செவ்வாடு
செவ்வாடு அல்லது சிவலையாடு என்பது தமிழ்நாட்டைச் சேர்ந்த பாரம்பரிய செம்மறியாட்டு இனங்களில் ஒன்றாகும். இதில் அரிச்செவ்வாடு, கருஞ்செவ்வாடு என இரு வகைகள் உள்ளன. இவை இறைச்சித் தேவைக்காக வளர்க்கப்படுகின்றன. இந்த ஆடுகள் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் மேலநீலிதநல்லூர், மானூர், பாப்பாகுடி, ஆலங்குளம், நாங்குநேரி, பாளையங்கோட்டை, தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம் ஆகிய பகுதிகளில் அதிகம் வளர்க்கப்படுகின்றன. பெரும்பாலும் இவை கீழ்கரிசல் ஆடுகள் வளர்கப்படும் பகுதிகளிலேயே பெரும்பாலும் வளர்க்கப்படுகின்றன. தமிழகத்தில் இந்த இன ஆடுகள் மொத்தமாகவே 1.5 லட்சம் மட்டுமே உள்ளன.
விளக்கம்
இவை சிறிய அளவில் இருந்து நடுத்தர அளவிலான உடலமைப்பைக் கொண்டவை. இவை பழுப்பு நிறம் கொண்டவை. ஆண் செவ்வாடு கொம்புடையது. பெண் செவ்வாடு கொம்பற்றது. ஆண் செவ்வாட்டின் கொம்பின் நீளம் 13 செ.மீ. முதல் 51 செ.மீ. வரை அளவுடையதாக இருக்கும். இவ்வாட்டுக் குட்டி பிறந்தவுடன் 2.2 கிலொ எடையிருக்கும். ஆண்கிடா செவ்வாடு 28 கிலோ வரை எடையிருக்கும். பெண் செவ்வாடு 22 கிலோ வரை வளரும்.[1]
தனி இன அங்கிகாரம்
செவட்டின் மரபணு மாதிரிகளை எடுத்த நாகர் கோவில் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் ஆய்வு செய்து. அதன் உடற்கூறியலும், மரபு அமைப்பும் மற்ற ஆடுகளைவிட தனித்துவம் பெற்றிருந்தது என்பதை கண்டறிந்தது. ஆய்வு முடிவுகளை, தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை மூலமாக தேசிய கால்நடை மரபு வள அமைப்புக்கு சமர்ப்பித்தது. அதை நேரில் ஆய்வு செய்த வல்லுநர் குழு, 2016 செப்டம்பர் மாதம், செவ்வாடு இனத்தை தனி இனமாக அங்கீகரித்தது.[2]
மேற்கோள்கள்
- "2 ஆட்டினங்களுக்கு தேசிய அங்கீகாரம்". கட்டுரை. தீக்கதிர் (2016 செப்டம்பர்). பார்த்த நாள் 17 பெப்ரவரி 2018.
- ர.கிருபாகரன் (2016 நவம்பர் 6). "உடற்கூறு, மரபு அமைப்பில் தனித்துவம்: சர்வதேச அங்கீகாரம் பெற்ற திருநெல்வேலி ‘செவ்வாடு". செய்திக் கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 17 பெப்ரவரி 2018.