சோவியத் படைகளின் தாலின் காலிசெய்தல்

சோவியத் படைகளின் தாலின்காலிசெய்தல் (Soviet evacuation of Tallinn) என்பது இரண்டாம் உலகப் போரின் கிழக்குப் போர்முனையில் சோவியத் ஒன்றியத்தின் படைகள் நாசி ஜெர்மனியின் படைகளால் முற்றுகையிடப்பட்டிருந்த தாலின் நகரைக் காலிசெய்து கடல்வழியாகப் பின்வாங்கியதைக் குறிக்கிறது. ஆகஸ்ட் 1941 இல் நடைபெற்ற இக்காலிசெய்தல் நடவடிக்கை தாலின் பேரழிவு (Tallinn disaster) என்றும் சோவியத் டன்கிர்க் (Soviet Dunkerque) என்றும் அழைக்கப்படுகிறது.

தாலின் காலிசெய்தல்
இரண்டாம் உலகப் போரின் கிழக்குப் போர்முனையின் பகுதி

புகைமூட்டத்தின் போர்வையில் தப்பும் சோவியத் குரூசர் ரகக் கப்பல் "கிரோவ்" (ஆகஸ்ட் 1941)
நாள் ஆகஸ்ட் 27–31, 1941
இடம் ஃபின்லாந்து குடா
ஜெர்மானிய, ஃபின்லாந்திய வெற்றி
பிரிவினர்
 பின்லாந்து
 நாட்சி ஜெர்மனி
 சோவியத் ஒன்றியம்
தளபதிகள், தலைவர்கள்
அட்மிரல் விளாதிமிர் டிரிபுட்ஸ்
இழப்புகள்
மாண்டவர்: 12,000+ (குடிமக்கள் மற்றும் போர்வீரர்கள்)
13 பொர்க்கப்பல்கள்
34 சரக்குக் கப்பல்கள்

ஜூன் 22, 1941 அன்று சோவியத் தலைமை எதிர்பாராத வண்ணம், நாசி ஜெர்மனி சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுத்தது. சோவியத் கட்டுப்பாட்டில் இருந்த பால்டிக் நாடுகளான லித்துவேனியா, லாத்வியா, எஸ்டோனியா ஆகியவற்றை ஜெர்மானியப் படைகள் எளிதில் கைப்பற்றின. ஆகஸ்ட் மாத இறுதியில் எஸ்டோனியாவின் தலைநகர் தாலினை அவை முற்றுகையிட்டன. பால்ட்டிக் பகுதியில் இருந்த சோவியத் படைகளும் குடிமக்களும் தாலின்துறைமுகம் மூலம் கடல்வழியாகத் தப்ப முயன்றனர். இதனைத் தடுக்க ஜெர்மானிய மற்றும் ஃபின்லாந்தியக் கடற்படைகள் தாலின்துறைமுகத்துக்கு வெளியே கடலில் கண்ணிவெடிகளை இறைத்திருந்தன. ஜெர்மானியப் படைவளையம் இறுகியதால், ஆகஸ்ட் 27 ஆம் தேதி சோவியத் படைகள் தாலின் நகரைக் காலிசெய்து, துறைமுகத்தில் கப்பல்களில் ஏறத்தொடங்கின. இடைவிடாத ஜெர்மானிய குண்டுவீச்சுக்கிடையே ஐந்து நாட்கள் இக்காலிசெய்தல் நடைபெற்றது. சோவியத் செம்பதாகை பால்ட்டிக் கடற்படைப் பிரிவின் பாதுகாப்போடு, குடிமக்கள் மற்றும் படைகளைத் தாங்கிய நான்கு சோவியத் கப்பல் கூட்டங்கள் தாலினிலிருந்து கிளம்பின. ஜெர்மானிய வான்படை குண்டுவீசிகளின் தொடர் தாக்குதல்களிடையே சோவியத் கப்பல் கூட்டங்கள் தாலினிலிருந்து தப்பின. ஜெர்மானிய குண்டுவீச்சால் 13 சோவியத் போர்க்கப்பல்களும் 34 சரக்குக் கப்பல்களும் மூழ்கடிக்கப்பட்டன. ஏறத்தாழ 165 கப்பல்கள் தப்பி பத்திரமாக சோவியத் துறைமுகங்களுக்குச் சென்றன.[1][2][3]


குறிப்புகள்

  1. Potter, Elmar P.; Nimitz, Chester W. (1986). "Der Krieg in der Ostsee [The War at Sea in the Baltics]". in Rohwer, J.. Seemacht. Eine Seekriegsgeschichte von der Antike bis zur Gegenwart [Sea Power. A Naval History]. Herrsching: Manfred Pawlak Verlagsgesellschaft mbH. பக். 602–622. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3-88199-082-8.
  2. Finnish navy in Continuation War, year 1941
  3. Naval War in the Baltic Sea 1941-1945
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.