சீன யுவான்
யுவான் (yuan, /juːˈɑːn/ or /ˈjuːən/; குறியீடு: ¥; எளிய சீனம்: 元; பின்யின்: yuán) முன்னாள் மற்றும் தற்கால சீன] நாணயங்களின் அடிப்படை அலகாகும். சீன மக்கள் குடியரசின் நாணயமான ரென்மின்பியின் முதனிலை அலகாக உள்ளது.[1] தவிரவும் பன்னாட்டுப் புழக்கத்தில் இது ரென்மின்பிக்கு ஒத்த பொருளுடையதாகவும் பயன்படுத்தப்படுகின்றது; ரென்மின்பிக்கான ஐ.எசு.ஓ 4217 சீர்தரக் குறியீடு CNY, “சீன யுவான்” என்பதற்கான சுருக்கமே ஆகும். (இதே போன்று நாணயத்தையும் அலகையும் குறிக்க - இசுடெர்லிங், பவுண்டு - பயன்படுத்தும் வழக்கம் பிரித்தானிய நாணயத்திலும் உள்ளது.)
![]() |
இந்தக் கட்டுரை சீன உரையைக் கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ சீன எழுத்துருக்களுக்கு பதிலாக தெரியலாம். |
யுவான் (சீனம்: 元; பின்யின்: yuán) சிலநேரங்களில் வழக்குமொழியில் குய்யை (சீனம்: 块; பின்யின்: kuài; நேர்பொருளாக "கட்டி"; துவக்கத்தில் வெள்ளிக் கட்டி) எனப்படுகின்றது. ஒரு யுவான் 10 ஜியாவாக (சீனம்: 角; பின்யின்: jiǎo; நேர்பொருளாக "மூலை") (அல்லது வழக்குமொழியில் மாவோ,சீனம்: 毛; பின்யின்: máo "இறகு") பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு ஜியாவ் மேலும் 10 பென்னாகப் (சீனம்: 分; பின்யின்: fēn; நேர்பொருளாக "சிறிய பகுதி") பிரிக்கப்பட்டுள்ளது.
யுவானின் சீனமொழிக் குறியீடான (元) ஜப்பான், கொரியா நாட்டு நாணயங்களைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகின்றது. டாலர் மற்றும் பிற நாட்டு நாணயங்களை மொழிபெயர்க்கவும் இக்குறியீட்டை சீன மொழியில் பயன்படுத்துகின்றனர்; காட்டாக, அமெரிக்க டாலரை சீனமொழியில் மெய்யுவான் (சீனம்: 美元; பின்யின்: Měiyuán; நேர்பொருளாக "அமெரிக்க யுவான்") எனவும் ஐரோவை ஊயுவான் (சீனம்: 欧元; பின்யின்: Ōuyuán; நேர்பொருளாக "ஐரோப்பிய யுவான்") எனவும் மொழிபெயர்க்கின்றனர். ஆங்கிலப் பயன்பாட்டில் அன்னியச் செலாவணி சந்தையில் சீன யுவான் (CNY) பெருநில சீனாவின் அலுவல்முறை நாணயமான ரென்மின்பியைக் (RMB) குறிக்கின்றது.
சொற்தோற்றம், எழுத்துமுறை மற்றும் உச்சரிப்பு
தரப்படுத்தப்பட்ட மண்டாரின் சீனத்தில் யுவானின் நேரடிப் பொருள் "வட்டமான பொருள்" அல்லது "வட்டக் காசு". சிங் அரசமரபு காலத்தில் யுவான் வட்ட வடிவிலான வெள்ளிக் காசாக இருந்தது. வழமையான உரைகளில் எளிய சீன எழுத்துமுறையில் 元 எனக் குறிப்பிடப்படுகின்றது; இதன் நேரடிப் பொருள் "துவக்கம்" என்பதாகும். முறையான உரைகளில் எளிய எழுத்துரு 圆 மூலமோ வழமையான சீன எழுத்துரு 圓 மூலமோ குறிக்கப்படுகின்றது; இவை இரண்டுமே "வட்டம்" என்ற பொருளுடையது, காசின் உருவத்தைக் குறிப்பதாக உள்ளது. [2] இவை அனைத்துமே தற்கால தரப்படுத்தப்பட்ட சீனத்தில் யுவான் என உச்சரிக்கப்பட்ட போதிலும் துவக்கத்தில் அவை வெவ்வேறாக உச்சரிக்கப்பட்டன; 元 = nyoe, 圓 = yoe.
சீன மக்கள் குடியரசில் ரென்மின்பி நாணயத்தின் அலகு எனக் குறிக்க '¥' அல்லது 'RMB' என்ற குறியீடு பணத்தொகைக்கு முன்னொட்டாக இடப்படுகின்றது (காட்டாக, ¥100元 அல்லது RMB 100元).
மாற்றுச் சொற்கள்
சீனாவின் பல பகுதிகளில் ரென்மின்பியின் அலகை யுவான் என்பதற்கு மாறாக வழக்குமொழியில் குய்யை (எளிய சீனம்: 块; மரபுவழிச் சீனம்: 塊, நேரடிப் பொருளாக "துண்டு") என்கின்றனர்.
கண்டோனீயம் பெரும்பாலும் பேசப்படும் குவாங்டாங், குவாங்ச்சீ, ஆங்காங் மற்றும் மக்காவு பகுதிகளில் யுவான், ஜியாவ், ஃபென் ஆகியன முறையே மான் (சீனம்: 蚊), ஹூ (சீனம்: 毫), சின் (சீனம்: 仙) எனப்படுகின்றன. சின் என்பது ஆங்கிலச் சொல்லான சென்ட்டிலிருந்து பெறப்பட்டுள்ளது.
தொடர்புடைய நாணய அலகுகள்
வழமையான எழுத்துரு 圓 ஹொங்கொங் டொலர், மக்காவ்வின் படாக்கா, புதிய தாய்வான் டொலரையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது. இலுப்பினும் இவற்றின் ஏனைய நாணயப் பிரிவுகள் அதே பெயர்களை கொண்டிருப்பதில்லை. புதிய தாய்வான் டொலர் தரப்படுத்தப்பட்ட சீனமொழியில் யுவான் என்றும் எழுத்துருவில் 元, 圆 அல்லது 圓 என்றும் குறிப்பிடப்படுகின்றது.
கொரிய சப்பானிய நாணய அலகுகளின் பெயர்களான, முறையே வன் மற்றும் யென், மண்டாரின் யுவானின் உடனொத்தவைகளே; இவையும் அவ்வவ் மொழிகளில் "வட்டம்" எனப் பொருள்படுகின்றன.
சப்பானிய யென் (என்) துவக்கத்தில் சீன எழுத்துரு 圓வாலும் பின்னர் எளிதாக்கப்பட்டு 円 எனவும் குறிப்பிடப்பட்டது.
கொரிய வன் (வன்) சீன எழுத்துருவில் 1902 முதல் 1910 வரை 圜 என்றும் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 圓 என்றும் எழுதப்பட்டு வந்தது. தற்போது வட, தென் கொரியாக்களில் அங்குல் எழுத்துமுறையில் 원 என தனிப்பட்ட முறையில் எழுதப்படுகின்றன.
மேற்சான்றுகள்
- Phillips, Matt (2010-01-21). "Yuan or renminbi: what’s the right word for China’s currency?". The Wall Street Journal. http://blogs.wsj.com/marketbeat/2010/06/21/yuan-or-renminbi-whats-the-right-word-for-chinas-currency/. பார்த்த நாள்: 2014-03-03.
- "Yuan | Define Yuan at Dictionary.com". Dictionary.reference.com. பார்த்த நாள் 2012-04-06.
நூற் பட்டியல்
- Krause, Chester L. and Clifford Mishler (1991). Standard Catalog of World Coins: 1801–1991 (18th ed. ). Krause Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0873411501.
- Meyerhofer, Adi (2013). 袁大头.Yuan-Shihkai Dollar: 'Fat Man Dollar' Forgeries and Remints. Munich. http://zenwort.lima-city.de/YuanShikai-FatManDollar.pdf.
- Pick, Albert (1990). Standard Catalog of World Paper Money: Specialized Issues. Colin R. Bruce II and Neil Shafer (editors) (6th ). Krause Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-87341-149-8.
- Pick, Albert (1994). Standard Catalog of World Paper Money: General Issues. Colin R. Bruce II and Neil Shafer (editors) (7th ). Krause Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-87341-207-9.
வெளி இணைப்புகள்
- சீன யுவான் - சீனாவின் வரலாற்று மற்றும் தற்போதைய ரூபாய் நோட்டுகள் (CNY / RMB) 1953-2019 (ஆங்கிலம்) (செருமன் மொழி) (பிரெஞ்சு)
- சீன யுவான் - சீன மக்கள் குடியரசின் அந்நிய செலாவணி சான்றிதழ்கள் (FEC) 1980-1994 (ஆங்கிலம்) (செருமன் மொழி) (பிரெஞ்சு)