சம்பாஜி

சத்திரபதி சம்பாஜி (Sambhaji) (1657 – 1689), மராத்தியப் பேரரசர் சிவாஜி – சாயிபாய் இணையரின் மூத்த மகன் ஆவார். 9 ஆண்டுகள் மராத்தியப் பேரரசை ஆண்ட இவரை தில்லி முகலாயர்கள் சிறை பிடித்து, சித்திரவதை செய்து கொன்றனர்.[1][2] இவருக்குப் பின்னர் மராத்தியப் பேரரசராக இவரது ஒன்று விட்ட தம்பி இராஜாராமும், பின் சம்பாஜியின் மகன் சாகுஜி அரியணை ஏறினார்.

சம்பாஜி
சத்திரபதி சம்பாஜி
இரண்டாவது மராத்தியப் பேரரசர்
ஆட்சிக்காலம் 16 சனவரி 1681 – 11 மார்ச் 1689
முடிசூடல் 16 சனவரி 1681, ராய்கட் கோட்டை
முன்னையவர் சிவாஜி
பின்னையவர் இராஜாராம்
வாழ்க்கைத் துணை யேசுபாய்
வாரிசு
பவானிபாய்
சத்திரபதி சாகுஜி
தந்தை சிவாஜி
தாய் சாயிபாய்
பிறப்பு 14 மே 1657
புரந்தர் கோட்டை, புனே அருகில்
இறப்பு 11 மார்ச் 1689
துளாப்பூர், புனே
சமயம் இந்து
துளாப்பூரில் சம்பாஜியின் சிலை

இளமை

புனே அருகில் உள்ள புரந்தர் கோட்டையில் பிறந்த சம்பாஜி, தனது இரண்டாவது வயதில் தாய் சாயிபாய் இறந்ததால், தந்தை வழி பாட்டியான ஜிஜாபாயின் பராமரிப்பில் வளர்ந்தவர். 11 சூன் 1665ல் சிவாஜிக்கும் – முகலாயர்களுக்கும் ஏற்பட்ட புரந்தர் உடன்படிக்கையின் படி, ஆம்பர் நாட்டு மன்னர் ஜெய்சிங்கின் ஆக்ரா அரண்மனையில், ஒன்பது வயது சம்பாஜி பிணையாகத் தங்க வைக்கப்பட்டார்.

12 மே 1666ல் சிவாஜியும், சம்பாஜியும் தாங்களாகவே முன் வந்து ஆக்ராவில் உள்ள அவுரங்கசீப்பின் அரசவைக்கு சென்றனர். அவுரங்கசீப் இருவரையும் 22 சூலை 1666ல் ஆக்ரா சிறையில் அடைத்தார்.[3]

அரியணை ஏறுதல்

ஏப்ரல், 1680 முதல் வாரத்தில் பேரரசர் சிவாஜி இறந்த போது, சம்பாஜி முகலாயர்களின் சிறையில் இருந்ததால், சிவாஜியின் இரண்டாம் மனைவியின் மூலமாக பிறந்த சத்திரபதி இராஜாராம் 21 ஏப்ரல் 1680ல் மராத்தியப் பேரரசராக பேஷ்வாக்களால் அறிவிக்கப்பட்டார்.[4]. இதனை அறிந்த சம்பாஜி, தில்லி மொகலாயர்களின் சிறையிலிருந்து தப்பி, ராய்கட் கோட்டையை 20 சூலை 1680ல் கைப்பற்றினார். பின்னர் இராஜாராமை சிறைபிடித்து, தன்னை மராத்தியப் பேரரசராக அறிவித்துக் கொண்டார்.

சம்பாஜி முகலாயர்கள், தக்காண சுல்தான்கள், கிழக்கிந்திய கம்பெனி, போர்த்துகேய கிழக்கிந்தியக் கம்பனி மற்றும் மைசூர் அரசுகளுடன் தொடர்ந்து பிணக்குகள் கொண்டிருந்தார்.

மறைவு

1687ல் தில்லி முகலாயப் படைகளுக்கும், மாராத்தியப் படைக்களுக்கும் நடந்த போரில், சம்பாஜி முகலாயர்களால் சிறை பிடிக்கப்பட்டார். பின்னர் பிப்ரவரி 1689ல், சங்கமேஸ்வரர் எனுமிடத்தில் வைத்து, அவுரங்கசீப் படையினரால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

வாரிசுரிமைப் போர்

சம்பாஜியின் மறைவிற்குப் பின் மீண்டும் மராத்தியப் பேரரசரான இராஜாராம், தனது தலைநகரை செஞ்சிக்கு மாற்றிக் கொண்டார்.

சம்பாஜி இறந்த போது, அவரது ஏழு வயது மகன் சாகுஜி பதினெட்டு வயது வரை தில்லி முகலாயர்களின் சிறையில் பிப்ரவரி, 1689 முதல் அவுரங்கசீப், 1707ல் இறக்கும் வரை இருந்தார். பின்னர் தில்லி பேரரசர் முகமது ஆசாம் ஷாவால் சிறையிலிருந்து விடுபட்ட சாகுஜி, தனது அத்தையும், இராஜாராமின் விதவை மனைவியான தாராபாயுடன் நடந்த சிறு போரில் வென்று சாகுஜி மராத்தியப் பேரரசின் சத்திரபதியாக பட்டம் சூட்டிக் கொண்டார்.

முன்னர்
சத்திரபதி சிவாஜி
மராத்தியப் பேரரசின் சத்திரபதி
1680–1689
பின்னர்
சத்திரபதி இராஜாராம்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.