கொழுமிய ஈரடுக்கு

கொழுமிய ஈரடுக்கு (lipid bilayer) என்பது இரு படல (அடுக்கு) கொழுமிய மூலக்கூறுகளாலான மெல்லிய சவ்வாகும். தட்டையான விரிப்புகளாக உள்ள இம்மென்படலங்கள் உயிரணுக்களைச் சுற்றி தொடர் தடுப்புச் சுவர்களை உருவாக்குகின்றன. கிட்டத்தட்ட அனைத்து உயிரினங்களின், பல வைரசுகளின் உயிரணு மென்தோல்கள் கொழுமிய ஈரடுக்குகளால் உருவானது. இவ்வண்ணமே, உயிரணு உட்கருவை, பிற உள்-உயிரணு வடிவமைப்புகளைச் சுற்றிலுமுள்ள மென்படலங்களும் கொழுமிய ஈரடுக்குகளால் உருவானதேயாகும்.

இந்த நெகிழ்வுடைய கொழுமிய ஈரடுக்கின் குறுக்கு வெட்டுத் தோற்றமானது முற்றிலுமாக பொஸ்போகொழுமியங்களினால் உருவானது.
கரைசலில் பாஸ்போகொழுமியங்களின் மூன்று முக்கிய வடிவங்கள்; லைப்போசோம் (மூடிய ஈரடுக்கு), கொழுமியத் துகள்கள், தட்டையான ஈரடுக்குகள்.

இங்ஙனம் கொழுமிய ஈரடுக்குகளால் உருவான தடுப்புச் சுவர்கள் அயனிகள், புரதங்கள் மற்றும் பிற மூலக்கூறுகளைத் தேவையான இடத்தில் வைக்கும் அதே சமயத்தில் தேவையில்லாத இடங்களில் இம்மூலக்கூறுகள் விரவாமல் தடுக்கவும் செய்கின்றன. பெரும்பாலான, நீரில் கரையும் (நீர்-விரும்பும்) மூலக்கூறுகள் ஊடுருவமுடியாமலுள்ளத் தன்மையினால், சில நானோமீட்டர் அகலமே இருந்தாலும், கொழுமிய ஈரடுக்குகள் இப்பணிக்கு சிறந்த தகுதி வாய்ந்தவைகளாக உள்ளன. கொழுமிய ஈரடுக்குகள் முக்கியமாக அயனிகளைக் கசியவிடாமல் தடுப்பதால், செல்கள் அயனிஏற்றி புரதங்களைக் கொண்டு மென்படல எதிர்ப்பக்கத்திற்கு அயனிகளை ஏற்றி உப்புச் செறிவுகளையும், அமிலக்காரத் தன்மையையும் ஒழுங்குப்படுத்துகின்றன.

இயற்கையான கொழுமிய ஈரடுக்குகள் பொதுவாக பாஸ்போகொழுமியங்களால் உருவானவையாகும். பொஸ்போகொழுமிய மூலக்கூறுகள் ஒவ்வொன்றும் நீர்நாட்டமுள்ள (hydrophilic) தலைப் பகுதி ஒன்றையும், நீர்விலகுதன்மை (hydrophobic) கொண்ட இரு வால்ப் பகுதிகளையும் கொண்டதாக இருக்கும். இத்தகைய அமைப்பைக் கொண்டிருப்பதனால் பொஸ்போகொழுமிய மூலக்கூறுகள் நீருடன் தொடர்பில் வரும்போது, அவை தம்மைத்தாமே ஈரடுக்காக ஒழுங்குபடுத்திக் கொள்கின்றன. நீர்நாட்டமுள்ள தலைப்பகுதிகள் நீருடன் தொடர்புகொண்ட நிலையில் வெளிப்புறமாகவும், நீர்நாட்டமட்ட வால்ப்பகுதிகள் உள்ளே ஒன்றையொன்று நோக்கியபடி நடுப்பகுதியிலும் ஒழுங்குபடுத்தப்படுவதனால், இவ்வாறான ஈரடுக்கு அமைப்புக்கள் தோன்றுகின்றன.

உயிரணுமென்சவ்வில் கொழுமிய ஈரடுக்கு

மெய்க்கருவுயிரியின் உயிரணு மென்சவ்வு விளக்கப்படம்

உயிரணு மென்சவ்வானது தட்டையான கொழுமிய ஈரடுக்கு வடிவத்தில் காணப்படும். சில ஆர்க்கியா இனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து உயிரினங்களிலும், இவ்வகையான ஈரடுக்கு நிலையே உயிரணு மென்சவ்வில் காணப்படுகின்றது. அந்தக் குறிப்பிட்ட சில ஆர்க்கியா இனங்களில் ஈரடுக்கின்றி, மென்சவ்வானது கொழுமிய தனிப்படையாலானதாக இருக்கின்றது[1].

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

  1. Parker J, Madigan MT, Brock TD, Martinko JM (2003). Brock biology of microorganisms (10th ). Englewood Cliffs, N.J: Prentice Hall. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-13-049147-0.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.