கொடுங்கல்லூர் பகவதி கோவில்

கொடுங்கல்லூர் பகவதி கோவில் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தின் கொடுங்கல்லூர் பகுதியில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோவில் ஆகும். இங்கு வீற்றிருக்கும் எட்டுக்கரங்கள் கொண்ட இக்கோவில் மூலவரான பத்திரகாளி[1] "கொடுங்கல்லூரம்மை" என்றழைக்கப்படுவதுடன், கண்ணகியாகவும் வழிபடப்படுகின்றாள்.[2]

கொடுங்கல்லூர் பகவதி கோவில்
கொடுங்கல்லூர் பகவதி கோவில்
பெயர்
பெயர்:குரும்பா பகவதி அம்மை காவு
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கேரளா
மாவட்டம்:திருச்சூர் மாவட்டம்
அமைவு:கொடுங்கல்லூர்
கோயில் தகவல்கள்
மூலவர்:பத்திரகாளி, கண்ணகி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கேரளப்பாணி
வரலாறு
கட்டப்பட்ட நாள்:தெரியவில்லை

வரலாறு

கேரளத் தொன்மத்தின் படி, ஆரம்பத்தில் சிவாலயமாக இருந்த இக்கோவிலில்,பரசுராமரால் பகவதி தேவிக்கு சன்னதி அமைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது.[3] பரசுராமரையும், சேரநாட்டு மக்களையும் வருத்திய "தாரகன்" எனும் அசுரனை அழிப்பதற்காக, ஈசன் ஆணைப்படி இவ்வாலயம் அமைக்கப்பட்டு, பகவதி வழிபடப்பட்டு வந்ததாகவும், பின் தேவி பத்திரகாளி] வடிவெடுத்து, தாருகனை வதைத்ததாகவும், தலபுராணம் சொல்கின்றது. இன்னொரு கருத்தின்படி, மதுரையை எரித்தபின், சேர நாட்டுக்கு வந்த கண்ணகியே இங்கு கோயில் கொண்டிருக்கிறாள். ஆதிசங்கரரால் நிறுவப்பட்டதாக நம்பப்படும் ஆறு சிறிசக்கரங்களே, இத்தேவியின் வரமருள் திறத்துக்குக் காரணம்.

கொடுங்கல்லூர் பகவதி

நம்பூதிரிகளும், "அதிகர்" எனப்படும் மதுப்பிராமணர்களும் இங்கு தேவிக்குப் பூசனை புரிகின்றனர். ஆடு, கோழி முதலியன பலியிடப்பட்ட இக்கோவிலில் இன்று, அரச ஆணையால், உயிர்ப்பலி தடுக்கப்பட்டுள்ளது. செஞ்சாயமூட்டிய வேட்டிகளே இத்தேவிக்குரிய முக்கிய காணிக்கையாக இந்நாட்களில் விளங்குகின்றது.[4][5]

பண்டைய சேரநாட்டுத் தலைநகரான மகோதையபுரத்தின் தொடர்ச்சியான கொடுங்கல்லூர் அரச குடும்பத்தாரின் குலதெய்வமும் இவளே. அம்மையின் திருக்கதவம் திறக்கப்படும் போது, மன்னர் வருகை தந்து, பட்டுக்குடையை விரிப்பது இன்றும் அங்கு தொடரும் நம்பிக்கை. "காவுதீண்டல்" எனும் சடங்கு, அனைத்துக் குலத்தாரும் ஆலயத்துக்க்குள் அனுமதிக்கப்பட்டதை நினைவுகூரும் சடங்காக அமைகின்றது. இக்கோவிலின் மூலக்கோவில் என்று கருதப்படும் ஆதி குரும்பா பகவதி கோவில், கொடுங்கல்லூர் நகரின் தென்புறம் அமைந்திருக்கின்றது. குடும்பி குலத்து மக்கள், இக்கோவிலைப் பராமரித்து வருகின்றார்கள்.

கோயில் அமைப்பு

ஒருபுறமும் சிவனும் மறுபுறம் கணபதியும் ஏழ்கன்னியரும் அமர்ந்திருக்க, நடுவே தேவி நிறுவப்படவேண்டும் எனக்கூறும் "ருருஜித் விதானம்" எனப்படும் தாந்திரீக முறைப்படியே இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. வடக்குப் பார்த்த இக்கோவில் ஆல், அரசு மரங்கள் நிறைந்த பத்து ஏக்கர் பரப்பளவுள்ள நிலப்பரப்பில் அமைந்து விளங்குகின்றது. வெளிவீதியில் மேற்குப் பார்த்த நிலையில், பன்னிரண்டு அடி உயரத்தில் சேத்திரபாலரும், தென்மேற்கு மூலையில், வடக்குப் பார்த்தவளாக கூரையற்ற ஆலயத்தில் "வைசூரிமாலை"யும் வீற்றிருக்கின்றனர். அம்மை முதலான நோய்கள் தீர, வைசூரிமாலைக்கு மஞ்சள் பூசி வழிபடுவது இங்குள்ள வழக்கமாக இருக்கின்றது. சேத்திரபாலரும் வைசூரிமாலையும் தான் கோவலனும் கண்ணகியும் என்ற நம்பிக்கையும் உண்டு.[6]

நடுவிலுள்ள வடக்கு நோக்கிய கருவறையில், ஏழடி உயரத்தில், எட்டுக்கரங்களுடன், பலாமரத்தாலான சிற்பமாக அருள்பாலிக்கிறாள் கொடுங்கல்லூர் பகவதி. இங்கு எப்போதும் மூடப்பட்டே இருக்கும் சிற்றறை ஒன்றில், சிறிசக்கரமோ அல்லது வேறேதும் மறைகுறியோ வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது. இதன் அருகே கிழக்கு நோக்கியவண்ணம், பழைமைவாய்ந்த ஈசனின் கருவறை அமைந்திருக்கின்றது. பகவதி சன்னதியின் மறுபுறம் பிள்ளையாரும் ஏழ்கன்னியரும் அமர்ந்திருக்கும் சன்னதி உள்ளது.[7] கோயிலிலிருந்து ஐம்பது மீற்றர் தள்ளி, தீர்த்தக்குளமான "புஷ்கரிணி" விளங்குகின்றது.

விழாக்கள்

பரணி

கொடுங்கல்லூர் பரணி விழா

கும்பமாதத்து பரணி விண்மீன் தொடங்கி, மீனமாதத்துப் பரணி வரை நிகழும் பரணி விழா, கேரளத்தின் புகழ்பெற்ற விழாக்களில் ஒன்றாகும். "கோழிக்கல்லுமூடல்" எனும் உயிர்ப்பலியுடன் பரணி விழா ஆரம்பிக்கும். கொடுங்கல்லூர் மன்னரின் மேற்பார்வையில், இங்கு நிகழும் "காவு தீண்டல்" பரணி விழாவின் இன்னொரு முக்கியமான நிகழ்வு ஆகும். இதன்போது, கெட்ட வார்த்தைகளால் திட்டியபடியே, ஆலயத்தைச் சுற்றிப் பக்தர்கள் ஓடி வலம்வருவது காவுதீண்டலின் முக்கிய அம்சம். "சந்தனப்பொடி சார்த்தல்" எனும் இன்னொரு நிகழ்வும் இதன்போது இடம்பெறுவதுண்டு.[8][9]

தாலப்பொலி

மகர மாதத்தில் (யனவரி - பெப்பிரவரி) நான்குநாட்கள் இடம்பெறும் தாலப்பொலி, இன்னொரு முக்கியமான விழா. மகர சங்கிராந்தியன்று மாலை தொடங்கி, நான்கு நாட்கள் இடம்பெறும் தாலப்பொலியில், குடும்பி குலத்துப் பெண்டிரும், ஏனைய பக்தையரும், யானைகள் முன்செல்ல, பஞ்சவாத்தியம் முதலான வாத்தியங்கள் முழங்க, தேங்காய், அரிசி, தீபம் என்பன கொண்ட தாலத்தை (தட்டு) ஏந்தியவர்களாக ஊர்வலமாக ஆலயம் வருவர்.

மேலும் பார்க்க

அடிக்குறிப்புகள்

  1. "Kodungallur Kurumba Bhagavathi Temple". Temples of Kerala. பார்த்த நாள் 2010-12-05.
  2. "Kavu Theendal ceremony today". The Hindu (Chennai, India). 2012-03-25. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/article3222350.ece.
  3. "Kodungallur Kurumba Bhagavathi Temple". Temples of Kerala. பார்த்த நாள் 2010-12-05.
  4. "Kodungallur". TempleNet. பார்த்த நாள் 2010-12-05.
  5. "Kodungallur Kurumba Bhagavathi Temple". Temples of Kerala. பார்த்த நாள் 2010-12-05.
  6. "kodungallur Bahagavathi". templeadvisor. பார்த்த நாள் 2015-09-25.
  7. "Kodungallur". BizHat.com. பார்த்த நாள் 2010-12-05.
  8. "Oracles Throng Kodungallur Bhagavathy Temple". Oneindia. பார்த்த நாள் 2010-12-05.
  9. "'Kavutheendal' observed at Kodungallur". Chennai, India: The Hindu. 2004-03-24. http://www.hindu.com/2004/03/24/stories/2004032405250400.htm. பார்த்த நாள்: 2010-12-05.

வெளி இணைப்புகள்

அம்மா கண்ணகி பகவதி தி இந்து தமிழ் 2017 அக்டோபர் 26

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.