சுற்றுயர்த்தி

சுற்றுயர்த்தி (paternoster) என்பது, கட்டிடங்களில் தளங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு உதவும் ஒரு வகை உயர்த்தி ஆகும். இது சங்கிலித் தொடராக இணைக்கப்பட்ட, கதவுகள் அற்ற, உயர்த்திப் பேழைகளைக் கொண்டது. தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கும் இதன் ஒரு பக்கம் மேல் நோக்கியும், மறு பக்கம் கீழ் நோக்கியும் மெதுவாக இயங்கிக் கொண்டிருக்கும். இதனைப் பயன்படுத்த விரும்புபவர்கள் சுற்றுயர்த்தி இயங்கிக் கொண்டிருக்கும் போதே உள்ளே ஏறவோ அதிலிருந்து இறங்கவோ வேண்டும். பழக்கப்பட்டவர்களுக்கு இது கடினமானது அல்ல. இதனால், இவை பொதுவாக, அலுவலகங்கள் போன்ற இடங்களில் அங்கு வேலை செய்வோர் பயன்படுத்துவதற்காக அமைக்கப்படுகின்றன.

animated scheme of a paternoster
வீயன்னா பல்கலைக் கழகத்தில் உள்ள ஒரு சுற்றுயர்த்தி. 1950களின் இறுதியில் பொருத்தப்பட்டது.

இது முதன்முதலாக இலண்டனைச் சேர்ந்த ஜே. ஈ. ஹால் என்பவரால் 1884 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. அவர் இதனைச் சுற்று உயர்த்தி என்னும் பொருள்படும் ஆங்கிலச் சொல்லான Cyclic Elevator என்னும் சொல்லால் குறித்தார். இதன் இயக்கம், தியானத்துக்கு உதவும் செபமாலை யின் இயக்கம் போல இருந்ததால் அதன் பெயரைக் குறித்த paternoster ("எங்கள் தந்தையே", இலத்தீனில் கிறித்து கற்பித்த செபத்தின் துவக்க வார்த்தைகள்) என்னும் பெயரால் அதை அழைத்தனர். இப்பெயரே பின்னர் நிலைபெற்றுவிட்டது.

வழமையான உயர்த்திகளைவிடக் கூடுதலானவர்களை ஏற்றி இறக்கக் கூடியதாக இருந்ததன் காரணமாகச் சுற்றுயர்த்திகள் 20 ஆம் நூற்றாண்டின் முதல் அரைப்பகுதி முழுவதும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தன. இவை ஐரோப்பாக் கண்டத்திற் பரவலாகப் பயன்பட்டன. ஏறி இறங்கும்போது ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் கருத்திற் கொண்டும், ஊனமுற்றோரின் பயன்பாட்டுக்கு இத்தகைய உயர்த்திகள் உதவா என்பதாலும், சுற்றுயர்த்திகள் தற்காலத்தில் கட்டிடங்களில் பொருத்தப்படுவதில்லை.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.