மாதங்கி
'மாதங்கி' Matangi (मातंगी) என்பவர் மகாவித்யா, எனப்படும் பத்து தந்திர தெய்வங்களிள் ஒருவர். இவர் பார்வதியின் ஆங்கார அம்சமாக கருதப்படுகிறார். மாதங்கி என்பவர் சைவ சமயக்கடவுளான சிவபெருமானின் மனைவியாவார். இவர் பிரம்மாவின் குமாரனாகிய மதங்க முனிவரின் மகளாக எனப்படுகிறார். மேலும், மாதங்கி சரஸ்வதி யின் தாந்த்ரீக வடிவமாகக் கருதப்படுகிறாள். சரசுவதியைப் போலவே, மாதாங்கியும், பேச்சு, இசை, அறிவு மற்றும் கலைகளை நிர்வகிக்கிறார். அமானுஷ்ய சக்திகளைப் பெறுவதற்கும், குறிப்பாக எதிரிகளின் மீது கட்டுப்பாட்டைப் பெறுவதற்கும், மக்களைத் தன்னிடம் ஈர்ப்பதற்கும், கலைகளில் தேர்ச்சி பெறுவதற்கும், உயர்ந்த அறிவைப் பெறுவதற்கும் மாதங்கி தேவியின் வழிபாடு பரிந்துரைக்கப்படுகிறது.
மாதங்கி வழிபாடு பெரும்பாலும் மாசுபாடு, தீங்கு விளைவித்தல் மற்றும் இந்து சமுதாயத்தின் கடைநிலை ஆகியவற்றுடன் தொடர்புடையது, இது அவரது மிகவும் பிரபலமான வடிவத்தில் காணப்படுகிறது. இவ் வடிவம் 'உச்சிஷ்டா - சண்டலினி' அல்லது 'உச்சிஷ்டா-மாதாங்கினி' என அழைக்கப்படுகிறது.[1] அவள் ஒரு தலித் இன மக்களின் கடவுளாக (சந்தலினி) என்று விவரிக்கப்படுகிறாள். மேலும், ( உச்சிஷ்டா ) என்பது சாப்பிட்ட பிறகு கழுவப்படாத கைகள் அல்லது இடது கையில் உணவு உண்பது போன்ற பொருளில் உள்ளதால் இவை இரண்டும் பண்டைய இந்து மதத்தில் தூய்மையற்றதாகக் கருதப்பட்டன.[2]
மாதங்கி என்பது மரகத பச்சை வண்ணத்தைக் குறிக்கிறது. உச்சிஷ்டா மாதங்கினியின் கைகளில் உடுக்கை, வாள், மண்டையோடு போன்றவை காணப்படுகிறது. இவரின் இன்னொரு தோற்றமான ராஜ மாதங்கியின் உருவம் வீணை வாசிப்பவராகவும், கிளியை வைத்திருப்பவராகவும் சித்தரிக்கப்படுகிறது.
பெயர்க்காரணம்
அம்பிகை, மதங்கரின் மகளாக பிறந்தமையால் மாதங்கி என அழைக்கப்படுகிறார். இவருக்கு ராஜ மாதங்கி, ராஜ சியாமளா என்றும் வேறு பெயர்கள் உள்ளன. இந்தியாவின் வடபகுதியில் சியாமளா தேவி என்று அறியப்படுகிறார். இதற்கு நீலம் கலந்த பச்சை நிறம் என்று பொருளாகும். இந்த தேவி சாக்த வழிபாட்டில் சப்தமாதாக்களில் ஒருவராகவும், தசமகா வித்தியாக்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார்.[3]
மதங்க முனிவர்
மதங்க முனிவர் கடுமையாக தவம் செய்தார். அவருடைய தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் மதங்கருக்கு காட்சியளித்தார். அப்பொழுது மதங்கர் "அனைவருக்கும் தந்தையான ஈசனே, தாங்கள் எனக்கு உறவாக இருக்கும் வரம் தர வேண்டும்" என்று வேண்டினார். அவ்வாறே சிவபெருமானும் பார்வதி தேவி மாதங்கியாக அவருக்கு பிறப்பார் என்றும், மாதங்கியை தான் மணம் முடிப்பதாகவும் வரம் தந்தார்.
மாதங்கி, சிவன் - திருமணம்
மாதங்கி சிவபெருமான் திருமணம் திருவெண்காட்டில் நிகழ்ந்தது. அப்பொழுது மாதங்கியின் வீட்டார், சிவபெருமானுக்கு சீர் செய்யாததை கண்டு தேவர்கள் கேலி பேசினர். அதனை தடுத்த சிவபெருமான், சீர் கொடுப்பதும், பெறுவதும் தவறு என்று உரைத்தார். ஆனால் திருமணத்தின் சடங்கு என தேவர்கள் வாதிட்டனர். அவர்களை சாந்தம் செய்வதற்காக கையிலையில் உள்ள பெருஞ்செல்வத்தினை நந்தி தேவரிடம் கூறி எடுத்துவரும்படி செய்தார்.
இப்புராணத்தை திருநாங்கூர் மாதங்கீஸ்வரர் கோயில் தலபுராணம் விவரிக்கிறது.[4]
வழிபாடு

மகாவித்யா, பாகலமுகி தவிர, மாதங்கி என்று அழைக்கப்படும் இவரின் வழிபாடு முதன்மையாக இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளைப் பெறப் பரிந்துரைக்கப்படுகிறது. 'மகா-பாகவத புராணத்தில்' ஒரு பாடல் ஒருவரின் எதிரிகளைக் கட்டுப்படுத்த இவரது அருளைக் கேட்கிறது, அதே நேரத்தில் 'தந்திரசர' எனச் சொல்லப்படும் இவரின் மந்திரத்தை ஓதுவது, இவரது வடிவத்தைப் பற்றி தியானம் செய்வது மற்றும் இவரது சடங்கு வழிபாடு ஆகியவை மக்களைக் கட்டுப்படுத்தும் சக்தியைக் கொடுக்கும் என்று நம்மப்படுகிறது.[5] அவரது பக்தர்கள், குறிப்பாக தாந்த்ரீக சாதகாக்கள் '(சாதுக்கள்), மாதங்கி தேவிக்கு படைக்கப்பட்ட மீதமுள்ள அல்லது ஓரளவு சாப்பிட்ட உணவை வழங்குவதன் மூலம் தங்களின் இழிநிலையைக் கடந்ததாகக் கருதப்படுகிறது ( உச்சிஷ்டா ) இதனால் அவர்களின் கர்வம் அழிகிறது. மாதாங்கியின் வழிபாடு அவரது பக்தருக்கு தடைசெய்யப்பட்ட மற்றும் மாசுபாட்டை எதிர்கொள்ள அனுமதிக்கும் வகையில் விவரிக்கப்படுகிறது. அவரை வழிபடும் பக்தர்களை இரட்சிப்பிற்கு இட்டுச் செல்கிறது அல்லது உலக இலக்குகளுக்கு அமானுஷ்ய சக்திகளைப் பெற அனுமதிக்கிறது எனக் கருதப்படுகிறது.[6]
'புராச்சார்யனவா' என்பது மாதங்கி தேவியின் தோத்திரங்களை அவள் காதுகளில் கிசுகிசுப்பதன் மூலம் தேவி மகிழ்வதை விவரிக்கிறது. பக்தரின் அனைத்து கேள்விகளுக்கும் தெய்வம் பதிலளிக்கும் என நம்பப்படுகிறது.[7]
மாதாங்கி பெரும்பாலும் சரஸ்வதி யுடன் தொடர்புடைய "ஐம்" என்ற மந்திர எழுத்துடன் வணங்கப்படுகிறார், மேலும் இது அறிவு, கற்றல் மற்றும் கற்பித்தல் ஆகியவற்றின் விதை-எழுத்தாகும். இருபது எழுத்துக்கள் கொண்ட நீண்ட மந்திரமும் பயன்படுத்தப்படுகிறது:[8]
<blockquote>''ॐ ह्रीं ऐं श्रीं नमो भगवति उच्छिष्टचाण्डाली श्री मातङ्गेश्वरी सर्वजनवसंकरी स्वाहा ॥ (ஓம் ஹ்ரீம் ஐம் ஸ்ரீரிம் நமோ பகவதி உச்சிஷ்டசண்டலி ஸ்ரீ மாதங்கேஸ்வரி சர்வஜனவசங்கரி ஸ்வாகா )''<br/>
<br/>
மேலே குறிப்பிட்ட மந்திரமானது பத்தாயிரம் எண்ணிக்கை அளவு ஜெபிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆயிரம் எண்ணிக்கை முடிந்தவுடன் பூக்கள் மற்றும் நெய் வேள்வியில் சமர்பிக்கப்படுகிறது. அல்லது ஒவ்வொரு நூறு எண்ணிக்கை முடிந்தபின்பும் "நீர்" தாரை வார்க்கப்படுகிறது. அல்லது அந்தணர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.[9] மாதங்கி தேவியின் யந்திரமும் பூசையில் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. குறிப்பிட்ட சில பொருள்களை இவ் வழிபாட்டின் போது தானம் செய்வதின் மூலமாக வேண்டிய பலன்களைப் பெறலாம் என்று நம்பப்படுகிறது. பேல் இலைகளின் பிரசாதம் ராஜ்யத்தை விளைவிக்கும் என்று கூறப்படுகிறது; உப்பு கட்டுப்படுத்தும் சக்தியை அளிக்கிறது; மஞ்சள் முடக்குவதற்கான சக்தியை அளிக்கிறது; வேப்பம் கிளைகள் செல்வத்தைக் கொண்டுவருகின்றன; சந்தனம், கற்பூரம் மற்றும் குங்குமப்பூ ஒரு பிரசாதம் அல்லது ஒரு உப்பு மற்றும் தேன் கலவை மக்களை ஈர்க்கும் சக்தியை வழங்குகிறது எனப் பொருட்களின் பலன்கள் சொல்லப்படுகின்றன.[10]
துதிகள்
- சியாமளா தண்டகம்
- சியாமளா நவரத்னமாலை
- சியாமளா ஆவரணம்
- சியாமளா அசுடோத்திரம்
- சியாமளா கவசம்
- ராஜமாதங்கி மந்திரம்
- மாதங்கி தோத்திரம்
- மாதங்கி சுமுகி கவசம்
- மாதங்கி ருதயம்
- மாதங்கி சகசுரநாமம்
- சியாமளா சகசுரநாமம்
ஆதாரங்களும், மேற்கோள்களும்
- கின்ஸ்லி (1997) ப. 217
- Kinsley (1997) p. 217
- http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=15795
- http://koyil.siththan.com/archives/category/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/227
- Frawley pp. 142–3
- Kinsley (1997) pp. 220–22