செம்பியன் கண்டியூர்

செம்பியன் கண்டியூர் (Sembiyankandiyur) என்பது தமிழ்நாட்டின், நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் காவிரி ஆற்றின் வடகரையில் குத்தாலத்திலிருந்து இரண்டு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு தொல்லியல் களமாகும்.[1]

செம்பியன் கண்டியூர்
அமைவிடம்தமிழ்நாடு, மயிலாடுதுறை
ஆள்கூற்றுகள்11.0851°N 79.8545°E / 11.0851; 79.8545
வகைபண்பாடு
State Party இந்தியா

தொல்லியல் அகழ்வாய்வு

2006 ஆம் ஆண்டின் துவக்கத்தில், பள்ளி ஆசிரியரான வி. சண்முகநாதன் என்பவரால் சிந்து எழுத்துக்களை ஒத்த எழுத்துகள் பொறிக்கப்பட்ட புதியகற்கால கோடாரி (கருவி) கண்டுபிடிக்கப்பட்டது.[2] இந்தக் கோடாரியானது கைகளால் செய்யப்பட்ட, வழவழப்பான கல் கோடாரியாகும், இதில் நான்கு சிந்து சமவெளி குறியீடுகள் இருந்தன.[3] இதில் உள்ள எழுத்துகளின் காலமானது கி.மு 1500 க்கு முற்பட்டது என்று கருதப்படுகிறது.

தமிழக தொல்லியல் துறையின் சிறப்பு ஆணையர் டி. எஸ். ஸ்ரீதரின் கூற்றுப்படி, இதில் நான்கு குறியீடுகள் அடையாளம் காணப்பட்டன. இந்தியக் கல்வெட்டாய்வாளரும் சிந்து சமவெளி எழுத்துகளின் ஆய்வாளருமான ஐராவதம் மகாதேவன்  இந்தக் கண்டுபிடிப்பானது தமிழ்நாட்டில் வாழ்ந்த புதிய கற்கால மக்களும் சிந்து சமவெளியில் வாழ்ந்த மக்களும் "ஒரே மொழியைப் பேசியவர்கள் அது திராவிட மொழிதான் இந்தோ ஆரிய மொழி அல்ல" என்பதற்கு இது உறுதியான சான்று என்கிறார்.  இந்தக் கண்டுபிடிப்பிற்கு முன்னர், சிந்து சித்திர எழுத்துகளானது தென்னிந்திய தீபகற்பத்தில், மகாராட்டிரத்தின் கோதாவரி சமவெளியில் பிரவர ஆற்றுப் பகுதியில் கிடைத்துள்ளன. இந்தக் கல்லானது வட இந்தியாவில் இருந்து வந்திருக்கலாம் என்ற கூற்றை திரு ஐராவதம் மகாதேவன் உறுதியாக மறுத்தார். இந்த கற்கள் முழுக்கமுழுக்க தென்னிந்திய பாறைவகையைச்சேர்ந்தது என்றார்.

இந்த கண்டுபிடிப்பு தொல்லியல் துறை வட்டாரங்களில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு, இந்திய தொல்லியல் ஆய்வு மையம் செம்பியன்கண்டியியூரில் அகழ்வு செய்ய முடிவுசெய்தது.

கற்கோடாரி கிடைத்த இடத்தில் நான்கு குழிகள் அகழப்பட்டன. அதில், வழவழப்பான களிமண்ணால் செய்யப்பட்ட சிறிய பானைகளும், வட்டில்களும், தட்டுகளும், கிண்ணங்களும், கறுப்பு, சிவப்பு நிற மட்கலன்களும், கறுப்பு நிற மட்கலன்களும், சிவப்பு மட்கலன்களும் இவற்றில் அடங்கும்.  மேலும், பெண்கள் விளையாடும் வட்ட வடிவ சில்லுகளும், சில எலும்புச் சிதைவுகளும் இங்கு கிடைத்தன.

முழுமையாக கிடைத்த பானைகளில் மீன், டமாரு, சூரியன், நட்சத்திரம், ஸ்வஸ்திக் போன்றவை வரையப்பட்டிருந்தன. இந்த கீறல்கள் கறுப்பு, சிவப்பு நிற மட்கலன்கள், கறுப்பு நிற மட்கலன்கள ்போன்றவற்றில் வரையப்பட்டிருந்தன சில குறியீடுகள் மீண்டும் மீண்டும் இடம்பெற்றிருந்தன.

மேற்கோள்கள்

  1. "செம்பியன் கண்டியூர்". அறிமுகம். தமிழ் இணையக் கல்விக் கழகம். பார்த்த நாள் 24 ஆகத்து 2018.
  2. "Discovery of a century" in Tamil Nadu
  3. Significance of Mayiladuthurai find

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.