செப்புக் காலம்

செப்புக் காலம் என்பது, மனித பண்பாட்டு வளர்ச்சியில், தொடக்ககால உலோகக் கருவிகள் தோன்றிய ஒரு கால கட்டம் ஆகும். கி.மு. 4300 க்கும், 3200 க்கும் இடைப்பட்ட செப்புக் காலத்தில், சிந்துவெளி நாகரிகப் பகுதிகளில் கிடைத்த செராமிக் பொருட்கள், தெற்கு துருக்மெனிஸ்தான், வடக்கு ஈரான் ஆகிய பகுதிகளில் கிடைத்த செராமிக் பொருட்களுடன் ஒத்திருக்கின்றன. இது, இக்காலத்தில் இப்பகுதிகளிடையே குறிப்பிடத்தக்க போக்குவரத்துக்களும், வணிகமும் நடைபெற்றிருப்பதைக் காட்டுகிறது [1].

ஐரோப்பாவுடன் ஒப்பிடும்போது, மத்திய கிழக்குப் பகுதிகளில் செப்புக்காலம் மிக முன்னதாகவே தொடங்கிவிட்டது. எனினும், செப்புக் காலத்திலிருந்து, முழுமையான வெண்கலக் காலத்துக்கான மாற்றம் ஐரோப்பாவில் மிக விரைவாக இடம்பெற்றது. செப்புக் காலம், மரபுவழியான முக்கால முறைக்கு (three-age system) உள்ளேயே ஒரு மாறும் காலமாக, புதிய கற்காலத்துக்கும், வெண்கலக் காலத்துக்கும் இடையே நிலவியது. செப்பு முதலில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. எனினும், தகரம் (tin) மற்றும் வேறு உலோகங்களுடன் சேர்த்துக் கலப்புலோகம் ஆக்குவது விரைவாகவே தொடங்கிவிட்டது. இதனால், செப்புக் காலத்தையும் அக்காலத்துக்குரிய பண்பாட்டையும் பிரித்து அறிவது கடினமானது.

இதனால், இப் பாகுபாட்டை, தென்கிழக்கு ஐரோப்பா, மேற்கு மற்றும் மத்திய ஆசியா போன்ற உலகின் சில பகுதிகளில் மட்டுமே தொல்லியலாளர்கள் பயன்படுத்துகிறார்கள். இப் பகுதிகளில் செப்புக் காலம் கி.மு. 4 ஆவது ஆயிரவாண்டுகளை அண்டி நிலவியது. சில சமயங்களில், அமெரிக்க நாகரிகங்கள் தொடர்பிலும் இப் பாகுபாடு பயன்படுத்தப்படுகின்றது. இப்பகுதிகளில், செப்பும், அதன் கலப்புலோகங்களும், ஐரோப்பியரின் வருகைக்கு முன்னமே பயன்படுத்தப்பட்டு வந்தது. மிகப் பழைய செப்பு அகழிடங்கள் இன்றைய மிச்சிகன் மற்றும் விஸ்கோசின் பகுதிகளில் உள்ளன. இவை, புதிய உலகில் காலத்தால் முந்தியவையாக இருப்பதுடன், உலகின் மிகப் பழையனவற்றுள்ளும் அடங்குகின்றன. இப்பகுதிகளில் செப்பு, கருவிகள் மற்றும் வேறு சாதனங்கள் செய்வதற்கும் பயன்பட்டது. இங்கே கிடைத்த இத்தகைய பொருட்களுடைய காலம் கி.மு 6000 தொடக்கம் கி.மு. 3000 வரை என்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

குறிப்புகள்

  1. பர்போலா, அஸ்கோ: "சிந்துவெளி எழுத்துக்கள் பற்றிய ஆய்வு (Study of the Indus Script)", ப 2,3. மே 2005 (ஆங்கில மொழியில்)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.