சிவானந்தம்

சிவானந்தம் (பிறப்பு 1808-1863)[1] என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபலமான பரத நாட்டிய ஆசிரியர் ஆவார். கோயிலில் இருந்த நாட்டியக் கலையை அரங்கக் கலையாக்கிய பெருமை கொண்ட தஞ்சை நால்வருள் இவரும் ஒருவராவார்.[2] பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் பரத நாட்டியமாடலாம் என்ற முறையை முதன் முதலில் சிவானந்தம் அவர்களே துவக்கி வைத்தார்.

ஆரம்ப வாழ்க்கை

தஞ்சை மராட்டிய மன்னர் இரண்டாம் துளஜா (1763-1787) காலம் முதல் அவைக் கலைஞர்களாக இருந்து இசை, நாட்டியப் பணியினை ஆற்றி வந்தார்களின் மரபில் வந்தவர். தஞ்சை நாட்டிய ஆசிரியர் சுப்பராயனின் மூன்றாவது மகனானக சிவானந்தம் 1808 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் உடன் பிறந்தவர்களான பொன்னையா, சின்னையா, வடிவேலு ஆகியோரும் புகழ்வாய்ந்த நட்டுவாங்கனாராக விளங்கினர்.

இசைக் கல்வி

சகோதரர்கள் நால்வரும் முத்துசுவாமி தீட்சிதரிடம் இசை கற்றக, தஞ்சை சரபோஜி மன்னர் ஏற்பாடு செய்தார். இசைப் பயிற்சியோடு தமிழ், தெலுங்கு, வடமொழிகளிலும் பயிற்சி பெற்றனர். இச்சகோதரர்களின் இசை அரங்கேற்றம் மராட்டிய அரசவையில் சரபோஜி மன்னன் முன்பு நடைபெற்றது.

தஞ்சை அரசவையில்

சிவானந்தம் தஞ்சை சரபோஜி மன்னரின் அரசவை வித்வானாக இருந்தார். சரபோஜி மன்னன் இவருக்கு பல்லாக்கும் விருந்தும் தந்து தினமும் காலையில் தான் கண்விழிக்கும்போது எதிரிலிருக்கவேண்டும் என்று திட்டத்தை ஏற்பாடு செய்தார். இம்மன்னர் மீது சிவானந்தம் பதவர்ணம், ஸ்வரஜதி பதங்களைப் பாடியுள்ளார்.

இசைப்பணிகள்

சிவானந்தம் தஞ்சை பெரிய கோயிலில் சோடேபசாரம், கீர்த்தனை நிகழும்போது சமர்ப்பிக்க வேண்டிய தாளம், ஜதிகள், நிருத்தியம், கொடியேற்றம், இறக்கம் ஆகிய விழா நாட்களிலும், நடராஜ புறப்பாட்டின் போதும் ஜதிகளோடு தாளம் தட்ட வேண்டிய முறைகளை வகுத்துத் தந்தார். இவைகளைத் தம் மாணவ மாணவியர்கட்குக் கற்றுத் தந்து, அரங்கேற்றம் செயவித்தார். மேலும் இவர் தஞ்சைப் பெருவுடையார் பெயரிலும், பந்தணைநல்லூர் பிரகதீஸ்வரர் பெயரிலும், மன்னார்குடி இராஜகோபால சுவாமி பெயரிலும் பல பதவர்ணங்கள், சதுர்மாலிகைகள், கீர்த்தனைகள், பதங்கள், தில்லானாக்கள் பாடியுள்ளார்கள்.

நாட்டியப் பணிகள்

பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் பரத நாட்டியமாடலாம் என்ற முறையை முதன் முதலில் இவரே ஆரம்பித்து வைத்தார். திருமறைக்காட்டில் பண்டார வகுப்பைச் சார்ந்த ஒருவருக்கு நாட்டியம் கற்பித்து அரசவையில் அரங்கேற்றம் செய்து வைத்தார்.[3]

மேற்கோள்கள்

  1. "தஞ்சை நால்வர்". கட்டுரை. awareness-blog/tanjore-quartet.html. பார்த்த நாள் 5 அக்டோபர் 2017.
  2. "தஞ்சை நால்வர் வழி நாட்டிய இசை மரபு". புத்தக அறிமுகம். தமிழ்ப் பல்கலைக் கழகம். பார்த்த நாள் 5 அக்டோபர் 2017.
  3. முனைவர் இரா.மாதவி. "தஞ்சை நால்வர்-சிவானந்தம்". கட்டுரை. http://www.tamilvu.+பார்த்த நாள் 5 அக்டோபர் 2017.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.