குடுமியான்மலை குடைவரை

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குடுமியான்மலை குடுமிநாதர் கோவிலும், அதன் பின்புறம் உள்ள குடைவரையும், அதன் அருகிலுள்ள இசைக்கல்வெட்டும் மிகச்சிறப்பு வாய்ந்தவை. குடுமிநாதர் கோவில் சிற்பங்கள் மிகவும் அழகுற வடிக்கப்பட்டுள்ளன. மாலிக் காபூரின் படையெடுப்பில் சில சிற்பங்கள் சிதிலமடைந்துள்ளன.

குடுமியான்மலை, புதுக்கோட்டை மாவட்டத்தில், குளத்தூர் வட்டத்திலே உள்ளது. புதுக்கோட்டையிலிருந்து விராலி மலை வழியாக திருச்சிராப்பள்ளிக்குச் செல்லும் சாலையில் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இவ்வூர். கிழக்கே 10 கி.மீ தொலைவில் ஓவியக்கலைக்கு புகழ் வாய்ந்த சித்தன்னவாசலும், மேற்கே 25 கி.மீ தொல்வில் கலை மிக்க கொடும்பாளூர் உள்ளது. இக் குடுமியான்மலை தன் வரலாற்றில் வேறு பெயர்களும் கொண்டு இருந்தன. அவற்றுல் திருநிலக்குன்றம் (கி.பி. 8ஆம் நூற்றாண்டு) , திருநலக் குன்றம் (கி.பி. 8ஆம் நூ) , சிங்கா நல்லூர் (இரண்டாம் இராசராசன் காலம், 12 ஆம் நூற்றாண்டு) என்பன சில.

குடுமியான் மலையில் உள்ள இசைக்கல்வெட்டு கி.பி. 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பர் அறிஞர். திருமெய்யம், மலையடிபட்டி என்னும் ஊர்களிலும், இக்குடுமியான்மலையில் உள்ளதைப்போல் இசைக் கல்வெட்டுகள் உள்ளன. குடுமியான் மலையில் உள்ள இசைக்கல்வெட்டில் உள்ள இசை நுணக்கங்கள் முற்றுமாய் ஆய்வு செய்யப்படவில்லை. இவை தமிழிசையே என்பார் யாழ்நூல் என்னும் இசை நூல் எழுதிய விபுலானந்த அடிகள் . கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் எழுத்ததாகக் கருதப்படும் பரத முனிவரின் இசை நூலும், கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் ஆக்கப்பட்டதாகக் கருதப்படும் சங்கீத ரத்தினாகரத்திற்கும் இடைப்பட்ட காலத்திய இசைச் செய்தி என்பதால், இது முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

உசாத்துணை

  1. குடுமியான்மலை ஆசிரியர்- சொ.சாதலிங்கம், தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை. 1981. பக்.1-160.
  2. புதுகோட்டை மாவட்ட வரலாறு ஆசிரியர்- முனைவர்.ஜெ.இராஜா முகமது, வெளியீடு: இயக்குநர், அரசு அருங்காட்சியகம், எழும்பூர், சென்னை-600008.2004. பக்.206-213.
  3. Art of Pudukottai Author- Dr.J.Raja Mohamad,Publisher: District Collector, Pudukkottai and President Pudukkottai District Archives Committee, Pudukkottai. June 2003. Pg.53-58.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.