சிந்நயச் செட்டியார்

சிந்நயச் செட்டியார் (1855 - 1900) பெரும்புலவர் என்று 19-ஆம் நூற்றாண்டில் புலவர்களால் புகழப்பெற்றவர். ஆசுகவி.

ஆசுகவி சிந்நயச் செட்டியார்

வாழ்க்கைச் சுருக்கம்

சிந்நயச் செட்டியார் தேவகோட்டையில் "மேலவீடு' எனப்படும் செல்வக் குடும்பத்தில், மாற்றூர்க்கோயில் - உறையூர் பிரிவில், 1855-ஆம் ஆண்டு இலக்குமணன் செட்டியார்-லெட்சுமி ஆச்சிக்கு நான்காம் பிள்ளையாகப் பிறந்தார். இவரது அண்ணன்மார் மூன்று பேர். சிந்நயச் செட்டியாரின் மனைவி பெயர் மீனாட்சி. இவர்களின் ஒரே பிள்ளை காசி மூன்றாண்டுகளில் இறந்து போனது.

சிந்நயச் செட்டியாரின் குரு, தேவகோட்டை "வன்றொண்டர்' நாராயணன் செட்டியார். இந்த வன்றொண்டர், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவர். சிந்நயச் செட்டியாரின் மானசீக குரு யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலர். "சிலேடைப் புலி' பிச்சுவையர், காரைக்குடி சிவபூசகர் சொக்கலிங்கம், இராமநாதபுரம் ரா.ராகவையங்கார் ஆகியோர் சிந்நயச் செட்டியாரின் மாணவர்கள்.

இவருடைய உருவத் தோற்றம் யாரையும் ஈர்க்கக் கூடியது. நல்ல சிவப்பு நிறம், விபூதி, ருத்ராட்சம் அணிந்து பஞ்சகச்ச மேலாடையில் சிவப்பழமாய்க் காட்சி அளிப்பார். கையில் எப்பொழுதும் ஓலைச்சுவடி இருக்கும். ரத்தினக் கம்பளத்தில் வீற்றிருப்பார்.

பாண்டித்துரைத் தேவர் சிந்நயச் செட்டியாரின் இனிய தோழர். இருவரும் அடிக்கடி சந்தித்து அளவளாவுவர். பாண்டித்துரைத் தேவர் நான்காம் தமிழ்ச் சங்கத்தை மதுரையில் நிறுவ முயன்றபோது, அவருக்கு உறுதுணையாக நின்றவர் சிந்நயச் செட்டியார்.

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, உ. வே. சாமிநாதய்யர் போன்றோர் இவரைப் பாராட்டியுள்ளனர். "வன்றொண்டர்" நாராயணன் செட்டியார், தன் மாணவர்களில் ஆசுகவி பாடக்கூடியவர் சிந்நயச் செட்டியார் ஒருவரே என்று தன்னிடம் கூறியதாக உ.வே.சா., தமது வாழ்க்கை வரலாற்றில் கூறியிருக்கிறார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருப்பணி செய்த "வயிநாகரம்' குடும்பத்தைச் சேர்ந்த ராமநாதன் செட்டியார், தமது "கவிதைமலர்' என்ற நூலில், சிந்நயச் செட்டியாரைப் போற்றிப் பாடல் எழுதியுள்ளார்.

சேவைகள்

திருவாரூரில் இவர் வாழ்ந்த காலத்தில் பதஞ்சலியும் வியாக்கிரபாதரும் பூஜை செய்த இடமான "வினமல்' என்ற திருத்தலத்தில் உள்ள சிவன் கோயிலைப் புதுப்பித்தார்.

இவரை, நகரத்தார் குருபீடமாகிய கோவிலூர் ஆதீனம் போற்றி இருக்கிறது. அக்காலத்தில் கோவிலூர் ஆதீனத்துக்குச் சொத்துகள் வாங்கியபொழுது சிந்நயச் செட்டியார் பெயரில் வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

திருவாமாத்தூர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளை தேவகோட்டைக்கு அழைத்து வந்து, தேவகோட்டைச் சிவன் கோயிலில் உள்ள ஸ்ரீதண்டபாணி பேரில் பிள்ளைத்தமிழ் பாடச்செய்தார். வேலங்குடிக் கல்வெட்டில் இருந்து நகரத்தார் வரலாற்றை முதலில் எழுதி வெளியிட்டார்.

எழுதியுள்ள நூல்கள்

  • மதுரை மீனாட்சி அம்மைப்பதிகம்
  • நகரத்தார் வரலாறு
  • திருவொற்றியூர்ப் புராணம்
  • குன்றக்குடி மயின்மலைப் பிள்ளைத் தமிழ்
  • தேவகோட்டை சிலம்பைப் பதிற்றுப்பத்து அந்தாதி
  • இராமேசுரம் தேவைத் திரிபு அந்தாதி
  • திருவண்ணாமலை அருணைச் சிலேடை வெண்பா
  • காசி யமக அந்தாதி
  • வெளிமுத்திப் புராணம்
  • கும்பாபிஷேக மகிமை
  • ஐம்பெரும் காப்பிய ஒப்பீடு
  • கண்டனூர் மீனாட்சி அம்மை பாடல்

உசாத்துணை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.