அருந்ததியர்

அருந்ததியர் (Arunthathiyar) அல்லது சக்கிலியர் (Chakkiliyar) எனப்படுவோர் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் வசித்து வரும் பட்டியல் சாதியைச் சேர்ந்த ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் தலித்து என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் ஆந்திராவிலிருந்து தெலுங்கு மொழி பேசும் மக்களுடன், விஜயநகர ஆட்சியின் போது விஜயநகர மன்னர்களால் தமிழ்நாட்டிற்கு குடியமர்த்தப்பட்டதாக கருதப்படுகிறது.[1]

பெயர்க் காரணம்

சக்கிலியர் என்பது ஸ்சட்குழி என்ற சமசுகிருத சொல் மாறி சக்கிலி என்று அழைக்கப்படுகிறது. ஸ்சட்குழி என்ற சமசுகிருத சொல்லுக்கு “செத்த மாட்டை உண்பவன்” அல்லது “அதிக இறைச்சி உண்பவன்” என்று பொருளாகும்.[2]

விஸ்வநாத நாயக்கர் (1529–1564 ஆட்சியாண்டு) காலகட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் தெலுங்கர்கள் மதுரைப் பகுதியில் வந்து குடியேறினர். இவர்களுடன் அருந்ததியர்களும் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.[3][4]

இவர்களின் முக்கியத் தொழிலான கிணற்றுப் பாசனத்தைக் கொண்டிருந்த விவசாயத்திற்குத் தேவையான பரியை மூட்டித் தருவது, போர்முனைகளுக்குத் தேவையான தோல்கருவிகளைத் தயாரிப்பது, செருப்பு தைப்பது என பெரும்பாலும் தோல் பணியாளர்களாகவே அறியப்பட்ட இம்மக்கள், மின்சாரம் - பம்புசெட் - பிளாஸ்டிக் - ரப்பர்- என்று உருவான மாற்றங்களால் தங்களது பாரம்பரியத் தோல் தொழிலை இழந்து தாழ்வாக நிலைக்கு தள்ளப்பட்டார்கள். வரலாற்றின் ஒரு காலப்பகுதியில், இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் ஒரு மக்கள் குழுவினர் பலவந்தமாகவும், சமயக் கட்டுப்பாடுகள் மூலமாகவும் இத்தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனடிப்படையில் இந்தியா முழுவதும் அருந்ததியருக்கு (சக்கிலியர்) இணையான சாதிகளைக் காணலாம். வட இந்தியாவின் சண்டாலா, பாங்கி போன்றவை உதாரணங்களாகும்.[5]

இவர்களின் முக்கிய தொழில் துப்புரவுப் பணியாளர்கள் என்றபடியால் கிராமப்புறங்களில் மற்ற தலித் பிரிவினராலேயே இவர்கள் ஒதுக்கப்படுகின்றனர்.[6]

மக்கட் தொகை

2001 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் 771,659 அருந்ததியர் இருந்ததாகவும், இது மாநிலத்தின் பட்டியல் சாதி மக்களில் 6.5 சதவீதமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.[7]

விடுதலைக்குப் பின்

இந்திய விடுதலைக்கு பின் சட்டப்படி இவர்கள் பட்டியல் சமூகத்தவராக அறிவிக்கப்பட்டனர். அரசாங்க பணிகளிலும், அரசியல் பதவியிலும், மருத்துவர்களாகவும், வழக்கறிஞர்களாகவும், உயரத் தொடங்கினர்.


தமிழகத்தில் அருந்ததியர் உள்ஒதுக்கீடு

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் பல அமைப்புகளின் போராட்டங்களின்[8] விலைவாக ,கருணாநிதி தலைமையிலான திமுக அரசு , சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனம் தலைமையில் அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரை செய்ய ஒரு நபர் குழு 2008ஆம் ஆண்டு மார்ச் 25ம் தேதி அமைத்தது.இக்குழு ஏறத்தாழ ஒரு ஆண்டு காலம் பல விசாரணைகள் நடத்தியும், விபரங்கள் சேகரித்தும் அருந்ததியர், சக்கிலியர், மாதாரி, ஆதிஆந்திரர், பகடை, மடிகா, தோட்டி ஆகிய பிரிவினரை உள்ளடக்கிய அருந்ததியர்களுக்கு அவர்களின் மக்கள் தொகை அடிப்படையில் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது. தமிழக அரசு இதன் விபரங்களையும், சிபாரிசுகளையும் ஏற்று தலித்துகளுக்கு தமிழகத்தில் வழங்கப்படும் பொது இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடாக 3 சதம் அருந்ததியர் மக்களுக்கு வழங்கி 2009ஆம் ஆண்டு ஆணை வெளியிட்டது.[9]

தொழில்கள்

ஆடு மாடு மேய்த்தல், மாட்டிறைச்சி வியாபாரம், குத்தகை முறை விவசாயம், பல்வேறு விதமான குடிசைத்தொழில்கள், சிறு வணிகர்கள் மற்றும் பறையிசைக்கலைஞர்கள் போன்ற தொழில்கள் செய்துவருகின்றனர்.

குறிப்பிடத்தக்க மக்கள் 

  • மதுரை வீரன் - ஒரு நாட்டுப்புற பாடகர்
  • ஒண்டிவீரன் - பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிரான சுதந்திரப் போராட்டவீரர்
  • குயிலி - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் போராளி
  • ப. தனபால் - தமிழக சட்டப்பேரவையின் முதல் தலித் சபாநாயகர்

மேற்கோள்கள்

  1. "தமிழகத்தில் தலித்துகளின் நிலை".
  2. நெல்லை. சு. தாமரைப் பாண்டியன் எழுதிய “நாட்டார் வழக்காறுகளில் மக்கள் இடம் பெயர்வும் வரலாறும் நூல், பக்கம்: 71.
  3. Singh, Nagendra Kr (20 November 2019). "Global Encyclopaedia of the South Indian Dalit's Ethnography". Global Vision Publishing House.
  4. University, Vijaya Ramaswamy, Jawaharlal Nehru (22 May 2007). "Historical Dictionary of the Tamils". Scarecrow Press.
  5. "Tamil Nadu Government Gazette". Government of Tamil Nadu (12 March 2009). பார்த்த நாள் 2015-04-05.
  6. "தமிழகத்தில் தலித்துகளின் நிலை" (தமிழ் மொழி). பிபிசி (மார்ச் 16, 2006). பார்த்த நாள் சனவரி 1, 2015.
  7. "Tamil Nadu Date Highlights: The Scheduled Castes Census of India 2001". Office of the Registrar-General. பார்த்த நாள் 2015-04-05.
  8. https://frontline.thehindu.com/static/html/fl2601/stories/20090116260110500.htm
  9. http://cms.tn.gov.in/sites/default/files/go/adtw_e_61_2009.pdf

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.