யுக்தேசுவர் கிரி
ஸ்ரீ யுக்தேஷ்வர் கிரி (ஆங்கிலம்:Sri Yukteswar Giri ) (எழுதப்படுவது: Sriyuktesvara, Sri Yukteshwar) (தேவநாகரி: श्रीयुक्तेश्वर गिरि, IAST: Śrīyukteśvara Giri, பெங்காலி: শ্রীযুক্তেশ্বর গিরী) (1855 மே 10 – 1936 மார்ச்சு 09)[1] இயற்பெயர் பிரியநாத் கரார் (பெங்காலி: প্রিয়নাথ কাঁড়ার) எனும் இவர், 'லஹிரி மகாசாயா' (Lahiri Mahasaya) என்பவரிடம் சீடராகவும்,[2] 'சத்யானந்த கிரி' மற்றும் 'பரமஹம்ச யோகானந்தர்' போன்றோர்க்கு குருவாகவும் இருந்துள்ளார்.[3] கிரியா யோகி (வேத ஜோதிடர்) என்று போற்றப்பட்ட இவர், பிரபல ஆன்மிக குருவாகவும், சிறந்த கல்வியாளராகவும் அறியப்படுகிறார்.[4]
சுவாமி ஸ்ரீ யுக்தேஷ்வர் கிரி Sri Yukteswar Giri | |
---|---|
![]() | |
பிறப்பு | மே 10, 1855 செராம்பூர், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 9 மார்ச்சு 1936 80) பூரி, ஒடிசா, பிரித்தானிய இந்தியா | (அகவை
இயற்பெயர் | பிரியநாத் கரார் |
குரு | லஹிரி மகாசாயா |
தத்துவம் | கிரியா யோகம் |
பிறப்பு
யுக்தேஷ்வர் கிரி, பிரித்தானிய இந்தியாவின் மேற்குவங்க மாநிலம் செராம்பூரில் வளமான குடும்பத்தில் 1855-ல் மே 10-ம் நாள் பிறந்தார். இவரது இயற்பெயர் பிரியநாத் கரார், இவர் சிறு வயதிலேயே தந்தையை இழந்து இளம் பருவம் முதலே ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டிருந்தார்.[1]
படிப்பு
பள்ளி, கல்லூரியில் அறிவுக்கூர்மை மிக்க மாணவராகத் திகழ்ந்த இவர் ஆங்கிலம், பிரெஞ்ச், இந்தி, பெங்காலி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவராக திகழ்ந்தார். கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் 2 ஆண்டுகள் பயின்றவர் பட்டங்கள் வாங்குவதற்காக அல்லாமல், அந்த பாடங்களைத் தெரிந்துகொள்ளவே கல்லூரிக்கு சென்றார். தேர்வு எழுதாமல், பட்டங்கள் பெறாமல் கல்லூரியில் இடைநிறுத்தி வெளியேறினார்.[5]
திருப்பம்
இளம் வயதில் திருமணமாகி 2 ஆண்டுகளில் மனைவியை இழந்த பிரியநாத் கரார், விவிலியம் (பைபிள்) பகவத் கீதை போன்ற ஆன்மீக நூல்களின் அறிஞராகவும், மற்றும் வானியல் கல்வியாளராகவும் கருதப்படுகிறார்.[6] பிரபல ஆன்மிக குருவான லாஹிரி மஹாசாயாவை 1884-ல் சந்தித்து, அவரது சீடரானார். ஆன்மிக நூல்களைப் படிப்பதும், ஆய்வுகள் மேற்கொள்வதும், பிறருக்குக் கற்றுக்கொடுப்பதும் இவரது முழுநேர பணியாக மாறிய அவ்வேளையில் இயற்பெயர் மாற்றி ஸ்ரீ யுக்தேஷ்வர் என்று அழைக்கப்பட்டார்.[6]
இவரை கிரியா யோகப் பாதையில் வழி நடத்திய குருவான லாஹிரி மஹாசாயாவை, அடிக்கடி சந்தித்தார். குருவின் குருவான மஹா அவதார் பாபாஜியை 1894-ல் சந்தித்தபோது; இவரது பின்னணி பற்றித் தெரிந்துகொண்ட பாபாஜி, விவிலியத்தையும் இந்துக்களின் ஆன்மிக நூல்களையும் ஒப்பிட்டு ஒரு நூல் எழுதச் சொன்னார்.[1]
சுவாமி பட்டம்
இவரது குருவின் குருவான, மகாவதார பாபா எனும் பாபாஜியின் கட்டளையை ஏற்று ‘கைவல்ய தரிசனம்’ (‘தி ஹோலி சயின்ஸ்’) என்ற நூலை எழுதி முடித்தார். இந்நூல் ஆங்கிலம், பிரெஞ்ச், இத்தாலி, சப்பான் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. அச்செயலுக்காக பாபாஜியே இவருக்கு ‘சுவாமி’ என்ற பட்டத்தை அளித்தார்.[6]
கல்விச்சேவை
தமது சொந்த ஊரான செராம்பூரில் இருந்த 2 அடுக்கு கட்டிட வீட்டை ஆசிரமமாக மாற்றி, அதற்கு ‘பிரியதாம்’ எனப் பெயரிட்டார். அங்கு மாணவர்கள் மற்றும், சீடர்களுடன் வசித்தார். மேலும், 1903-ல் ஒடிசா மாநிலம் புரியில் மற்றொரு ஆசிரமம் அமைத்து, கல்வியைப் பரப்ப இந்த 2 ஆசிரமங்களிலும் மாணவர்களுக்குப் பாடம் கற்பித்தார்.[7]
இலக்கியம்
‘சாது சபா’[8] என்ற அமைப்பை உருவாக்கிய யுக்தேஷ்வர் கிரி, இயற்பியல், உடலியங்கியல், புவியியல், வானியல், மற்றும் சோதிடக் கலை ஆகிய பாடங்களுக்கு பாடத்திட்டங்கள் வகுத்தார். சுய கட்டுப்பாடு, மனதை ஒருமுகப்படுத்துவது, ஆழமான ஆன்மிக உள்ளுணர்வு, அர்ப்பணிப்பு உணர்வு, கடுமையான ஒழுக்கம் ஆகியவற்றை மாணவர்களுக்கு போதித்தவர், அடிப்படை ஆங்கிலம், இந்தி மொழி கற்பிக்க ‘ஃபர்ஸ்ட் புக்’ என்ற நூலை எழுதினார்.[8]
சீடர்கள்
சோதிடக் கலையின் அடிப்படைகள் குறித்து ஒரு நூல் எழுதிய இவர், வானியல், அறிவியல் குறித்த ஆய்வுகளையும் மேற்கொண்ட யுக்தேஷ்வர்க்கு, 1910-ல் முகுந்தாலால் கோஷ் என்ற சீடர் இவரிடம் வந்து சேர்ந்தார். அவர் பின்னாளில் இவருடைய கிரியா யோக போதனைகளை உலகம் முழுவதும் பரவச்செய்த பரமஹம்ச யோகானந்தர் (Paramahansa Yogananda) என கருதப்படுகிறது. யுக்தேஷ்வரின் இன்னொரு முக்கிய சீடர் ஸ்ரீ சத்யானந்தா கிரி (en:Satyananda Giri) ஆவார்.[9]
இறப்பு
‘ஞானாவதார்’ என போற்றப்படும் சுவாமி ஸ்ரீ யுக்தேஷ்வர் கிரி தமது 81-வது அகவையில், 1936-ம் ஆண்டு மார்ச்சு 09-ம் நாள், பிரித்தானிய இந்தியாவின் ஒடிசா மாநிலம் புரி என்னுமிடத்தில் மகாசமாதி அடைந்தார்.[10]
புற இணைப்புகள்
மேற்கோள்கள்
- "Swami Sri Yukteswar". www.yogananda-srf.org (ஆங்கிலம்) (© 2016). பார்த்த நாள் 04 சூன் 2016.
- www.yogananda.com.au | Swami Sri Yukteswar | LIFE | (ஆங்கிலம்) வலைக்காணல்: சூன் 4 2016
- kriya.org | Swami Shriyukteshwar Giri | (ஆங்கிலம்) வலைக்காணல்: சூன் 4 2016
- "Swami Sri Yukteswar". www.angelfire.com (ஆங்கிலம்) (2016). பார்த்த நாள் 04 சூன் 2016.
- "Swami Shriyukteshwar Giri". kriya.org (ஆங்கிலம்) (2008-2014). பார்த்த நாள் 05 சூன் 2016.
- "A Yukteswar Book". oaks.nvg.org (ஆங்கிலம்) (© 1998–2016). பார்த்த நாள் 06 சூன் 2016.
- "Sri Yukteswar Mahasamadhi — 9 March 1936". www.yogananda.com.au (ஆங்கிலம்) (2016). பார்த்த நாள் 08 சூன் 2016.
- "Biography of Swami Sri Yukteswar Giri-§Spiritual life". www.astrotheme.com (ஆங்கிலம்) (2016). பார்த்த நாள் 08 சூன் 2016.
- "Brief Biography of Sri Yukteswar Giri". escuelavaloresdivinos (ஆங்கிலம்) (© 2016). பார்த்த நாள் 08 சூன் 2016.
- "Gurus ›› Yog gurus ›› SRI YUKTESHWAR GIRI-Profile". www.indianscriptures.com (ஆங்கிலம்) (15-02-2014). பார்த்த நாள் 08 சூன் 2016.