சு. கிருஷ்ணமூர்த்தி

சுப்பிரமணியன் கிருஷ்ணமூர்த்தி (1929 - செப்டம்பர் 7, 2014)[1] தமிழக எழுத்தாளர். வங்காள மொழியில் இருந்து தமிழுக்கு ஏராளமான புனைவிலக்கியங்களையும் கட்டுரைகளையும் மொழியாக்கம் செய்தவர். திருக்குறள், பாரதியார் கவிதைகள்,குருதிப்புனல் உள்பட 50 க்கும் மேற்பட்ட தமிழ் இலக்கியங்களை வங்க மொழியில் மொழிபெயர்த்தவர்.

சு. கிருஷ்ணமூர்த்தி
பிறப்பு1929
புதுக்கோட்டை, தமிழ்நாடு
இறப்புசெப்டம்பர் 7, 2014(2014-09-07) (அகவை 85)
சென்னை
தேசியம் இந்தியா
கல்விசென்னைப் பல்கலைக்கழகம், நாக்பூர் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுஎழுத்தாளர்
விருதுகள்சாகித்திய அகாதமி
1991 மொழிபெயர்ப்பு

வாழ்க்கைக் குறிப்பு

கிருஷ்ணமூர்த்தி புதுக்கோட்டையில் 1929 ஆம் ஆண்டு பிறந்தார். புதுக்கோட்டை ராஜா கல்லூரியில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார். நாக்பூர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். தமிழ் தவிர சமக்கிருதம், இந்தி, மற்றும் செருமானிய மொழிகளில் முறையாகத் தேர்ச்சி பெற்றார். சென்னையில் நடுவண் அரசு கணக்காய்வாளராகப் பணியாற்றிய பின்னர் 1955 ஆம் ஆண்டில் கல்கத்தாவுக்கு இடமாற்றம் பெற்றார். அங்கு அவர் வங்காள மொழியைக் கற்றுத் தேர்ந்தார். கல்கத்தா தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினராக இருந்தார். 3 ஆண்டுகள் தில்லியிலும் பணியாற்றி 1987 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.[2]

எழுத்துலகில்

தமிழில் சிறுகதைகள் எழுதி இலக்கிய உலகிற்கு அறிமுகமானார். நன்றிக்கு ஒரு விலை, மனிதம் இவர் எழுதி வெளியிட்ட குறிப்பிடத்தக்க சிறுகதைத் தொகுப்பாகும். ஆங்கிலத்திலும் இவரது சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. காஜி நஸ்ருல் இஸ்லாம், சரத் சந்திர சட்டோபாத்யாய, ப்ரேம்சந்த், வித்யாசாகர் போன்றோரின் வாழ்க்கை வரலாறுகளைத் தமிழில் எழுதியுள்ளார். நஸ்ருல் இசுலாம் நூலுக்காக இலக்கியச் சிந்தனை விருது பெற்றார்.

வங்காள மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு பல நூல்களை மொழிபெயர்ப்பு செய்துள்ளார். இந்திரா பார்த்தசாரதி எழுதிய குருதிப் புனல் என்ற புதினத்தை வங்காள மொழியில் ரக்த போன்யா என்ற தலைப்பில் மொழிபெயர்த்து சாகித்ய அகாதெமி பரிசும், வங்காள சாகித்திய சம்மேளனப் பரிசும் பெற்றார். வங்க மொழியில் இருந்து 36 நூல்களைத் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.[3]

அவரது *magnum opus,* ஆங்கிலத்தில் அவர் மொழிபெயர்த்துள்ள சிலப்பதிகாரத்தை Magnum Opus என்ற நூலாக ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார்.

சு.கிருஷ்ணமூர்த்தி நான் கடந்துவந்த பாதை என்ற பெயரில் தன் வாழ்க்கையை நூலாக எழுதியிருக்கிறார்.[3]

விருதுகள்

மறைவு

சு. கிருஷ்ணமூர்த்தி 2014 செப்டம்பர் 7 அன்று காலமானார். இவருக்கு உஷா பஞ்சாபகேசன் என்ற மகளும், ராதாகிருஷ்ணன் என்ற மகனும் உள்ளனர்.[2]

மேற்கோள்கள்

  1. ஜெயமோகன். "அஞ்சலி. சு கிருஷ்ணமூர்த்தி". பார்த்த நாள் 8 செப்டம்பர் 2014.
  2. "எழுத்தாளர் கல்கத்தா எஸ்.கிருஷ்ணமூர்த்தி காலமானார்". தினமணி (8 செப்டம்பர் 2014). பார்த்த நாள் 8 செப்டம்பர் 2014.
  3. ஜெயமோகன். "சு.கிருஷ்ணமூர்த்தி எனும் தனிநபர் இயக்கம்". பார்த்த நாள் 8 செப்டம்பர் 2014.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.