குதிரைமலை

குதிரைமலை, ஆனைமலை தோட்டிமலை போன்ற மலைப்பெயர்கள் அவற்றின் உருவத்தால் பெயர் பெற்றவை.

மேல்வானிலிருந்து பார்க்கும்போது குதிரை-முகம் போலத் தோற்றம் அளிக்கும் மலை. "ஊராக் குதிரை" (புறநானூறு 168)

பிட்டன் [1] பிட்டன் மகன் பிட்டங்கொற்றன் [2] (அதியமான் நெடுமான்) அஞ்சி [3] அதியமான் மகன் பொகுட்டெழினி [4] ஆகியோர் இதனை ஆண்ட சங்ககால அரசர்கள்.

குதிரைமலை குதிரை போல் உருவம் கொண்டிருந்தது. [5] மேற்குத் தொடர்ச்சி மலையைக் கடந்து செல்ல இந்த மலைப்பகுதியில் கணவாய்(கவாஅன்) ஒன்று இருந்தது. இதனைக் குதிரைக் கவான் என வழங்கினர். இங்குள்ள சுனையில் மக்கள் நீராடி மகிழ்வது வழக்கம். [6] இங்கு வாழ்ந்த மக்கள் மழவர் குடியினர். இவர்கள் பழனி எனப்படும் பொதினி மலை அரசன் முருகனைத் தாக்கினர். ஆவியர் குடிமக்களின் அரசன் முருகன் இவர்களை விரட்டினான். [7]

குதிரைமலை கொங்குநாட்டில் உள்ள மலை.

கேரள மாநில ஏழங்குளம் கிராம பஞ்சாயத்து வார்டுகளில் ஒன்று குதிரைமுகம் என்னும் வார்டு.

அடிக்குறிப்பு

  1. வெல்போர் வானவன் மறவன் நசையின் வாழ்நர்க்கு நன்கலம் சுரக்கும் பொய்யா வாய்வாட் புனைகழல் பிட்டன் மைதவழ் உயர்சிமைக் குதிரைக் கவாஅன் - அகம் 143
  2. ஊராக் குதிரைக் கிழவ – புறம் 168
  3. நெடுநெறிக் குதிரைக் கூர்வேல் அஞ்சி – அகம் 372
  4. ஊராது ஏந்திய குதிரைக் கூர்வேல் கூவிளங் கண்ணி கொடும்பூண் எழினி - புறம் 158
  5. தோட்டி போல் உருவம் கொண்ட மலை தொட்டபெட்டா
  6. கோடு உயர் நெடு வரைக் கவாஅன், பகலே, பாடு இன் அருவி ஆடுதல் இனிதே; (குறுந்தொகை 353)
  7. உருவக் குதிரை மழவர் ஓட்டிய முருகன் நற்பேர் நெடுவேள் ஆவி – அகம் 1
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.