பொகுட்டெழினி

எழினி என்னும் பெயர் கொண்ட சில சங்ககால அரசர்களில் ‘பொகுட்டெழினி’ என்பவன் அதியமானின் மகன். ஔவையார் இவனைச் சிறப்பித்துப் பாடிய மூன்று பாடல்கள் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளன.

குமணனுக்கு முன்னர் வாழ்ந்த கடையெழு வள்ளல்களைத் தொகுத்துக் கூறும் பெருஞ்சித்திரனார் சிறுபாணாற்றுப்படை தொகுப்பில் உள்ள ஔவைக்கு நெல்லிக்கனி ஈந்த அதிகன் என்னும் வள்ளலை விடுத்து, இந்த அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன் எயினியை எழுவருள் ஒருவராகப் பட்டியலிட்டுள்ளார். இவனைக் குதிரைமலைத் தலைவன் என்றும், கூவிளம் பூ மாலை அணிந்தவன் என்றும் குறிப்பிடுகிறார். [1]

பொகுட்டெழினி அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன். அவன் தும்பைப் பூ போன்ற வெண்ணிற மார்பை உடையவனாம். முழந்தாளுக்குக் கீழே தொங்கும் நீண்ட கையை உடையவனாம். அவனுக்கு இரண்டு பகையாம். ஒன்று மகளிர் பார்வையால் கட்டிப்போடுவது. மற்றொன்று அவன் செல்லும் ஊர்களில் அவன் யானைகள் தம் ஊர் நீர்நிலைகளைக் கலக்கிவிடுமே என்று ஊர்மக்கள் அவன் வரவை விரும்பாமை. [2]

நிறைநிலாப் போல அவன் தன் குடிமக்களுக்கு ஒளி (புகழ்) தருவானாம். மேட்டிலும் பள்ளத்திலும் வண்டி செல்லும்போது வண்டி முன்னும் தூக்காமல் இருக்க வண்டியின் பின்புறம் நடு பார்மரத்தில் கட்டப்பட்டிருக்கும் ‘சேம அச்சு’ போல் அவன் குடிமக்களுக்கு உதவுவானாம். [3]

வென்ற நாட்டில் கழுதை ஏர் பூட்டி எழினி உழுதுகொண்டிருந்தபோது ஔவையார் தன் விறலியர் சுற்றத்துடன் அவனைக் கண்டு தங்களது கிணைப்பறையை முழக்கிப் பாடியபோது, பாசி படிந்த அவர்களது ஆடைகளைக் களைந்து பட்டாடை உடுத்தச்செய்து, வானத்தில் மீன் பூத்திருப்பது போல் தன்னைச் சுற்றிலும் உண்கலன்களை வைத்து விருந்து படைத்தானாம். [4]

அடிக்குறிப்பு

  1. புறம் 158
  2. புறம் 96
  3. புறம் 102
  4. புறநானூறு 392
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.