சா. தர்மராசு சற்குணர்

சாமுவேல் தர்மராசு சற்குணர் (1877 மே 25 - 1952 திசம்பர் 23) தமிழ்க் கல்வியைப் பரப்புவதற்காகச் சென்னையில் தென்னிந்தியத் தமிழ்க் கல்விச் சங்கம் அமைத்த முன்னோடி; தமிழர்களுக்குத் தமிழ்மட்டும் போதாது, பல மொழி அறிவும் இருந்தால்தான் தமிழின் சிறப்பைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியும் என்று பல மொழி கற்றுத்தேர்ந்த மேதை. எளிய நடையில் தமிழை எழுதவும் சொல்லிக் கொடுக்கவும் வேண்டும் என்று வலியுறுத்தியவர்.[1]

பிறப்பு

சா. தர்மராசு சற்குணர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாசரேத் என்னும் சிற்றூரில் வாழ்ந்த தமிழறிஞர் சாமுவேல் என்பவருக்கு மகனாக 1877 மே 25 ஆம் நாள் பிறந்தார்.[2]

கல்வி

சற்குணர் தாய்மொழியாகிய தமிழோடு வடமொழி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார்.

பணி

சற்குணர் தன்னுடைய பணிவாழ்க்கையை ஆங்கில ஆசிரியராகத் தொடங்கினார். பின்னர் சென்னை கிறித்துவக் கல்லூரியில் தமிழாசிரியராகச் சேர்ந்து, பேராசிரியராக உயர்ந்தார்.[3]

தமிழ்ப்பணி

கல்லூரிப் பணிக்கு அப்பாலும் தொண்டு செய்ய விரும்பிய சற்குணர், அதே எண்ணத்தைக் கொண்டிருந்த அ. கி. பரந்தாமனாருடன் இணைந்து 1925 சனவரி 15 ஆம் நாள் சென்னையில் தென்னியந்தியத் தமிழ்க் கல்விச் சங்கம் என்னும் அமைப்பை நிறுவினார். சற்குணர் தலைவராகவும் அ.கி.பரந்தாமனார் செயலாளராகவும் பணியாற்றினர். அச்சங்கத்தில் சென்னை பல்கலைக்கழக வித்துவான் தேர்விற்கு பயிற்சி அளிக்கப்பட்டது.[2]

முழுக்க முழுக்க கற்பிக்கும் பணியிலேயே தன்னை ஈடுபடுத்திக் கொண்டதால், சற்குணர் எழுத்துப் பணியில் அதிகம் ஈடுபடவில்லை. ஆனால் இவர் தம் காலத்தில் சிறந்த ஆராய்ச்சியாளராகத் திகழ்ந்தார்.

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்க்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார்.

மணிவிழா

தர்மராசு சற்குணரின் மணிவிழா 1937 ஆம் ஆண்டில் அ.கி.பரந்தாமனார் முயற்சியால் உ. வே. சாமிநாதையர் தலைமையில் சென்னையில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பல தமிழறிஞர்கள் கலந்து கொண்டு அவருடைய பன்முக ஆளுமையை எடுத்துக் கூறினர். சற்குணர் மலரும் சற்குணீயமும் என்ற அரிய சிறப்பு மலரும் அப்போது வெளியிடப்பட்டது.[2]

மறைவு

தமிழுக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட சற்குணர் 1952 திசம்பர் 23 ஆம் நாள் இயற்கை எய்தினார்.[2]

சான்றடைவு

  1. வைத்தியநாதன் கே, தினமணி செம்மொழிக்கோவை: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 சிறப்பு மலர், பக்.280
  2. பொன்னீலன், சற்குணர் என்னும் நற்குணர், தினமணி - தமிழ்மணி
  3. சங்கத்தமிழோடு சவப்பெட்டிக்குச் சென்ற தமிழறிஞர்!

வெளியிணைப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.