கொங்குவேளிர்

கொங்குவேளிர் பெருங்கதையின் ஆசிரியர். கொங்கு நாட்டைச் சேர்ந்தவர்; வேளாள மரபில் பிறந்தவர். சிற்றரசர்களுள் ஒருவர்.[1] இவர் பிறந்த ஊர் கொங்கு நாட்டில் உள்ள விசயமங்கலம் என்று கூறுவர்.[2] இவர் தமிழ்ப் புலவர் பலரை ஒன்று சேர்த்து ஆய்வு செய்யும் அமைப்பை ஏற்படுத்தி இருந்தார். அடியார்க்கு நல்லார் என்னும் சிலப்பதிகார உரையாசிரியரின் கூற்றின்படி கொங்குவேளிர் காலத்தில் இடைச்சங்க நூல்கள் வழக்கத்தில் இருந்துள்ளதை அறிய முடிகின்றது. இவரும் இவரது காலத்துப் புலவர்களும் இடைச்சங்க நூல்களில் ஆழ்ந்த புலமை கொண்டிருந்ததும் தெரிய வருகின்றது.

வரலாறு

கொங்குவேளிரின் வாழ்க்கை வரலாற்றைக் கொங்கு மண்டல சதகம் என்னும் நூல் விவரித்துள்ளது.

நீதப் புகழ்உத யேந்திரன் காதை நிகழ்த்துதற்குக்
கோதற்ற மங்கையின் மூன்று பிறப்புற்ற கொள்கையன்றி
மேதக்க சொற்சங்கத் தார்வெள்க வேகொங்கு வேள்அடிமை
மாதைக்கொடு உத்தரஞ் சொன்னது வும்கொங்கு மண்டலமே.[3]

குற்றமற்ற மங்கை ஆகிய விசயமங்கலம் என்னும் ஊரில் பிறந்தவர் கொங்குவேளிர். இவர் புகழ்மிக்க உதயணன் கதையைப் படைப்பதற்காக மூன்று பிறவி எடுத்தவர். உதயணன் கதையைப் படைத்துச் சங்கத்தில் அரங்கேற்றம் செய்தார். அப்போது சங்கத்தில் உள்ள புலவர்கள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் அவர்கள் வெட்கப்படுமாறு தம் வீட்டு வேலைக்காரப் பெண்ணின் மூலம் விடை தந்தார்.

சோதிடமும் மூன்று பிறவியும்

கொங்குவேளிர் நூல் செய்துவரும்போது, இவருக்கு விரைவில் மரணம் நேரும் என்று சோதிடர் கூறினர். இதனை அறிந்த கொங்குவேளிர் எப்படியாவது மரணத்தைத் தள்ளிப்போட்டு நூலை முடிக்க வேண்டும் என்று எண்ணினார். இதற்காக மூன்று பிறவி எடுக்கத் திட்டமிட்டார். இதன்படி இல்லறம் ஒரு பிறவி ஆயிற்று. இல்லறத்திலிருந்து நீங்கி, வானப்பிரத்தம் (மனைவியுடன் காட்டிற்குச் சென்று தவம் செய்தல்) மேற்கொண்டார். இது இரண்டாம் பிறவி ஆயிற்று. இதிலிருந்தும் நீங்கித் துறவறம் மேற்கொண்டார். இது மூன்றாம் பிறவி ஆனது. துறவறம் பூண்டு பெருங்கதையை நிறைவு செய்தார் என்று உ. வே. சாமிநாதையர் கூறுவார்.[2]

மூன்று பிறவியின் இரண்டாவது பொருள்

உதயணன் கதையை இயற்றுவதற்கு மூன்று பிறவி எடுத்தார் என்பதற்கு வேறொரு பொருளும் உண்டு. இவர் முதற் பிறவியில் குணாட்டியராகப் பிறந்து பைசாச மொழியில் இக்காப்பியத்தைப் படைத்தார். இரண்டாவது பிறவியில் துர்விநீதனாகப் பிறந்து வடமொழியில் இக்காப்பியத்தைப் படைத்தார். மூன்றாவது பிறவியில் கொங்குவேளிராகப் பிறந்து தமிழில் பெருங்கதையைப் படைத்தார். இவ்வாறு பொருள் கொள்வதும் உண்டு.

காலமும்

கொங்குவேளிரின் காலத்தைப் பற்றிச் சரியாகக் கணித்திடச் சான்றுகள் கிடைக்கவில்லை என்று உ.வே. சாமிநாதையரும், பொ.வே. சோமசுந்தரனாரும் கருதுகின்றனர்.[2] என்றாலும் இப்புலவர் கடைச்சங்க காலத்தை ஒட்டிய காலப் பகுதியில் வாழ்ந்திருக்க வேண்டும் என்றும் ஊகிக்கின்றனர். திருத்தக்க தேவர் இயற்றிய சீவக சிந்தாமணிக் காப்பியத்திற்கு முன்பும், சிலப்பதிகாரம், மணிமேகலை படைக்கப்பெற்ற காலத்தை ஒட்டியும் பெருங்கதை படைக்கப்பட்டிருக்க வேண்டும்[4] என்பது தெரிகிறது. [5]

சமயம்

கொங்குவேளிர் சமண சமயத்தைச் சேர்ந்தவர். சமணக் கருத்துகள், தத்துவங்கள் பலவற்றைப் பெருங்கதையில் படைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேற்கோளும் குறிப்புகளும்

  1. வேளாளர்களே 'வேளிர்' எனப்படுவோர். சங்க காலத்தில் வேளிர்கள் ஒவ்வொரு பகுதியையும் ஆண்டனர். இவர்கள் குறுநில மன்னர்களாகவும், சிற்றரசர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.
  2. "கொங்குவேளிர் வரலாறு". முனைவர். நா. செல்வராசு. பார்த்த நாள் நவம்பர் 26, 2012.
  3. கொங்கு மண்டல சதகம் - 99
  4. இலக்கியச் சிந்தனை. 1992.
  5. http://www.indian-heritage.org/tamilliterature/kapiyam.html
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.