சப்தகன்னியர்


இந்து சமயத்தில் சப்தகன்னியர் எனப்படுவோர் பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி ஆவர். உலகை இயக்கும் ஐந்தொழில்கள் புரிந்து வரும் சிவசக்தி எடுத்த திருமேனிகளே, சப்த கன்னியர் என்றும் சப்த மாதாக்கள் என்றும் சப்த மாத்திரிகைக்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

சப்தகன்னியர் சிலை, லாஸ் ஏஞ்சலீஸ் கவுண்டி அருங் காட்சியகம்
இடப்புறம் சிவன், வலப்புறம் பிள்ளையார் நடுவில் சப்தகன்னியர்
கச்சிராயபாளையத்தில் சாம்பாரப்பன் கோயிலில் உள்ள ஏழு கன்னியர் சிலைகள்

சப்த மாதாக்கள் எனவும் ஏழு கன்னியர்கள் அறியப்படுகிறார்கள்.

சப்த கன்னியரின் தோற்றம்

சிவபெருமான் அந்தகாசுரன் எனும் அரக்கனுடன் போர் புரிந்தார். அப்பொழுது அந்காசுரனின் உடலில் இருந்து வெளிபடுகின்ற இரத்தத்திலிருந்து அசுரர்கள் தோன்றினார்கள். அவர்களை அழிக்கும் பொருட்டு சிவபெருமான் தன் வாய் அக்கினியிலிருந்து யோகேசுவரி என்ற சக்தியை தோற்றுவித்தார். யோகேசுவரி மகேசுவரி என்ற சக்தியை உருவாக்கினார். மகேசுவரிக்கு துணையாக பிரம்மா பிராம்மியை தோன்றுவித்தார். திருமால் நாராயிணியை தோற்றுவித்தார். இந்திரன் இந்திராயையும், முருகன் கௌமாரியையும், வராக மூர்த்தி வராகியையும், யமன் சாமுண்டியையும் தோன்றுவித்தனர்.

சும்ப - நிசும்ப என்ற அரக்கர்களை அம்பிகை அழிக்கப்போர் புரிந்த போது அவளுக்கு உதவியாக இத்தேவியர்கள் உற்பவித்தனர் என்று மார்க்கண்டேய புராணம் கூறுகின்றது. காளிதாசனின் குமார சம்பவம் என்ற காவியத்தில் சப்த கன்னியர் சிவபெருமானின் பணிப்பெண்டிர் என்ற குறிப்புக் காணப்படுகின்றது[1]

சப்தகன்னியரின் தோற்றத்தினைப் பற்றி மற்றொரு புராணக் கதையில் மகிசாசுரன் கருவில் உருவாகாத பெண்ணால் மட்டுமே அழிவு உண்டாக வேண்டுமென வரம் பெற்றிருந்தார். அதனால் தேவர்களும், முனிவர்களும் மகிசாசுரனால் துன்பமைடைந்தனர். அனைவரும் சென்று சிவபெருமானிடம் தங்களை காத்தருள வேண்டினர். உமையம்மையிடம் அனைவரையும் காத்தருள வேண்டினார் சிவபெருமான். அதனால் உமையம்மை தன்னிலிருந்து சப்த கன்னியர்களை தோன்றுவித்து மகிசாசுரனை அழித்தார். மகிசாசுரன் கொல்லப்பட்டதால் சப்த கன்னியர்களை கொலைப்பாவம் சூழந்தது. அதனை நீக்க வேண்டி சிவபெருமானிடம் சப்தகன்னியரை வேண்டினர்.

சிவபெருமான் கோலியனூர் எனும் தலத்தில் தன்னை வழிபட்டு வரும்படி கூறினார். சப்த கன்னியர்களை பாதுகாக்க தன்னுடைய அம்சமான வீரபத்திரனை உடன் அனுப்பி வைத்தார். இத்தலத்தில் சப்த கன்னியருக்கு தட்சிணாமூர்த்தியாக அமர்ந்து உபதேசம் செய்து கொலைப்பாவத்தினை நீக்கினார். [2]

சப்த கன்னிகள்

பிராம்மி

பிராம்மி படைப்பின் கடவுளான பிரம்மாவின் அம்சமாவார். இவர் நான்கு கரங்களை உடையவர். அன்னப்பறவையை வாகனமாக கொண்டவர். வெண்ணிர ஆடை அணிந்தவராகவும், ஸ்படிக மாலையை ஆபரணமாக தரித்தவராகவும் உள்ளார். [3]

மகேசுவரி

மகேசுவரி என்பவர் மகேசுவரானாகிய சிவபெருமானின் அம்சமாவார். இவர் சிவபெருமானைப் போன்று முக்கண்ணும், ஐந்து திருமுகமும் உடையவர். கரங்களில் பாசம், அங்குசம், மணி, சூலம், பரசு என்ற ஐந்து ஆயுதங்களை தரித்தும், ரிசபத்தினை வாகனமாக கொண்டவர். [4]

கௌமாரி

கௌமாரி என்பவர் கௌமாரனாகிய முருகனின் அம்சமாவார். இவர் நான்கு கரங்களையும், பின் இரு கைகளில் வஜ்ரம் மற்றும் சக்தி ஆயுதங்களையும் தரித்து காணப்படுகிறார். மயில் பறவையினை வாகனமாக கொண்டவர். சேவல்கொடியினை கைகளில் தாங்கியிருப்பவர். [5]

நாராயணி

நாராயணி என்பவர் விஷ்ணு என்று அழைக்கப்பெறும் திருமாலின் அம்சமாவார். இவருக்கு வைஷ்ணவி என்ற மறுபெயருண்டு. இவர் நான்கு கரங்களையும், பின் இரு கைகளில் சக்கரத்தினையும், சங்கினையும் தரித்துக் காணப்படுகிறார். [6]

வராகி

வராகி திருமாலின் வராக அம்சமாவார். இவர் வராகமெனும் பன்றி முகமும், நான்கு கரங்களையும் உடையவர். பின் இரு கரங்களில் தண்டத்தினையும், கலப்பையையும் கொண்டவராவார். இவர் கருப்பு நிற ஆடையுடுத்தி சிம்மம் வாகனத்தில் அமர்ந்திருக்கிறார்.

இந்திராணி

இந்திராணி தேவலோகத்து அரசனான இந்திரனின் அம்சமாவார். நான்கு கரங்களை கொண்ட இவர், பின் இரு கரங்களில் சக்தியையும், அம்பினையும் ஆயுதமாக கொண்டு காட்சியளிக்கிறார். ரத்தின கிரீடம் தரித்து வெண் யானை வாகனத்தில் அமர்ந்திருப்பவர். [7]

சாமுண்டி

சாமுண்டி என்பவர் ருத்திரனின் அம்சமாவார். நான்கு கரங்களும், மூன்று நேத்திரங்களும், கோரைப்பற்களும், கரு மேனியும் உடையவர். இவர் புலித்தோல் உடுத்தி கபால மாலையை அணிந்திருக்கிறார். முத்தலைச் சூலம், முண்டம், கத்தி, கபாலம் ஆகிய ஆயுதங்களை தரித்தும், பிணத்தின் மீது அமர்ந்தும் காட்சியளிக்கிறார். இவர் சண்டர் முண்டர் என்ற அரக்கர்களை அழிப்பதற்காக அவதாரம் எடுத்தார். [8]

கோயில்களில் சப்த கன்னியர்

சோழர் காலத்திய கோயில்கள் மற்றும் அதற்கு முந்தையகால கோயில்களிலும் சப்தமாதர் சிற்றாலயங்கள் தமிழகத்தில் காணப்படுகின்றன. அதற்கு பிற்பட்ட காலத்தில் சப்தமாதர் வழிபாடு அருகிவிட்டது. சப்தமாதர் வழிபாடு இந்தியா முழுவதும் இருந்ததற்குச் சிற்ப, ஓவிய, செப்புப் படிமத் தடயங்கள் பல உண்டு. ஆனால் இவர்களுக்குத் தனிச் சிற்றாலயங்கள் எழுப்பும் வழக்கம் தென்னிந்தியாவில் மட்டுமே இருந்தது.[9]

  • ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டையை அடுத்த நெருஞ்சிப்பேட்டை காவிரியாற்றின் நடுவே உள்ள கன்னிமார் திட்டில் சப்தகன்னியர் புடைப்புச் சிற்பம் அமைந்துள்ளது
  • ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை அடுத்த கெட்டிச்செவியூரில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சப்த கன்னியர் திருவுருவம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக செங்குந்தர் சமூகத்தினரால் வணங்கப்பட்டு வருகிறது.மேலும் 2018-2019 காலகட்டத்தில் புணரமைக்கப்பட்டு வழிபாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது.


  • சேலம் அம்மாப்பேட்டை காளி கோயிலில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட சப்த கன்னியர் திருவுருவம் அமைந்துள்ளது.[10]
  • சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலுக்கு அருகில் முன்னுதித்த நங்கை அம்மன் கோயிலில் ஒரே கல்லில் சப்த கன்னியர் சிலையை காணலாம்.
  • திருச்சி உறையூர் சாலை ரோடில் பாளையம் பஜாரில் சப்தமாதருக்கு சிற்றாலயம் உள்ளது
  • கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், நெல்லிக்குப்பம் எனும் ஊரில் சப்தமாதாக்கள் (செல்லியம்மன் எனும் பெயரில்) கோவில் உள்ளது. இங்கு வராஹி அம்மனுக்கு தேய்பிறை வரும் பஞ்சமி திதியில் சிறப்பு அபிஷேகம் செய்து மஹாயாகம் நடைபெறும்.

https://goo.gl/maps/LwgRoLZMKny

  • கரூர் மாவட்டம் கிரீன் லேண்டில் (பெரிய குளத்துபாளையம் மற்றும் சின்ன குளத்துபாளையம்) கன்னிமார் சிற்றலாயம் அமைத்துள்ளது.
நவ கன்னிகள்

மேற்கோள்கள்

  1. சப்த கன்னியர் (மாதாக்கள்) வரலாறும், வழிபாடும்!
  2. http://holyindia.org/temples/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D கோலியனூர் HolyIndia.Org
  3. http://temple.dinamalar.com/news_detail.php?id=13760 பிராம்மி - தினமலர் கோயில்கள்
  4. http://temple.dinamalar.com/news_detail.php?id=13761 மாகேஸ்வரி - தினமலர் கோயில்கள்
  5. http://temple.dinamalar.com/news_detail.php?id=13762 கவுமாரி - தினமலர் கோயில்கள்
  6. http://temple.dinamalar.com/news_detail.php?id=13763 நாராயணி என்ற வைஷ்ணவி - தினமலர் கோயில்கள்
  7. http://temple.dinamalar.com/news_detail.php?id=13765 இந்திராணி தினமலர் கோயில்கள்
  8. http://temple.dinamalar.com/news_detail.php?id=13766 சாமுண்டி தினமலர் கோயில்கள்
  9. தியடோர் பாஸ்கரன் (2016 மே 1). "ஏழு கன்னிமார்கள் கலையிலும் கதையிலும்". தி இந்து. பார்த்த நாள் 2 மே 2016.
  10. http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=2037&Cat=3 சப்தகன்னியர் தரிசனம் : ட்வென்ட்டி 20 - ந.பரணிகுமார் பார்த்த நாள் ஜூலை 7 2013

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.