சீறூர் மன்னர்கள்

சீறூர் மன்னர்கள் என்பவர்கள் சங்ககால தமிழகத்தில் வேந்தர், வேளிர், குறுநில மன்னர்கள் ஆகியோருக்கு அடுத்த நிலையில் இருந்தவராவர்.[1] இவர்கள் மறப்பண்பிலே பெருநில வேந்தரினும் மேம்பட்டிருந்தனர்.[2] மேலும் இவர்கள் தொண்மைக்குடியைச் சேர்ந்தவர்கள்.[3]

அடை மொழிகள்

இச்சீறூர் மன்னர்களுக்கான அடைமொழிகள் எல்லாம் இவர்களை தொல்குடி, முதுகுடி, சிறுகிடி என்றே குறிப்பிடுகின்றன. இதிலிருந்து இவர்கள் ஒரே இடத்திலேயே பல காலமாக வாழ்ந்திருந்த மக்கள் என கூறப்படுகிறது.

  1. ஓரெயில் மன்னன் (புறம் 338, அகம் 373)
  2. சிறுகுடி மன்னர் (அகம் 117, 204, 269, 270, நற்றிணை 340, 367)
  3. சீறூர் மன்னர் (புறம் 197, 299, 308, 319, 328)
  4. சீறூர் மதவலி (புறம் 332)
  5. தொல்குடி மன்னர் (புறம் 353, 354)
  6. முதுகுடி மன்னர், மூதில் முல்லையின் மன்னர் (தொல்காப்பியம் - பொருளதிகாரம் 77, புறம் 308, 319, 328)

மகள் மறுக்கும் மாண்பு

சிறுநில மன்னர்களான இவர்கள் பெருநில வேந்தர்கள் பெண் கேட்டு வந்தாலும் தன் முதுகுடி முறைமை கருதி பெண் கொடுப்பதற்கு அஞ்சி, பெண் தர மறுத்து போர் புரியும் தன்மையை கொண்டிருந்தனர்.[4]

இவர்களின் மகள் மறுக்கும் மாண்பைப் பற்றி தொல்காப்பியம்

"நிகர்த்து மேல்வந்த வேந்தனோடு முதுகுடி
மகட்பாடு அஞ்சிய மகட்பால்"

—(தொல்காப்பியம்)

மறப்பண்பு விளக்கும் பாடல்

வேந்தனுக்கும் சீறூர் மன்னனுக்கும் நடக்கும் போரில் வேந்தன் சீறூர் மன்னனின் மார்பில் வேலெறிந்தான். அவ்வலியையும் பொருட்படுத்தாமல் தன் மார்பில் எறிந்த வேலை பிடுங்கி வேந்தனின் யானை மீது எறிந்தானாம் சீறூர் மன்னன். இவ்வீரச் செயலை கண்டு வேந்தனே நாண வேந்தன் கூட்டி வந்த யானைப் படை அனைத்தும் பின் வாங்கியதாம். இவ்வாறு இவர்களின் மறப்பண்பு வேந்தரினும் ஓங்கி நிற்பது போல் புறப்பாடல்கள் அமைந்துள்ளன.[5]

சீறூர் மன்னர்கள்

  1. அம்பர் கிழான் அருவந்தை
  2. அருமன்
  3. அள்ளன்
  4. ஈந்தூர் கிழான் தோயன்மாறன்
  5. ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்
  6. கொடுமுடி மன்னன்
  7. சிறுகுடி பண்ணன்
  8. தழும்பன்
  9. நாலை கிழவன் நாகன்
  10. போஒர் கிழவோன் பழையன்
  11. முசுண்டை
  12. வயவன்
  13. வல்லங்கிழவோன் நல்லடி
  14. பண்ணன் (வல்லார் கிழான்)
  15. வாணன்
  16. விரான்

மூலம்

வ. குருநாதன் (2001). சங்ககால அரசர் வரலாறு. தஞ்சை-613005</ref>: தமிழ்ப் பல்கலைக்கழகம். பக். 371 - 386.

மேற்கோள்களும் குறிப்புகளும்

  1. செருமேம் படூஉம் வென்றியர் எனாஅ, மண்கெழு தானை, ஒண்பூண் வேந்தர் ...... சீறூர் மன்னர் ஆயினும், எம்வயின் பாடறிந்து ஒழுகும் பண்பி னோரே; - புறநானூறு 197
  2. புறம் 299
  3. புறம் 353
  4. யார்மகள்? என்போய்; கூறக் கேள், இனிக்;
    குன்றுகண் டன்ன நிலைப்பல் போர்பு
    நாள்கடா அழித்த நனந்தலைக் குப்பை
    வல்வில் இளையர்க்கு அல்குபதம் மாற்றாத்
    தொல்குடி மன்னன் மகளே; முன்நாள்
    கூறி வந்த மாமுது வேந்தர்க்கு - புறநானூறு - 354
  5. பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின், மின்நேர் பச்சை, மிஞிற்றுக்குரற் சீறியாழ் நன்மை நிறைந்த நயவரு பாண! சீறூர் மன்னன் சிறியிலை எகம் வேந்துஊர் யானை ஏந்துமுகத் ததுவே; வேந்துஉடன்று எறிந்த வேலே, என்னை சார்ந்தார் அகலம் உளம்கழிந் தன்றே; உளங்கழி சுடர்ப்படை ஏந்தி, நம் பெருவிறல் ஓச்சினன் துரந்த காலை, மற்றவன் புன்தலை மடப்பிடி நாணக், குஞ்சரம் எல்லாம் புறக்கொடுத் தனவே. - புறம் 308
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.