சதானிகன்

சதானிகன் [1]என்பவன் பெருங்கதை பெருங்கதை என்னும் இலக்கியத்தில் வரும் கதை மாந்தர்களில் ஒருவன். கௌசம்பி (கோசம்பி [2]) நகரைத் தலைநகராகக் கொண்டு வத்தவ நாட்டை ஆண்ட அரசன். இவனது மனைவி மிருகாபதி. பெருங்கதை காப்பியத் தலைவன் உதயணின் தந்தை. மிருகாபதி தன் தந்தை சேடகன் மிருகாபதியின் அண்ணன்மார் ஒன்பதின்மருடன் துறவு பூண்டு காட்டுக்குச் சென்று தவம் செய்யும் செய்தியை அறிந்து மயக்குற்றாள். பித்தானாள். பித்தான தன் மனைவியை இயற்கை வளம் நிறைந்த பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று காட்டிப் பரிவுடன் நடத்தியவன்.

மிருகாபதியைச் சரபப்புள் தூக்கிச் சென்தை அறியாமல், மனைவியைப் பல இடங்களிலும் தேடி அலைந்தான். காணமுடியவில்லை. வருத்தத்துடன் நாடாண்டுவந்தான். நீண்ட காலத்துக்குப் பிறகு சுவ்ருவர் என்னும் முனிவரைக் கண்டு மனைவியைக் காணாத தன் குறையை எடுத்துரைத்தான். அவர் சதானிகனின் மகன் உதயணனாக வைசாலி நகரில் இருந்துகொண்டு நாடாண்டுவருவதை ஞானத்தால் உணர்ந்து மன்னனுக்குக் கூறினார். சதானிகன் வைசாலி நகருக்குச் சென்று மனைவியையும், மகனையும் கண்டு மகிழ்ந்து அவர்களுடன் சில காலம் தங்கியிருந்தார். பின்னர் தன் மனைவியை அழைத்துக்கொண்டு தன் நாட்டுக்குத் திரும்பி மகிழ்வுடன் தன் நாட்டை ஆண்டுவந்தான்.

அக்காலத்தில் மிருகாபதிக்கு மேலும் இரண்டு ஆண்மக்கள் பிறந்தனர். பிங்கலன், கடகன் என்பன அவர்களின் பெயர்கள்.

பின்னர் சதானிகன் ஆட்சியை வெறுத்தான். துறவு பூண்டு தவம் இயற்ற விரும்பினான். வைசாலியில் இருந்துகொண்டு சேதி நாட்டை ஆண்டுவந்த தன் மூத்த மகன் உதயணனைக் கோசம்பி நகருக்கு அழைத்துவந்து வத்தவ நாட்டு ஆட்சிப் பொறுப்பையும் அவனிடம் ஒப்படைத்துவிட்டுத், தன் விருப்பம் போல் காட்டுக்குச் சென்று தவம் செய்யலானான்.

அடிக்குறிப்பு

  1. = கொங்குவேளிர் (கி.பி. 7 ஆம் நூற்றாண்டு). பெருங்கதை (4 தொகுதிகள்). சென்னை: உ. வே. சாமிநாதையர் பதிப்பு, ஆறாம் பதிப்பு 2000, முதல் பதிப்பு 1934, வெளியீட்டு எண் 40. பாகம் 1 முன்னுரை பக்கம் 7
  2. பெருங்கதை நூல் குறிப்பிடும் பெயர்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.