சீந்தில்
சீந்தில் (Tinospora cordifolia) என்பது மரங்களில் தொற்றிப் படரும் ஒரு மூலிகைத் தாவரமாகும். தண்டின் மேல் பகுதியில் தடித்த தோல் மூடி இருக்கும். தோலுக்கு மேல் மெல்லிய காகிதம் போன்ற படலம் மூடியிருக்கும். இலைகள் இதய வடிவில் இருக்கும். இவை மரங்களின் மேல் ஏறி படரும். கொடியை அறுத்து விட்டாலும் உலர்ந்து போகாது. காற்றிலுள்ள நீரை உறிஞ்சும் வாழும் திறனுடையது. அறுபட்ட இடத்திலிருந்து மெல்லிய கம்பி போன்ற கொடிகளை கீழ் நோக்கி வளர விட்டு பூமியில் வேரூன்றி கொண்டு பூமியிலிருந்து நீரை உறிஞ்சி வாழ ஆரம்பிக்கும்.
சீந்தில் | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
பிரிவு: | பூக்கும் தாவரம் |
வகுப்பு: | Magnoliopsida |
வரிசை: | Ranunculales |
குடும்பம்: | Menispermaceae |
பேரினம்: | Tinospora |
இனம்: | T. cordifolia |
இருசொற் பெயரீடு | |
Tinospora cordifolia (Thunb.) Miers | |
பெயர்கள்
சீந்திலுக்கு அமிர்தவல்லி, சோமவல்லி, அமிர்தை, குண்டலி, அமிர்தக்கொடி போன்ற பல பெயர்கள் உண்டு. ‘வல்லி’ என்றால் ‘கொடி’ என்ற பொருளில், கொடி வகையான சீந்திலுக்கு அமிர்த‘வல்லி’ எனும் பெயரும், அமிர்தம் என்றால் ‘அழியாத தன்மையைக் கொடுக்கும்’ என்ற பொருளில் ‘அமிர்தை’ எனும் பெயர் இதற்கு ஏற்பட்டிருக்கிறது. இதில் பொற்சீந்தில் எனும் இனமும் உண்டு.[1]
பயன்கள்
சித்த மருத்துவத்தில்[2] சீந்தில் கொடியை கற்ப மருத்துவ குணம் (கற்ப மருந்து என்பது மனிதன் நீண்ட நாள் உயிர் வாழ உதவுவது என்பது பொருள்) கொண்டதாக கூறப்பட்டுள்ளது. கிராமங்களில் குழந்தைகளுக்கு சளி பிடிக்காமல் இருக்க கொடியின் சிறு துண்டை எண்ணெயில் பொரித்து ஆற வைத்து தலைக்குத் தேய்த்து குளிப்பாட்டுவது வழக்கம். பெரியவர்களூக்கும் சளிக்கு சீந்தில் கொடியிலிருந்து மருந்து தயாரிக்கலாம். முற்றிய சீந்தில் கொடியிலிருந்து சீந்தில் சர்க்கரை என்னும் வெண்மையான பொடி தயாரிப்பர். அதற்கு சீந்தில் சர்க்கரை என்று பெயர். சித்த மருந்து தயாரிப்பில் சீந்தில் சர்க்கரை பயன்படுகின்றது.
மேற்கோளும் உப இணைப்பும்
- டாக்டர் வி.விக்ரம் குமார் (2019 சனவரி 19). "ஆயுளை நீட்டிக்கும் சீந்தில்". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 19 சனவரி 2019.