கண்ணீர்

கண்ணீர் ( ஒலிப்பு) கண்களில் இருக்கும் கண்ணீர்ச் சுரப்பிகளிலிருந்து கண்களை உயவூட்டவும், சுத்தம் செய்யவும், கண்ணீர் அழற்சியின் பொழுதும் கண்ணீர்க்குழாய்கள் வழியாக சுரக்கும் ஒரு உடல் திரவம்.[1] நெற்றியில் புருவம் துவங்கும் இடத்திற்கு பக்கத்தில் கண்ணுக்கு ஒன்று வீதமாக இரண்டு கண்ணீர் சுரப்பிகள் இருக்கின்றன. கண்ணீர் சுரப்பியில் சுரக்கக்கூடிய கண்ணீர், கண்இமைத்தலின் மூலமாக கண்ணில் பரவி மேல் மற்றும் கீழ் இமைகளின் விளிம்போரத்தில் இருக்கும் சிறிய திறப்பு வழியாக, கண்ணீர் நாளக்குழாய் வழியாக கண்ணீர்ப்பையை அடைகிறது. பிறகு அங்கிருந்து மூக்குக்கும் தொண்டைக்கும் சென்று ஆவியாகிவிடுகிறது. இது எப்போதும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒரு செயல். மன உணர்வின் காரணமாக கண்ணீர் சுரப்பிகள் தூண்டப்பட்டுக் கண்ணீர் அதிகமாகச் சுரக்கிறது. இதனால், திடீரென அளவுக்கு அதிகமாக சுரக்கும் கண்ணீர், இமைகளில் உள்ள திறப்புவழியாக முழுவதுமாக வெளியேற முடியாத காரணத்தால், எஞ்சிய கண்ணீர் கண்ணிலிருந்து தாரை தாரையாகக் கன்னங்களில் வடிகிறது. இதுபோன்ற நேரத்தில்தான், இதனால்தான் அழுகையின் பொழுது கண்ணீர் வெளிவருவது மட்டுமல்லாமல் அதிகப்படியான கண்ணீர் உள்ளே செல்வதால்தான் மூக்கும் ஒழுகுகிறது.

கண்ணீரமைப்பு
a) கண்ணீர்ச் சுரப்பி
b) மேற்புற கண்ணீர் துளை
c) மேற்புற கண்ணீர்ச் சிறுகுழாய்
d) கண்ணீர் பை
e) கீழ்புற கண்ணீர்த் துளை
f) கீழ் கண்ணீர்ச் சிறுகுழாய்
g) மூக்கு-கண்ணீர்ச் சுரப்பிக் குழாய்

கண்ணீரில் நீர், உப்புகள், பிறபொருளெதிரிகள், மற்றும் நொதியங்கள் உள்ளன[2]. அழுகையின் பொழுது வெளிவரும் கண்ணீரில் இயக்குநீர்களும் உள்ளன.

பிறந்த குழந்தைகளுக்கு சிலநேரம் இயல்புக்கு மாறாகக் கண்ணிலிருந்து நீர் வடியலாம். கண்ணில் ஏற்பட்ட நோய்த்தொற்று, இதற்குக் காரணமாக இருக்கலாம். சில நேரம் கண்ணீர்ப்பையில் ஏற்பட்ட அடைப்பும் காரணமாக இருக்கலாம். கண்ணில் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால் சொட்டுமருந்து மூலம் சரிசெய்யலாம். கண்ணீர்ப்பையில் அடைப்பு ஏற்பட்டிருந்தால், சிலருக்குச் சொட்டுமருந்துடன் மருத்துவர் சொல்கிறபடி மூக்குக்குக்கும் கண்ணுக்கும் அருகில் மசாஜ் செய்ய வேண்டிவரும். இதனால் அடைப்பு நீங்கும். ஒருசில குழந்தைகளுக்குச் சிறிய அறுவைசிகிச்சையும் செய்ய வேண்டியிருக்கலாம்.[3]

சான்றுகள்

  1. Farandos, NM; Yetisen, AK; Monteiro, MJ; Lowe, CR; Yun, SH (2014). "Contact Lens Sensors in Ocular Diagnostics". Advanced Healthcare Materials. doi:10.1002/adhm.201400504. http://onlinelibrary.wiley.com/doi/10.1002/adhm.201400504/abstract.
  2. "நாம் கண் இமைப்பது ஏன்? கண்ணீர் எப்படி சுரக்கிறது தெரியுமா? A to Z".
  3. மு. வீராசாமி (2016 சூலை 16). "உன் கண்ணில் நீர் வழிந்தால்?". தி இந்து தமிழ். பார்த்த நாள் 19 சூலை 2016.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.