சங்கீத நாடக அகாதமி
சங்கீத நாடக அகாதமி (Sangeet Natak Akademi, தேவநாகரி: संगीत नाटक अकादेमी அல்லது தமிழில் இசை, நடனம் மற்றும் நாடக தேசிய மன்றம் இந்திய அரசால் நிகழ்த்து கலைகளுக்காக நிறுவப்பட்டுள்ள தேசியளவிலான அகாதமியாகும். 1952ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் கல்வி அமைச்சக்கத்தின் கீழ் புது டெல்லியில் அமைக்கட்ட இந்த மன்றத்தின் முதல் மன்றத்தலைவராக பி. வி. இராசமன்னார் நியமிக்கப்பட்டார். இதன் திறப்புவிழா சனவரி 28, 1953 அன்று அன்றைய இந்தியக் குடியரசுத் தலைவர் இராஜேந்திரப் பிரசாத் அவர்களால் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்தது. இம்மன்றத்தின் கூட்டாளராகச் சேர்ப்பு மற்றும் விருதுகள் பெருமையும் சிறப்பு மிக்கனவாகவும் கருதப்படுகின்றன. இந்த சங்கீத நாடகக் கழகம் சுய நிர்வாகப் பொறுப்புள்ளது. பொதுக் குழு, செயற் குழு, நிதிக் குழுவால் அவ்வப்போது நியமிக்கப்படும் சிறப்புக் குழுக்கள் இவற்றின் மூலம் இக்கழகத்தின் நிர்வாகம் நடைபெறுகின்றது.
சுருக்கம் | SNA |
---|---|
உருவாக்கம் | 31 மே 1952 |
தலைமையகம் | ரபீந்தர பவன், பிரோஸ்ஷா சாலை, புதுதில்லி, இந்தியா |
மன்றத்தலைவர் | லீலா சாம்சன்[1] |
வலைத்தளம் | மன்ற அலுவல்முறை இணையதளம் |
குறிக்கோள்
இசை, நாட்டியம், நாடகம் ஆகிய கலைகளை ஊக்கி வளர்ப்பதே இதன் முக்கிய குறிக்கோள் ஆகும்.
பணிகள்
- அழகுக் கலை நிறுவனங்கள் பலவற்றிற்கு மானியம் வழங்குவதும், ஆராய்ச்சிக்கு வழி வகுப்பதும், பயிற்சி நிலையங்களை நிறுவுவதும், கருத் தரங்குகளை அமைப்பதும், விழாக்களை நடத்துவதும் இக்கழகத்தின் பணிகள். இசை, நாட்டியம், நாடகம் இவற்றில் வெளியாகக்கூடிய அரிய நூல்களுக்குப் பண உதவியும் அளித்து வருகின்றது.
- நாடோடிக் கூத்துகளையும், பாடல்களையும் திரை மென்படங்களிலோ, நாடாக்களிலோ, புகைப்படங்களிலோ பதிவு செய்து பாதுகாத்து வருவதற்குத் திட்டம் ஒன்றை இக்கழகம் தொகுத்துள்ளது.
- சாஸ்திரீய இசைப் பாடல்களையும் நாடோடிப் பாட்டுகளையும் பதிவு செய்த நாடாக்களைச் சேர்த்துவைக்க ஒரு நூலகமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- இசைக் கருவிப் பொருட்காட்சி ஒன்றும், ஒலி/ ஒளிப்பதிவு அறையும் அமைக்கப்பட்டுள்ளன. இசை, நாட்டியம், நாடகம் இவற்றில் அபூர்வ உருப்படிகளையும் தனிப்பட்ட கலைஞர்களையும் இக்கழகம் அரங்கேற்றுவிக்கின்றது.
- 'சங்கீத நாடக்' என்ற அரையாண்டு இதழ் ஒன்றையும்,திங்கள் செய்தி வெளியீடு ஒன்றையும் இது வெளியிட்டு வருகின்றது.
- இக்கழகம் டெல்லியில் ஒரு தேசீய நாடகப் பள்ளியை நடத்தி வருகிறது. அதில் நாடகத் துறையில் மூன்றாண்டு பயிற்சி விரிவாக அளிக்கப்படுகின்றது.
- இம்பால் நகரிலுள்ள ஜவாஹர்லால் நேரு மணிப்புரி நாட்டியக் கழகமும், டெல்லியிலுள்ள கதக் கேந்திரமும் இக்கழகம் நடத்திவரும் பிற நாட்டியப் பயிற்சிப்பள்ளிகள் ஆகும்.
குறிப்பு
இந்தியாவின் பன்னிரண்டு மாநிலங்களில் இதுபோன்ற தனி நிர்வாகப் பொறுப்புள்ள சங்கீத நாடக சங்கங்கள் உள்ளன. தமிழகத்திலும் சென்னை மாநில சங்கீத நாடக சங்கம் என்ற பெயரில் ஒரு சங்கம் இயங்கி வருகின்றது[2].
மேற்கோள்கள்
- "Who’s who of the Akademi". SNA website.
- http://www.tamilvu.org/library/libindex.htm
வெளியிணைப்புகள்
- The official website of the Sangeet Natak Akademi
- An agenda for the arts, Frontline magazine (The Hindu), February 15 - 28, 2003 - article on 50th anniversary
- Data Bank on Traditional/Folk performances
- Current events page on the website (slightly outdated)
- The Academy's Official List of Award winners.
- D. G. Godse The Academy's Awardee 1988
- carnatic india a portal on Indian classical fine arts.
- Akdemi Music.