிட்ட போது அது புகழ்பெற்ற பில்போர்ட் தரவரிசைப் பட்டியலில் முதலாவது இடத்தைப் பெற்றது.[9] வியட்நாம் போர் நடந்துவந்த அக்காலத்தில் போருக்குச் செல்லும் வீரர்கள் விடை பெறும் பாடலாக பலர் அந்தப் பாடலைக் கண்டடைந்தார்கள். ஆனால் ஜான் டென்வருக்கு வெற்றி அப்போதும் ஒரு தொலைதூரக் கனவாகத்தான் இருந்தது.[7]

மேற்கோள்

  1. Maphis, Susan. "10 Best Selling Artists Of The 1970s". mademan.com. பார்த்த நாள் May 16, 2012.
  2. "''Ancestry of John Denver'' compiled by William Addams Reitwiesner". Wargs.Com. பார்த்த நாள் May 9, 2011.
  3. John-Denver.org
  4. "John Denver". The Daily Telegraph (London). October 14, 1997. http://www.telegraph.co.uk/news/obituaries/7733036/John-Denver.html.
  5. "FindArticles biodata". Findarticles.com. 2002. Archived from the original on July 8, 2012. http://archive.is/zPdy. பார்த்த நாள்: May 9, 2011.
  6. "John Denver Biography – life, family, children, name, death, wife, young, son, born, college, contract, marriage, year, Raised in Military Family". Notablebiographies.com. பார்த்த நாள் August 17, 2010.
  7. "Biography". john denver. பார்த்த நாள் August 17, 2010.
  8. john denver: current events
  9. Ruhlman, William (April 12, 1996). "Beginnings". Goldmine Magazine. பார்த்த நாள் January 24, 2010.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.