கோ. சாரங்கபாணி

கோ. சாரங்கபாணி (ஏப்ரல் 19, 1903 - 1974) சிங்கப்பூரில் தமிழ்த் தொண்டாற்றியவர். பத்திரிகைத் துறையில் பணியாற்றினார். 1935 இல் தமிழ் முரசு பத்திரிகையை வார இதழாகத் தொடங்கியவர். தமிழ் முரசு வழியாகவே எழுத்தாளர் பேரவை, மாணவர் மணிமன்ற மலர், தமிழ் இளைஞர் மணிமன்றம் ஆகிய அமைப்புகளை உருவாக்கினார்.

தமிழ்வேள் கோ. சாரங்கபாணி
Thamizhavel G. Sarangapani
பிறப்பு ஏப்ரல் 19, 1903
திருவாரூர், தமிழ்நாடு
இந்தியா
இறப்பு மார்ச்சு 16, 1974(1974-03-16) (அகவை 70)
தொழில்தமிழ் ஊடகவியலாளர், எழுத்தாளர், வெளியீட்டாளர்
வேறு பெயர்கள்கோசா
குறிப்பிடத்தக்க மதிப்பு(கள்)
Agentதமிழ் முரசு

வாழ்க்கைச் சுருக்கம்

1903-ல் தமிழகத்தில் பிறந்த கோ. சாரங்கபாணி திருவாரூரில் உயர்நிலைப்பள்ளியில் மெட்ரிக்குலேஷன் பரீட்சையில் தேறினார். 1924- ல் தமது இருபதாவது வயதில் சிங்கப்பூர் வந்தார். சிங்கப்பூரில் "முன்னேற்றம்" என்னும் பத்திரிகையில் துணையாசிரியராக தமது எழுத்துப் பணியைத் துவங்கினார். 1930 ம் ஆண்டில் அதன் ஆசிரியரானார். முன்னேற்றம் பத்திரிகையில் பல சீர்திருத்தக் கருத்துக்களையும் பகுத்தறிவுக் கட்டுரைகளையும் எழுதினார்.

1934-இல் "தமிழ் முரசு" செய்தி இதழை வாரந்தோறும் வெளியிட்டார். இப்பத்திரிகை மக்களிடம் அதிக செல்வாக்குப் பெறவே அது 1935-ல் தினசரியாக விரிவடைந்தது. தமிழ் முரசு பெரியாரின் கொள்கைகளையும் தமிழ் சீர்திருத்த சங்கத்தின் முற்போக்கான இலட்சியங்களையும் சாதி ஒழிப்பையும் பிராமண எதிர்ப்பையும் சனாதனக் கொள்கைகளையும் எழுதியது[1].

கோ.சா அவர்கள் 'சீர்திருத்தம்' என்ற மாத இதழையும் 'ரிபார்ம்' (Reform) என்னும் ஆங்கில மாத இதழையும், 'இந்தியன் டெய்லி மெயில்' (Indian Daily Mail) என்ற ஆங்கிலத் தினசரி செய்தி இதழையும் நடத்தினார்.

தமிழவேள்

தவத்திரு குன்றக்குடி அடிகளார் 1955-ல் கோலாலம்பூர் வந்திருந்தபோது கோ.சா அவர்களுக்குத் "தமிழவேள்" எனும் சிறப்புப் பட்டமளித்துப் பாராட்டினார். ஆண்டுதோறும் முத்தமிழ் விழாவில் வழங்கப்படும் தமிழவேள் விருது சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்துறையின் ஒரு முக்கியவிருதாகக் கருதப்படுகிறது. இவ்விருது கோ. சாரங்கபாணி அவர்களின் பெயரால் வழங்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் முத்தமிழ் விழாவின் போது தமிழ்த் தொண்டாற்றும் ஒரு சிங்கப்பூரர் தேர்ந்தெடுக்கப்பட்டு இவ்விருதின் மூலம் கௌரவிக்கப்படுகிறார். 1988ஆம் ஆண்டு முதல் இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேற்கோள்கள்

  1. செய்தி இதழ் - சிங்கை கிருஷ்ணன்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.