சுரப்பி

சுரப்பி என்பது, விலங்குகளின் உடம்பில் இயக்குநீர்கள், முலைப்பால், கண்ணீர், வியர்வை, உமிழ்நீர் போன்றவற்றை உருவாக்கி வெளிவிடும் ஒரு உறுப்பு ஆகும். இவ்வாறு சுரக்கும் நீர்மம் ஆனது இரத்த ஓட்டத்துடன் கலக்கிறது அல்லது உடலுக்குள் உள்ள குழிகளுள் அல்லது உடல் மேற்பரப்பில் விடப்படுகிறது. இரத்தஓட்டத்தினுள் நீர்மங்களைச் சுரக்கும் சுரப்பிகள் அகச்சுரப்பிகள் என்றும், மற்றவகை புறச்சுரப்பிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

சுரப்பி
மனிதக் கன்ன எலும்புக்கீழ்ச் சுரப்பி
விளக்கங்கள்
இலத்தீன்glandula
அடையாளங்காட்டிகள்
CodeTH H2.00.02.0.02002
THவார்ப்புரு:Str mid/core.html H2.00.02.0.02002
உடற்கூற்றியல்

வகைகள்

சுரப்பிகள் இரண்டு பெரும்பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவையாவன:

  1. அகச்சுரப்பிகள்: இவை தமது சுரப்புநீரைச் சுரந்து நேரடியாக, தமக்கு குருதி வழங்கும் குருதிக்குழாய்கள் மூலம் குருதியினுள் சேர்க்கின்றன.
  2. புறச்சுரப்பிகள்: இவை தமது சுரப்புநீரை குழாய்கள் அல்லது கான்களினுள் சுரந்து விடுகின்றன.

புறச்சுரப்பிகள், அவை சுரக்கும் வழிமுறையின் அடிப்படையில் மேலும் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.

  • ஆப்போகிறைன் சுரப்பிகள்: இதில் சுரத்தலின்போது சுரக்கும் உயிரணுக்களின் ஒரு பகுதி இழக்கப்படுகின்றது. சுரப்பிக் கலங்களின் முதலுருமென்சவ்வு, சுரப்புநீரை உள்ளடக்கி, அரும்பு போன்று வெளித்தள்ளிப்படும்போது சுரப்பு வெளியேறுகின்றது. அப்போகிறைன் சுரப்பிகள் எனும்போது பொதுவாக அப்போகிறைன் வியர்வைச் சுரப்பிகள் குறிப்பிடப்படுகின்றது. எனினும் சுரத்தலுக்கு அப்போகிறைன் முறை பயன்படுத்தப்படாததால் இவ் வியர்வைச் சுரப்பிகள் உண்மையான அப்போகிறைன் சுரப்பி அல்ல என்றும் கருதப்படுகிறது.
  • ஹொலோகிறைன் சுரப்பிகள்: சுரத்தலின்போது சுரக்கும் உயிரணுவானது முழுவதுமே அழிந்து, அதன் மூலம் சுரப்புநீரை வெளியேற்றும்.
  • மெரோகிறைன் சுரப்பிகள்: சுரப்பியால் சுரக்கப்படும் சுரப்புநீரானது, உயிரணுவின் உள்ளாகவே மென்சவ்வால் சூழப்பட்ட ஒரு குழியினுள் சேகரிக்கப்பட்டு, பின்னர் அந்த சுரப்புநீரைக் கொண்ட மூடிய குழியானது உயிரணு மென்சவ்வினூடாக வெளியேற்றப்படும்.

புறச்சுரப்பிகளின் சுரப்புப் பொருள் அடிப்படையிலும் சுரப்பிகள் மூன்று பிரிவுகளாக உள்ளன:

  • ஊநீர்ச் சுரப்பிகள்: நீர்த்தன்மையான புரதம் நிறைந்த பொருளைச் சுரப்பவை. பொதுவாக இந்தப் புரதச் சுரப்புக்கள் நொதியங்களாக இருக்கும்.
  • சளிமச் சுரப்பிகள்: சளி போன்ற, அதிக மாப்பொருளைக் கொண்ட பொருளைச் சுரப்பவை.
  • கலப்புச் சுரப்பிகள்: இவை சளி, புரதம் ஆகிய இருவகைச் சுரப்புக்களையும் சுரப்பவை.

இந்த வேறுபாடுகள் தவிர, இந்தப் புறச் சுரப்பிகள் அவற்றின் அமைப்பின் அடிப்படையிலும் வேறுபடுகின்றன. புறச் சுரப்பிகள் சுரக்கும் பகுதியையும், சுரப்புநீரைக் கடத்தும் குழாய்களை அல்லது கான்களையும் கொண்டிருக்கும். இந்தக் கான்கள் கிளைகள் கொண்டவையாகவோ, அல்லது கிளைகள் அற்றவையாகவோ இருக்கலாம். சுரக்கும் பகுதியானது நுண்ணறைகள் கொண்ட அமைப்பையோ, குழல்வடிவான அமைப்பையோ அல்லது இரண்டும் கலந்த அமைப்பையோ கொண்டிருக்கலாம்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.