ஆவியர்

ஆவியர் என்போர் சங்ககாலக் குடிமக்களில் ஒருசாரார். இவர்கள் வாழ்ந்த ஊர் ஆவினன்குடி என வழங்கப்பட்டது. [1] ஆவின் நன்குடி என்பது குற்றமொன்றில்லாத ஆயர் நற்குடியைக் குறிக்கும்.[2] இவர்கள் பசுக்களைப் பாதுகாக்கும் இடையர் குடியினர் ஆவர். இவர்கள் மிகுந்த உடல் வலிமை வீரம் பகைவரை அச்சுறுத்தும் தோற்றம் ஆகியவற்றைக் கொண்டு விளங்கினராம்.

இவர்களது அரசன் ஆவிக்கோ, ஆவியர் பெருமகன் என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறான். முருகன் நற்பேர் ஆவி என்பவன் இவர்களில் குறிப்பிடத் தக்கவன். [3] வையாவி என்பது இம்மக்கள் வாழ்ந்த மற்றொருபகுதி. இப்பகுதி அரசன் வையாவிக்கோ என்றும், வையாவிக்கோமான் என்றும் குறிப்பிடப்படுகின்றனர். வையாவிக்கோப் பெரும்பேகன் [4] [5] வேளாவிக்கோமான் பதுமன் ஆகியோர் இப்பகுதியை ஆண்ட மன்னர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

பதிற்றுப்பத்து நான்காம் பத்தின் பாட்டுடைத் தலைவன் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல். இவனது தந்தை இரண்டாம் பத்தின் தலைவன் சேரலாதன். தாய் வேளாவிக்கோமான் பதுமன் என்பானின் தேவி. [6] பதிற்றுப்பத்து ஆறாம் பத்தின் தலைவன் ஆடுகோடுபாட்டுச் சேரலாதன். இவனது தந்தை குடக்கோ நெடுஞ்சேரலாதன். தாய் வேளாவிக் கோமான் என்பவனின் தேவி.[7]

தேவி என்னும் சொல்லைச் சங்கப்பாடல்களைத் தொகுத்தவர்கள் அரசன் மகள் இளவரசியைக் குறிக்கும் வகையில் இங்குப் பயன்படுத்தியுள்ளனர்.[8] இச்சொல்லை மனைவியைக் குறிக்கப் பயன்படுத்தும்போது பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு என்று விளங்கும் வகையில் குறிப்பிட்டுள்ளனர். கோப்பெருந்தேவி என்று பாண்டியன் மனைவியைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. [9]

அடிக்குறிப்பு

  1. திருமுருகாற்றுப்படை 176
  2. ஆ+இன+நன்+குடி
  3. அகநானூறு 1
  4. பெருங்குன்றூர் கிழார் – புறம் 147,
  5. அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன் பெருங்கல் நாடன் பேகன் - சிறுபாணாற்றுப்படை 85-86
  6. பதிற்றுப்பத்து பதிகம் 4
  7. பதிற்றுப்பத்து பதிகம் 6
  8. பதிற்றுப்பத்து பதிகம் 4
  9. வழக்குரை காதை
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.